இளைஞர்மணி

வங்கி வாடிக்கையாளர்களுக்கு  உதவும் ரோபோ!

ந. ஜீவா

மனிதர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் செய்வதற்கு இப்போது ரோபோக்கள் வந்துவிட்டன. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள கேஎல்இ டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ள ஒரு ரோபோ மிகவும் வித்தியாசமானது. வங்கிகளுக்கு வரக் கூடிய வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யக் கூடியது இந்த ரோபோ. "மாயா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோவை கேஎல்இ டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டியின் "ஆட்டோமேஷன் அண்ட் ரோபோட்டிக்ஸ்' துறையைச் சேர்ந்த ப்ருத்வி தேஷ்பாண்டே, அப்ஹிஜித் சம்பத்கிருஷ்ணா, ஆல்வின் ஆகிய மாணவர்கள் அடங்கிய குழு உருவாக்கியிருக்கிறது. இத்துறையில் பணிபுரியும் பேராசிரியர்களான ஜி.கே.அஷ்வின், ஸ்ரீதர் தோதாமணி ஆகியோர் இந்தக் குழுவினருக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த வங்கி ஒன்று, தனது வாடிக்கையாளர்களின் சேவைக்காக ரோபோ ஒன்றை உருவாக்க நினைத்திருக்கிறது. அதனுடைய நிதி உதவியின் கீழ் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்ன என்ன சேவைகள் தேவை? அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க ஒரு ரோபோ எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்? என்பன போன்ற வங்கிப் பணி தொடர்பான வேலைகளைப் பட்டியலிட்டு அந்த வங்கி மாணவர்களிடம் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபாவை உருவாக்க ரூ.5 லட்சம் செலவாகியிருக்கிறது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். நிறையப் படித்தவர்களும், படிக்காதவர்களும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கேள்விகள், சந்தேகங்கள் ஏற்படக் கூடும். வங்கிக்குள் ஒரு வாடிக்கையாளர் நுழைந்துவிட்டால், அவர் எதற்காக வங்கிக்கு வந்தாரோ அந்தப் பணிகளுக்கான வழிகாட்டியாக இந்த "மாயா' செயல்படுகிறது.

வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று வருகிற ஒருவருக்கு எப்படி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்? என்பதைச் சொல்கிறது இந்த ரோபோ. வங்கியில் தனது கணக்கில் உள்ள பணத்தை இன்னொருவருக்கு மாற்றித் தர வேண்டும் என்று வாடிக்கையாளர் கேட்டால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்குகிறது. ஏடிஎம் கார்டுக்காக பின் நம்பரை மாற்ற வேண்டும் என்று ஒரு வாடிக்கையாளர் வந்தால் அவருக்கும் வழிகாட்டுகிறது.

""எனது வங்கிக் கணக்கில் இவ்வளவு ரூபாய் இருக்கிறது. இதற்கு என்ன வட்டி கிடைக்கும்?'' என்ற கேள்விக்கான பதிலைச் சொல்வதோடு, அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? சேமிப்புக் கணக்கில் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

என்பன போன்ற தகவல்களையும் சொல்லிவிடும் திறன் படைத்ததாக இந்த ரோபோ இருக்கிறது.

வங்கியில் என்ன மாதிரியான கடன் வசதிகள் உள்ளன? யாரெல்லாம் கடன் வாங்க முடியும்? என்பன போன்ற தகவல்களைத் தரும்விதத்தில் இந்த "மாயா' உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, எந்த பணிக்காக வாடிக்கையாளர் வந்திருக்கிறாரோ, அந்தப் பணியை நடத்தித் தரும் பிரிவுக்கு அவர் செல்ல உதவுகிறது. உதாரணமாக புதிய அக்கவுண்ட் தொடங்க கவுண்ட்டர் எண் 1- க்குச் செல்லுங்கள் என்று கூறும் திறன் உள்ளதாக இந்த மாயா உள்ளது.

இதில் என்ன வியப்பு என்றால், இந்த ரோபோ ஆங்கிலத்தில் மட்டும் பேசும் திறன் படைத்தது என்று நினைத்துவிடாதீர்கள். வாடிக்கையாளர்கள் பேசக் கூடிய நம் மாநில மொழிகளிலேயே பேசும்படி இந்த ரோபோவை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு வாடிக்கையாளருக்கு இந்த ரோபோ வழிகாட்டிய பிறகு அவரை இது மறந்துவிடுவதில்லை. பிற வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டிய பிறகு, பழைய வாடிக்கையாளர் மீண்டும் வந்தால் அவருடைய முகத்தை அடையாளம் கண்டு, அவர் தொடர்பான வங்கிப் பணிகளையும் நினைவு வைத்துக் கொள்ளும்விதமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கேஎல்இ டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டியின் "ஆட்டோமேஷன் அண்ட் ரோபோட்டிக்ஸ்' துறையின் தலைவரான அருண் கிரியபுர் இந்த ரோபோவைப் பற்றி கூறுகையில்,"" இந்த ரோபோ நிறைவான ஒன்றல்ல; இதை மேலும் டெவலப் செய்ய வேண்டியிருக்கிறது'' என்கிறார்.

"மாயா' வின் எடை 15 கிலோ. இந்த ரோபோவை ஒரு தடவை மின்னேற்றம் செய்துவிட்டால், குறைந்தது 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் வரை இயங்கும். வங்கியின் வேலை நேரம் 10 மணி நேரத்துக்கும் குறைவாக இருப்பதால், இந்த ரோபோவை ஒருநாளைக்கு ஒரு முறை மின்னேற்றம் செய்தால் போதுமானது.

ஆனால் ரோபோவை மின்னேற்றம் செய்ய மனிதர்கள் யாரும் தேவையில்லை. வங்கிப் பணி முடிந்ததும் வங்கி வளாகத்தில் உள்ள மின்னேற்றம் செய்யும் இடத்துக்கு மாயா தானாகவே சென்று, தானாகவே தன்னை மின்னேற்றம் செய்து கொள்ளும், மனிதர்கள் சாப்பிடச் செல்வதைப் போல.

கேஎல்இ டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டியின் துணைவேந்தரான அசோக் ஷேத்தார் இந்த ரோபோ உருவாக்கத்தைப் பற்றிக் கூறுகையில், ""வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் இந்த ரோபோவை முதலில் நடைமுறையில் களத்தில் இறக்கிவிடத் திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ரோபோ தொடர்பாக வாடிக்கையாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் அடிப்படையில் - அவர்கள் ஏதேனும் குறை கூறியிருந்தால் அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு - ரோபோவை மேம்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோன்று வேறு ஏதாவது புதிய சேவைகளை இந்த ரோபோ செய்ய வேண்டும் என்று வங்கிகள் கருதுமானால், அந்தச் சேவைகளைச் செய்யும்விதமாகவும் இந்த ரோபோவை மாற்றியமைக்க இருக்கிறோம். வங்கிப் பணிகள் என்றில்லை. பிற பணிகளைச் செய்யும் தொழிற்துறையினர் அவர்களுடைய பணிகளின் தேவைக்கேற்ப ரோபோக்களை உருவாக்கித் தரக் கூறினால், அதைச் செய்து தரவும் தயாராக இருக்கிறோம்'' என்கிறார்.

வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு எரிந்துவிழாமல் இந்த மாயோ ரோபோ பதில் சொல்லும் என்பது மட்டும் உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT