இளைஞர்மணி

கல்வி தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்!

ந.முத்துமணி

கல்வியில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வேகமாக வளர்ந்து வருகிறது கல்வி தொழில்நுட்பத்துறை. கல்வியையும் தொழில் நுட்பத்தையும் இணைக்கும் பாலமே கல்வி தொழில்நுட்பம்.  இந்தத் துறையின் வளர்ச்சி புதிய புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

2020-ஆம் ஆண்டு பெருந்தொற்று பரவிய பிறகு,  கடந்த ஓராண்டில் மட்டும் கல்வி தொழில்நுட்பத்துறை 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. 

அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வி தொழில்நுட்பத் தொழிலின் வளர்ச்சி நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு வளரும். 

இந்தியாவில் ஆரம்பக்கட்டத்தில் இருந்து வரும் கல்வி தொழில்நுட்பத்துறை, அடுத்த சில ஆண்டுகளில் முக்கியத்துறையாக, தொழிலாக உருவெடுப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. 

2019-ஆம் ஆண்டில் கல்வி தொழில்நுட்ப  பயனாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், 2020-இல் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது தெரிகிறது. 2019-இல் 4.5 கோடியாக இருந்த கல்வி தொழில்நுட்ப பயனாளர்களின் எண்ணிக்கை, 2020-இல் 9 கோடியாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக, மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் கல்வி தொழில்நுட்பம் ஆழமாக வேர் பரப்ப தொடங்கியுள்ளது. கல்வி தொழில்நுட்பத்தின் வழியே கல்வி பயிலும் சராசரி நேரம் 50 சதம் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வழக்கமாக, சராசரியாக 60 நிமிடங்கள் மட்டுமே கல்வி தொழில்நுட்பம் மூலம் கல்வி பயின்ற மாணவர்கள் தற்போது சராசரியாக 90 நிமிடங்களை செலவழிப்பதாகவும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. கல்வி தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால், கட்டணம் செலுத்தி கல்வி தொழில்நுட்பத்தின் வழி கல்விபயில்வோரின் எண்ணிக்கை 83 சதமாக உயர்ந்துள்ளதுதான்.

இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் கல்வி தொழில்நுட்பத்துறை 3 மடங்கு அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் கல்வி தொழில்நுட்பத்தின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலராக(தோராயமாக ரூ.7.32 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    அதனால் இத்தொழில் அதிக அளவிலான முதலீடுகள் குவிந்து வருகின்றன. இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு வித்திட்டுள்ளது.  

கல்வி தொழில்நுட்பத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள், பலவகையான பணித்தன்மைகளில் காணக்கிடைக்கின்றன. அவற்றைக் காண்போம்...

உள்ளடக்க உருவாக்குநர்படிப்புகளுக்கு தகுந்தவாறு பாடத்திட்டத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் உருவாக்கி, தரமுயர்த்துவதே உள்ளடக்க உருவாக்குநரின்(கன்டன்ட் கிரியேட்டர்ஸ்)  முக்கிய பணியாகும். 

இந்த பணியில் சேருவதற்கு தகுதியான கல்விப் பின்புலம், மாறிவரும் பாடத்திட்டங்கள் குறித்த அறிவு  இருக்க வேண்டியது முக்கியமாகும். பாடத்திட்ட வடிவமைப்பாளர்களும், உள்ளடக்க உருவாக்குநர்களும் பாடநிபுணர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தேவையான சரியான கற்றல் கருவிகளைக் கட்டமைக்க வேண்டும். இதில், பாடங்களை விளக்குவதற்கு தேவையான ஒலி/காணொலி உள்ளடக்கம், விநாடி-வினா, மின்-நூல்கள், படங்கள், பல்லூடகக் கதைகள் உள்ளிட்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாணவர்களின் கல்வித்திறத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கையாள்வதே உள்ளடக்க உருவாக்குநரின் முக்கியமான பணியாகும்.

தொழில்நுட்பக் கட்டமைப்பாளர் இணையவழி (ஆன்லைன்) கற்றல் சூழலை விரிவாக்கி, மேம்படுத்துவதற்கான வேலைகளை கல்வி தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. கல்வி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள்(பயனாளர்) மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளதால், கற்றலுக்கான இணையவழிதளத்தின் கட்டமைப்பு வலுவானதாகவும், 24 மணி நேரமும் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.  அதற்காக, பரந்து விரிந்த இணையவழி தளத்தை உருவாக்குவதற்கான தேவை பெருகி வருகிறது. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு தொழில்நுட்ப கட்டமைப்பாளர் தேவைப்படுகிறார்கள். இந்த பணிக்கு 10 ஆண்டுகால அனுபவம் உள்ள மூத்த மென்பொருள் பொறியியல் கற்ற வல்லுநர்களை பலரும் விரும்புகிறார்கள்.

செயலி மேம்பாட்டாளர்

கற்றலுக்கு அதிகம்பேர் விரும்பும் தளமாக திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்) மாறிவிட்டதால், கல்வி தொழில்நுட்பத்தளத்திற்கான செயலியை வடிவமைத்து, உருவாக்கும் செயலி மேம்பாட்டாளர்களுக்கான  தேவை பெருகியுள்ளது.  மேலும் கற்றலுக்கான விளையாட்டியலை உருவாக்குவதும் செயலியின் முக்கிய நோக்கமாகும். திறன்பேசி இருந்தால் போதும் எங்கிருந்தும் செயலி வழி கற்றல் எளிதாகும் என்பதால், இதற்கான எதிர்காலம் ஒளிமயமாக இருக்கிறது.

கல்வி ஆலோசகர்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பாலமாக விளங்குவது தான் கல்வி ஆலோசகர் (அகடமிக் கன்சல்டன்ட்) பணி. மாணவர்களின் தேவை, அவர்களின் கற்றல்முறை, கற்றல்மொழி ஆர்வம், கற்றல் திறன் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு, அவருக்கு ஏற்ற ஆசிரியர்களைத் தேடித் தருவது தான் கல்வி ஆலோசகரின் முக்கிய கடமையாகும். இந்தப் பணிக்கு, கொஞ்சம் கல்வி சார்ந்த தகவல்களும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் திறனும் தேவைப்படுகிறது.

பாடநெறி மேலாளர்

டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பை ஆசிரியர்கள் எளிதாக கையாளுவதற்கு  உதவியாக இருப்பதே பாடநெறிமேலாளர் (கோர்ஸ் மேனேஜர்)  பணியாகும். இணைய வழி கல்வி தொழில்நுட்பங்களை அறியாமல் இருக்கும் ஆசிரியர்கள் கூட, பாடநெறி மேலாளர்களின் உதவியால் அவற்றை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்பங்களைப் பற்றி கவலைப்படாமல் கற்பித்தலில் மட்டுமே ஆசிரியர்களின் கவனத்தை குவிக்க வைத்து, மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவது பாடநெறி மேலாளர்களின் பணியாகும்.

எதிர்காலம்

 இணையவழி தளத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் கற்றலுக்கான தனிப்பட்ட அனுபவங்கள் நேரடி வகுப்பில் கிடைக்காது. "எந்நேரமும் எங்கும்' எளிதில் அணுகக் கூடியதாகவும், தனிப்பட்ட கற்கும் வேகத்திற்கு தகுந்தபடி கற்றுக் கொள்ள முடியும் என்பதாலும், கல்வி தொழில்நுட்பத்தின் வழியாகக்  கற்கும்முறை வளர்ந்து கொண்டே இருக்கும். இதுபோன்ற சாதகமான அம்சங்கள் நேரடி வகுப்புகளில் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

எனினும், கல்வி தொழில்நுட்பமுறையில் சவால்கள் இல்லாமல் இல்லை. நகர்ப்புறங்களில் வேகமாக பரவியுள்ள கல்வி தொழில்நுட்பம் கிராமப்புறங்களில் ஊடுருவ நாளாகும் என்பதே அந்த சவால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT