இளைஞர்மணி

காற்றுக்கும் உண்டு வேலி!

8th Jun 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

கரோனா தொற்று காற்றிலே கலந்த பிறகு, சுற்றுப்புறத்திலுள்ள காற்றை நாம் அப்படியே சுவாசிப்பதில்லை. முகக்கவசம் அணிந்து கொண்டுதான் சுவாசிக்கிறோம். முகக்கவசம் கரோனா தீநுண்மிக்கு வேலி ஆகி விட்டது. வெளியிலுள்ள காற்றிலுள்ள தூசி, புகை, கிருமிகள் இவற்றை வடிகட்டி, தூய்மையான காற்றாக மாற்றும் கருவி மாசுள்ள காற்றுக்கு வேலி ஆகிவிடுகிறது.

தில்லியில் வாழும் 19 வயது இளைஞர் கிரிஷ் சாவ்லா மாசுள்ள காற்றைத் தூய்மையான காற்றாக மாற்றும் கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அது மாசுள்ள காற்றுக்கான வேலி ஆகிவிட்டது.

தில்லியில் காற்றில் மாசு அதிகமிருப்பதால், கரோனா தொற்றுக்கு முன்பாகவே அங்குள்ள மக்கள் முகக்கவசத்தை அணிந்து கொண்டு நடமாட வேண்டியிருந்தது.

ADVERTISEMENT

அதிலும் குளிர்காலத்தில் - தீபாவளி சமயத்தில் - காற்று மாசு அங்கே அதிகரித்துவிடுவதால் மூச்சுவிடவே மக்கள் சிரமப்பட்டனர்.

14 வயதுச் சிறுவனாக கிரிஷ் சாவ்லா இருந்தபோது, மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் காற்றைத் தூய்மையாக்கும் கருவியை அவருடைய பெற்றோர் வீட்டில் வாங்கி வைத்திருந்தனர். அப்போது எந்தக் கருவி கையில் கிடைத்தாலும், அதைக் கழற்றிப் பார்த்து, அதனுள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவார். ஒருநாள் அவர் காற்றைத் தூய்மையாக்கும் கருவியைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கருவிக்குள் என்னென்னவோ இருக்கும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் பிரித்துப் பார்த்ததும் ஏமாற்றமாகிவிட்டது. காற்றைத் தூய்மையாக்கும் கருவியின் உள்ளே ஒரு மின்விசிறியும், வடிகட்டியும் மட்டுமே இருந்திருக்கிறது.

""ஒரு பெரிய பிளாஸ்டிக் பெட்டியில் ஒரு மின்விசிறி, ஒரு வடிகட்டி மட்டும்தான் இருந்தது. அந்த கருவியின் விலை என்ன என்று என் அப்பாவிடம் கேட்டேன். ரூ.35 ஆயிரம் என்று சொன்னார். அதிர்ச்சியடைந்துவிட்டேன். இவ்வளவு விலை கொடுத்து எல்லாரும் எப்படி இந்தக் கருவியை வாங்க முடியும்? நுரையீரல் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ள ஒருவரின் வீட்டில் இதுபோன்று நிறைய கருவிகள் தேவைப்படுமே? இவ்வளவு விலை கொடுத்து அவர்களால் எப்படி வாங்க முடியும்? என்று அந்த வயதிலேயே யோசித்தேன்'' என்கிறார் கிரிஷ் சாவ்லா.

அதற்குப் பிறகு "நாமே ஏன் குறைந்த விலையுள்ள காற்றைத் தூய்மையாக்கும் கருவியை உருவாக்கக் கூடாது?' என்று அவர் நினைத்தார். கடுமையாக முயற்சி செய்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 318 விதமான காற்றைத் தூய்மையாக்கும் கருவியை அவர் தயாரித்தார். பல சோதனைகளைச் செய்து பார்த்தார். கடைசியில் 2018 -இல் அவர் நினைத்த மாதிரி விலை குறைவான, அதிகத் திறனுள்ள காற்றைத் தூய்மையாக்கும் "பிரீத்திஃபை' என்ற கருவியை உருவாக்கினார்.

தில்லியில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டேன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் இப்போது அவர் சேர்ந்திருக்கிறார்.

""சந்தையில் கிடைக்கும் காற்றைத் தூய்மையாக்கும் கருவியின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்று பார்த்தேன். அவற்றில் ஆடம்பரத்துக்காக தேவையில்லாத பலவற்றை அதில் இணைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். தேவையில்லாமல் எல்இடி பேனல், கவர்ச்சிகரமான டிஸ்பிளே என வெற்று ஆடம்பரம் செய்திருப்பார்கள். காற்று எந்த அளவுக்கு ஓர் அறையில் தூய்மையாக உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கும் லேசர் மானிட்டரையும் அதில் இணைத்திருப்பார்கள். இதனால் எல்லாம் அவர்கள் தயாரித்திருக்கும் காற்றைத் தூய்மையாக்கும் கருவியின் விலை அதிகமாகிவிடுகிறது.

ஆனால் ஒரு காற்றைத் தூய்மையாக்கும் கருவியின் இதயம், நுரையீரல் போன்ற மிகவும் தேவைப்படும் பகுதிகள், அதனுள் இருக்கும் மின்விசிறியும், காற்று வடிகட்டியும் மட்டும்தான். நான் உருவாக்கியுள்ள கருவியில் அவை மட்டும்தான் உள்ளன. காற்றிலுள்ள மாசுகளை அதிகத் திறனுடன் வடிகட்டும் காற்று வடிகட்டியை அதில் பொருத்தி இருக்கிறேன். அது காற்றில் கலந்துள்ள 0.3 மைக்ரான் அளவுள்ள மிகக் சிறிய பொருளையும் கூட வடிகட்டிவிடும். ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரை விட ஆயிரம் மடங்கு சிறியது. நான் தயாரித்துள்ள காற்றைத் தூய்மையாக்கும் கருவியைச் சோதனை செய்து பார்த்ததில், அது காற்றில் கலந்துள்ள 99.97 சதவீதம் மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, 0.3 மைக்ரான் அளவுள்ள பொருள்களை வடிகட்டிவிடுவதைத் தெரிந்து கொண்டேன்'' என்கிறார் கிரிஷ் சாவ்லா.

இதற்கு கிரிஷ் சாவ்லா பயன்படுத்திய தொழில்நுட்பம் ரிவர்ஸ் ஏர் தொழில்நுட்பம்.

""ஏற்கெனவே உள்ள காற்றைத் தூய்மையாக்கும் கருவிகளில், வெளியிலுள்ள காற்று முதலில் காற்றை வடிகட்டும் பகுதிக்குள் நுழையும். அதன் பிறகு, வடிகட்டப்பட்ட தூய்மையான காற்று, கருவியின் இதர பகுதியின் வழியாக வெளியேறும். இந்த முறையில் வடிகட்டியால் தூய்மையாக்கப்பட் ட காற்று, கருவியின் இதர பகுதியில் உள்ள தூய்மையாக்கப்படாத காற்றுடன் கலந்து வெளியேறுவதால், வெளிவரும் காற்றில் மாசு கலந்துவிடுகிறது.

ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கருவிக்குள் வெளியிலுள்ள காற்று கருவியின் இதர பகுதிக்குள்தான் முதலில் நுழையும். அதன் பிறகு வடிகட்டிக்குள் நுழைந்து தூய்மையாக்கப்பட்டு வெளியேறும். இதனால் மிகத் தூய்மையான காற்று கிடைக்கிறது'' என்கிறார் கிரிஷ் சாவ்லா.

கிரிஷ் சாவ்லா தயாரித்துள்ள காற்றைத் தூய்மையாக்கும் கருவியை "வை-ஃபை' இணைப்புடன் ஒரு செயலின் மூலமாக உங்களுடைய செல்லிடப் பேசியில் இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் வெளியில், தொலைதூரத்தில், எங்கிருந்தாலும் அங்கிருந்து கொண்டே இந்தக் கருவியை இயக்க முடியும்.

அதுபோன்று, இவ்வளவு மணி நேரம் கழித்து இயங்க வேண்டும் என்று ஆணையிட முடியும். கூகுள் ஹோம் மற்றும் அமேஸான் அலெக்ஸா ஆகியவற்றைப் பயன்படுத்தி, உங்களுடைய பேச்சின் மூலமாகவே இந்தக் கருவியை உங்களால் இயக்க முடியும்.

கருவியை உருவாக்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, 4 ஆயிரம் காற்றைத் தூய்மையாக்கும் கருவிகளை இவர் உருவாக்கியிருக்கிறார். அதில் 2,500 மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ளவை முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. விலை பிற காற்றைத் தூய்மையாக்கும் கருவிகளை விட பத்துமடங்கு குறைவு!

Tags : காற்றுக்கும் உண்டு வேலி!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT