இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 38: ஆவதறியும் திறன் - 3

சுப. உதயகுமாரன்

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ சொன்னார்: "எதிர்காலத்துக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. பலவீனமானவர்களுக்கு அது அடைய முடியாதது. பயந்தவர்களுக்கு அது அறியமுடியாதது. பெரும் துணிச்சல்காரர்களுக்கோ அஃதோர் அற்புத வாய்ப்பு.

உண்மை, உடலுழைப்பு, எளிமை, இயற்கையைப் போற்றுதல், தொழிற்கல்வி, தற்சார்பு, ஆத்ம பரிசோதனை, கிராம நலன், எளியோர் நலம், சமத்துவம்,

தன்னாட்சி, மாந்தநேயம், சத்தியாகிரகம், சர்வோதயம், அகிம்சை, அறப்போர், விடுதலை என பரந்து விரிந்து வியாபிக்கும் மகாத்மா காந்தியின் ஆகப்பெரும் தனிச்சிறப்பு என்பது வருங்காலத்தைக் கருத்திற் கொண்டு வகுக்கும் செயல்பாடுகள்தாம். ஆக்கத்திறனோடு கூடிய ஆவதறியும் திறனுக்கு அருமையானதோர் எடுத்துக்காட்டு அவர்.

விடுதலைக்கு முன்பு இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசர்களும், சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு கொண்டிருந்தனர். அவர்தம் நாடுகளின் பரப்பளவையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் கணக்கிற்கொண்டு, பிரிட்டிஷ்காரர்கள் 88 அரசர்களுக்கு மட்டும் 11 அல்லது அதற்கு அதிகமான குண்டுகள் முழங்க வரவேற்பளித்து வந்தனர்.

இந்த ஆட்சியாளர்களுக்கு இடையேயான சிக்கலான உறவுகள், இவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசுக்குமிடையேயான தெளிவற்ற தொடர்புகள், தலைவிரித்தாடியமதவாதம், எங்கும் பரவியிருந்த (இந்து-முசுலீம்) இருதேசக் கொள்கை, தாழ்த்தப்பட்டோருக்கான சமூகநீதி கோரிக்கைகள், பிராந்திய அரசியல் குழுமங்களின் கனவுகள் என மிகவும் குழப்பமான ஒரு சூழலில், வருங்கால சுதந்திர இந்தியாவை கற்பனை செய்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

ஆனாலும் முகிழ்த்துவரும் இந்தப் புதிய நாட்டை மனக்கண்ணால் பார்க்க, அதனை நவீன உலகிற்குள் கொண்டு போய் சேர்க்க பெரும் தேவை இருந்தது.

பற்பல அடையாளங்களுக்குள் சிக்குண்டு கிடந்த,எழுதப் படிக்கவே தெரிந்திராத, நவீன ஐரோப்பியஏற்பாடான தேச-அரசு முறையைப் புரிந்திராத இந்திய மக்களுக்கு புதிய ஆட்சி அமைப்பை விளக்க வேண்டியிருந்தது.

படைப்புத்திறனும், கருத்துப்பரிமாற்றத் திறனும் நிரம்பப் பெற்றிருந்த மகாத்மா காந்தி "இராமராச்சியம்'அல்லது "தர்ம ராச்சியம்' என்று மக்களிடம் பேசத் தொடங்கினார். அது மக்கள் கவனத்தை எளிதாகக் கவர்ந்தது. பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமான, அவர்கள் பக்தியோடு போற்றி நின்ற "இராமாயணம்' எனும் இதிகாசக் கதையை கையிலெடுத்த காந்தி, அதை தன்னாட்சி பற்றி சொல்லிக் கொடுக்கும் தன்னிகரற்ற பாடமாக மாற்றியமைத்தார்.

தன்னுடையக் கனவரசை காந்தி இப்படிவிவரித்தார்: "இராமச்சந்திரன் எல்லா உயிர்களையும் தனது அங்கமெனக் கருதியதால், இராமராச்சியத்தில் ஒரு நாய் கூட துன்புறுத்தப்படாது. அந்த அரசில்ஒழுக்கங் கெட்ட செயல்களோ, பித்துக்குளித்தனங்களோ,தவறுகளோ இடம் பெறாது. மக்களின் அரசு அத்தனை உண்மையோடு நடைபெறும்'.

காந்தியின் ஆவதறியும் திறன் ஏழை எளியவர்களை, சக்தியற்றவர்களைக் குறித்தே சிந்தித்தது. 1925-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண்கள் கூட்டம் ஒன்றில் பேசிய காந்தி, ""நான் இராமராச்சியத்தை நிறுவ விரும்புகிறேன். ஆண்களிடம் நான் இது குறித்துப் பேசுவதில்லை. காரணம், இதை நிறுவிட பெண்கள் உறுதிபூண்டால், ஆண்கள் தாமாகவே முன்வந்து உதவுவார்கள். எனவே பெண்களிடம் பேசும்போதெல்லாம், நான் இராமராச்சியம் பற்றித்தான் பேசுகிறேன்'' என்று குறிப்பிட்டார். சீதாப்பிராட்டி வாழ்ந்த காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் இல்லை என்று சுட்டிக்காட்டிய காந்தி, அந்த காலத்தில் அனைவருமே ராட்டைசுற்றியதாகவும், கதர் ஆடைகளையே அணிந்ததாகவும்சொன்னார்.

1926-1927 காலகட்டத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய காந்தி, ""பழைய சட்டங்கள், நியமங்கள் அனைத்தும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை. எனவே பெண்களின் அனுபவங்கள் அவற்றில் இடம் பெறவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையே, யாரையும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ கருதக் கூடாது'' என்றார்.

இராமராச்சியம் நிறுவுவதற்கான பெரும் தடையாக சாதீயத்தைக் கருதினார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் போராடியபோது, இந்தியர்களுக்காக தனிப் பள்ளிகள் நிறுவுவது தீண்டாமையை நீட்டிக்கும் என்பதால் அதை உறுதிபட எதிர்த்த காந்தி, இந்தியா வந்து இங்கிருந்த இழிநிலையைப் பார்த்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனியே பள்ளிகள், கோவில்கள், கிணறுகள் அமைப்பதை ஏற்றுக் கொண்டார். இவை அனைத்துமே அனைவருக்குமானவையாக இருக்கட்டும், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே முன்னுரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

""இராமராச்சியத்தின் சாவி, நகரங்களில் இல்லை, கிராமங்களில்தான் உள்ளது'' என்று சொன்ன அவர், ""ஒருசிலர் மட்டும் செல்வத்தில் உருண்டு புரண்டு, பெரும்பான்மையோர் உணவே இல்லாமல் தவிக்கும் நிலையில் இராமராச்சியம் வரவே வராது'' என்று அறிவித்தார். ஏழ்மையற்ற, வறுமையற்ற, மேலோர்-கீழோர் எனும் பேதமற்ற நிலையே இராமராச்சியம் என்று கருதினார் காந்தி. அரசியல் சுதந்திரமும், பொருளாதாரத் தற்சார்பும், சமூக தன்னம்பிக்கையும், மக்களின் பங்கேற்பை உறுதிசெய்யும்.பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் போன்றோரின் நலன்களைப் பாதுகாக்கும் உள்நாட்டு சனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியா குறித்து கனவு கண்டார் காந்தி இந்தியப் பாரம்பரியத்தைப் பேண வேண்டும் என்று காந்தி நினைத்தாலும், அதன் தீய அம்சங்களைக் கடுமையாக எதிர்த்தார். அவரது எதிர்காலவியல் என்பது தனது எண்ணங்களை மேலிருந்துத் திணிக்கும் கொடுங்கோல் செயலாக அன்றி, மக்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் சனநாயகத் தன்மை உடையதாய் இருந்தது.

வருங்காலத்தை விரும்புவோர் வாழ்க்கையைப் போற்றியாக வேண்டும். சாவையும், அழிவையும் எதிர்த்தாக வேண்டும். பெரும்பான்மையானோரின் பெரும்பாலான நலன்களைப் பாதுகாப்பது என்றில்லாமல், அனைவரின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து, கண்ணியத்தைப் பெருக்கி, அவர்கள் தங்களின் மாந்தநேயத்தை மீட்டெடுக்கவும், சமத்துவத்தைக் கோரவும், அநியாயமான சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டோடு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல், அறவழியில் நேரடியாகப் போராடவும் மக்களைத் தயார்படுத்தினார் காந்தி.

""இராமராச்சியம் என்பது மிகவும் வசதியான, ஆழமான சொல், இதன் அர்த்தத்தை லட்சக்கணக்கான மக்களுக்கு வேறு எந்தச் சொல்லாலும் உணர்த்த முடியாது'' என்றுரைத்த காந்தி, பெரும்பான்மை முசுலீம் மக்களிடையே பேசும்போது, ""இராமராச்சியத்தை "குதாய் ராச்சியம்' என்று குறிப்பிடுகிறேன்; கிறித்தவர்களிடையே பேசும்போது "கிங்டம் ஆஃப் காட்' என்றழைக்கிறேன்'' என்றார். ""இராமராச்சியம் என்பதன் மூலம், தான் இந்துக்களின் ஆட்சியைக் குறிப்பிடவில்லை; இராம் என்பது குதா, காட் என்பவற்றின் இன்னொரு பெயர்தான்'' என்றார் காந்தி. அவருடைய அரசியல் உண்மைத்தன்மையும், தனிப்பட்ட நேர்மையும் மதவெறியில் திளைத்தவர்களுக்குப் புரியவில்லை.

வருங்காலம் பற்றி கனவு கண்டுகொண்டிருந்த காந்தி நண்பர்களிடம் சொன்னார்: ""உங்கள் வழியை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தங்கி விடுவது நல்லது. அதன் அர்த்தம் தனது வருங்காலக் கனவுகளை கைவிட்டுவிடுவதல்ல; மாறாக, தைரியமாக ஓர் ஆத்மப் பரிசோதனை செய்துகொள்வது, அண்மை நிகழ்வுகளுக்காக பிறர் மேல் பழி சுமத்துவதைவிட தானே பொறுப்பேற்றுக் கொள்வது; எல்லாவற்றுக்கும் மேலாக, தான் விரும்பும் வருங்காலத்தைத் தானே வாழ்ந்துகாட்டுவது!''

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT