இளைஞர்மணி

விண்வெளி மற்றும் ராணுவத் தொழில்துறை... வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள்!

ந.முத்துமணி

புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அண்மைக்காலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் துறையாக விண்வெளி மற்றும் ராணுவத் தொழில்துறை உருவெடுத்துள்ளது.

ஏவுகலம் (ராக்கெட்), விண்கலங்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்து வருவதும், அதற்கு ஊடக வெளிச்சம் கிடைத்துள்ளதும், விண்வெளிசார்ந்த தகவல்களை இளைஞர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. மேலும் விண்வெளிப் பயணங்களும் இளைஞர்களின் கற்பனையை விண்வெளிக்குக் கொண்டு சென்றுள்ளன.

விண்வெளி மற்றும் ராணுவத் தொழில்களில் தன்னிறைவை நோக்கி பயணிக்க பெரும்பாலான நாடுகள் முயற்சிக்கத் தொடங்கிவிட்டன. 

அதனால் இத்துறைகளின் வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் விரிந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இத்துறைகளில் காணப்படும் புதிய போக்குகளைக் காணலாம்.

வர்த்தக விண்வெளி:

கரோனா பெருந்தொற்று காரணமாக, உலக அளவில் மக்கள் நடமாட்டம் சரிந்துள்ளது. இதனால் விமானங்களுக்கான தேவை குறைந்துள்ளது. ஆனால், கரோனா பெருந்தொற்று அடங்கிய பிறகு, 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு வர்த்தக விமானங்களின் தேவை வெகுவாக உயரும். அப்போது புதிய வேலைவாய்ப்புகளின் வாசலை இத்துறை திறந்துவைக்கும்.  

ராணுவத்தொழில்:

கரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியிருப்பதால், ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை எந்த நாடும் குறைக்கவில்லை. அதனால் 2021-ஆம் ஆண்டில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நிலையாக இருக்கும். 

கரோனா காரணமாக, ராணுவத்தளவாட ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ராணுவ தளவாடங்களின் உற்பத்தி விலையை அதிகப்படுத்தும்.  திட்டப்பணிகளைச் செயல்படுத்துவதும் தாமதமாகும். ஆனால், ராணுவத் தளவாடங்களுக்கான தேவை குறையாது என்பதால், வேலைவாய்ப்பு குறையாது. 

விண்வெளி மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிலில் புதிய உத்வேகத்தை தரவிருக்கும் சில தொழில்நுட்பங்களை காணலாம்.

எலெக்ட்ரிக் புரொபல்ஷன்:

ஏவுகலனை மேல்நோக்கிச் செலுத்தவும், விமானங்களை முன்னோக்கி மேலெழுப்பவும் தேவைப்படும் உந்துவிசையை (புரொபல்ஷன்) வழங்குவதற்கு எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தை பயன்படுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்தத் தொழில் நுட்பம் சுற்றுச்சூழலில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதோடு, விமானம் அல்லது ஏவுகலன்கள் எழுப்பும் ஒலியையும் குறைக்கும். மேலும் தயாரிப்புச் செலவையும் குறைக்கும். 

ஹைட்ரஜன் எரிபொருள்:

விமானங்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான எரிபொருள்களுக்குப் பதிலாக ஹைட்ரஜனைப் பயன்படுத்த முயற்சி நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஏராளமான விமான தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். விமானங்களில் எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தினால், அது எரிபொருளின் செயல்திறனை வெகுவாக கூட்டுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும். 

ஹைபர்சோனிக்ஸ்:

ஒலியின் வேகத்தை விஞ்சும் வேகத்தில் பறக்கும் விமானங்களை ஹைபர்சோனிக்ஸ் (உயர் அதிர்வெண் வானூர்தி) என்றழைக்கிறார்கள். இந்தவகை விமானங்களை வெள்ளோட்டம் பார்க்கும் பணி  இந்த  ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வழக்கமாக வர்த்தக விமானங்கள் பூமியில் இருந்து வானத்தில் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடியவையாகும். ஆனால், ஹைபர்சோனிக்ஸ் விமானங்கள், நிலப்பகுதியில் இருந்து 90 ஆயிரம் அடி உயரத்தில் வானில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கும். இந்தவகை விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அது பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

வேலைவாய்ப்புகள்:

விண்வெளி மற்றும் ராணுவத் தொழில் துறையில்  ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆர்வமும், ஆற்றலும் வாய்ந்த இளைஞர்களுக்காக இத்துறை காத்திருக்கிறது. 

பொறியாளர்கள்:

ஏவுகலம், விண்கலம், ஏவுகணைகள், விண் ஓடங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, வடிவமைத்து, அதை மேம்படுத்த வேண்டியது பொறியாளர்களின் பணியாகும். 

வெப்பவியல் பொறியாளர்கள்:

வெப்ப ஆற்றலை வேதி ஆற்றல், இயந்திர ஆற்றல், மின்சார ஆற்றலாக மாற்றுவதற்கான இயந்திரங்களை வடிவமைத்து, மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். 

உற்பத்தி பொறியாளர்கள்/மேலாளர்கள்:

வெவ்வேறு தயாரிப்பு பொருட்களைச் சோதித்து, தரக்கட்டுப்பாட்டை ஆய்ந்து, விலை நிர்ணயித்து, சந்தைப்படுத்தும் பணியாகும். 

கட்டமைப்பு பொறியாளர்:

விமானங்கள், ஏவுகலன்கள், விண்கலங்களின் கட்டமைப்பை வடிவமைத்து, கட்டமைத்து, சோதித்தும் பணியாகும். 

கேட் தொழில்நுட்பத் திறனுடையவர்கள்:

கேட் (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்) மென்பொருளைப் பயன்படுத்தி, உற்பத்திப் பொருள் மற்றும் உதிரிபாகங்களை பொறியியல் வரைபடங்களாக்கும்  பணி இவர்களுடையது.

தொழில்நுட்ப திறனுடையவர்கள்:

பொருள் உற்பத்தி உற்பத்தி, மேம்பாடு மற்றும் சேவையில் பொறியாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது தான் தொழில்நுட்ப திறனுடையவர்களின்(டெக்னீஷியன்) பணியாகும். 

திட்ட மேலாண்மை:

விண்வெளி மற்றும் ராணுவத் தொழிலில் திட்டமேலாண்மைப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திட்டக்கட்டுப்பாட்டாளர்கள், திட்ட உதவி ஊழியர்கள், தொழில்நுட்ப வழிகாட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு திட்டமேலாண்மையில் முக்கிய பங்கும், தேவையும் அதிகரித்துள்ளன. பொறியியல், மேலாண்மையில் பட்டம் பெற்றவர்கள் திட்டமேலாண்மைப் பிரிவில் வேலைக்கு சேர அதிக வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம் சாரா வேலைகள்:

தொழில்நுட்பம் தவிர, நிதி, விற்பனை, கொள்முதல், எழுத்தர், மனிதவளம், உள்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்பம்சாரா வேலைவாய்ப்பு
களும் அதிகம் உள்ளன.  

கல்வித்தகுதி:

தொழில்நுட்பர்கள் பணிக்கு பட்டயப் படிப்பு(டிப்ளமோ) போதுமானது. பிற பணிகளுக்கு இயந்திரவியல், மின்சாரம், மின்னணு, கருவியியல், தகவல்தொடர்பு, விமானவியல், கணினி அறிவியல், தொழில் உற்பத்தி பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு அவசியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT