இளைஞர்மணி

வாய்ப்புகள் காத்திருக்கும் உடற்பயிற்சித்துறை!

13th Jul 2021 06:00 AM | - ந.முத்துமணி

ADVERTISEMENT

 

ஓர் உடற்பயிற்சி ஆசிரியரின் பணி மக்களின் உடலிலும் வாழ்க்கையிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது ஒரு பொறுப்புமிக்க பணியாகும். கரோனாவுக்குப் பிந்தைய சூழலில், மக்களிடையே உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதால், உடல்நலத்தகுதி குறித்து கற்பித்தல் அல்லது உடற்பயிற்சி அளிப்பது பலரும் விரும்பி செய்யும் வாழ்க்கைத் தொழிலாக மாறியுள்ளது.

பிரபலமாகும் உடற்பயிற்சி: உடற்பயிற்சிஆசிரியர்கள், பிரபல திரை நட்சத்திரங்கள் தங்கள் உடற்பயிற்சி செய்வதை - அதனால் ஏற்பட்ட நன்மைகளை - சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு வருவதால்,அவற்றைக் காணும் இளைஞர்களுக்கு உடல்நலம் சார்ந்த ஆர்வம் பெருகி, உடல் தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
உடற்தகுதியைப் பாடத்திட்டமாக வகுத்து, முறையாகப் போதித்து, சான்றிதழ் அளிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால், உடற்பயிற்சியை எளிதாகவும், வேகமாகவும் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடமும் ஏற்பட்டுள்ளது.

உடற்தகுதியில் தனிப்பட்ட முறையில் அடைந்த முன்னேற்றம் மற்றும் பலன்களால் ஊக்கம் பெற்று, அதன் பயனை மற்றவர்களுக்கும் விளக்கவும், கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும் பலரும் முன்வருகிறார்கள். உடற்பயிற்சி ஆசிரியர்: உடலுக்கு பெரிய அளவில் அயற்சி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தினசரி வாழ்வியல் நடவடிக்கைகளை மிகுதியான உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்படுத்தும் திறனையே உடற்தகுதி என்கிறோம்.

ADVERTISEMENT

ஒருவர் எவ்வளவு வேகமாக ஓட முடியும் அல்லது எவ்வளவு கனமான பொருளைத் தூக்க முடியும் என்ற பரவலான கருத்தியலைக் கடந்து, உடற்தகுதி என்பது மேலும் பல அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் அளிக்கப்படும் அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் ஒரே மாதிரியாக, ஒரே தன்மை கொண்டதாகவும் இருப்பதில்லை.

தடகளம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள், உடல் மறுதகவமைப்பு பயிற்சிகள், முதியோர்கள், பெண்களுக்கு மகப்பேறுக்கு முற்பட்ட காலம், பிரசவத்திற்குப் பிந்தைய காலம், வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகள் போன்றவற்றுக்கான உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக்கான உடற்பயிற்சி செயல்பாடுகள் என்று பலவற்றை உள்ளடக்கியதே உடற்தகுதி பயிற்சியாகும்.

எல்லாப் பிரிவினருக்கும் ஒரே வகையான உடற்பயிற்சி திட்டங்களைக் கற்பிக்கும்  அணுகுமுறையை தற்போது பின்பற்றமுடியாது. உடலின் தன்மை, உடல்தகுதி, உடல்நலக்கோளாறுகள், பாதிப்புகள், வயது போன்ற பல்வேறு கூறுகளை கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் தனித்தனி பயிற்சி திட்டங்களை வகுத்து உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

பொறுப்புமிகுந்த பணி: ஓர் உடற்பயிற்சி ஆசிரியராக, மக்களுக்குப் பயிற்றுவிக்கும்போது ஒருவர் செய்யும் பணிகள், அவர்களின் உடலிலும் வாழ்க்கையிலும் நெடுங்காலத்திற்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இது ஒரு பொறுப்பு மிகுந்த பணியாகும். எனவே, இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.

ஒவ்வொரு தனிநபரின் உடற்பயிற்சி சார்ந்த குறிப்பிட்ட, தனித்துவமான தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு துல்லியமானஅறிவும் அனுபவமும் உடற்பயிற்சி ஆசிரியர் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு தமது அறிவையும் அனுபவத்தையும் சீராகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாகவும், வெற்றிகரமாகவும் பயிற்சி அளிப்பது முக்கியமாகும்.

ஓர் உடற்பயிற்சி ஆசிரியரின் வழிகாட்டுதலில் பயிற்சியில் ஈடுபடுவதற்கும், உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. பயிற்சி எடுப்பதும், பயிற்சி கொடுப்பதும் வெவ்வேறான அணுகுமுறைகளைக் கொண்டவையாகும்.

தரமான உடற்பயிற்சிக் கல்வி: பொதுவான உடற்பயிற்சி அல்லது குறிப்பிட்ட தேவைக்கான உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும், அவற்றை முறையான, தரமான கல்வித் திட்டங்களின் வாயிலாகக் கற்றுக்கொள்வது அவசியமாகும். உடற்பயிற்சி சார்ந்த அனைத்து பாடத்திட்டங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்தப் பாடங்களைப் போதிக்கும்போது உடற்பயிற்சி ஆசிரியர் எடுத்தாளும் தகவல்கள் அவருடைய சொந்த அறிவு, அனுபவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்தால், அந்த பயிற்சி திறன்வாய்ந்ததாக அமையும். எனவே, பயிற்சிக்களத்தை தேர்ந்தெடுக்கும்போது உடற்பயிற்சி ஆசிரியரின் திறன்களை அளந்தறிந்து, அதன் பிறகு பயிற்சியில் சேர வேண்டும்.

உடற்பயிற்சித்துறை சார்ந்த அறிவு மற்றும் தகவல்கள் பரந்துபட்டது மட்டுமல்ல, காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருப்பதாகும்.எத்தனை மணி நேரங்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் பயிற்சியை எடுத்துக் கொண்டோம் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு, மாறுபட்ட வயதினர், குறிப்பிட்ட உடல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிறப்புப்பயிற்சிக்கு தகுதியான நபராக தன்னை ஒருவர் நினைத்துக் கொள்ள முடியாது.

ஒரு நபருக்கு அளிக்கும் உடற்பயிற்சியினால் அவருடைய உடல் நலத்தில் ஆக்கப்பூர்வமான வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டுமானால், பயிற்சிக்கான அணுகுமுறை முறையானதாகவும் முழுமையானதாகவும் இருக்க வேண்டும்.

வெவ்வேறு தேவைகள் மற்றும் நோக்கங்களுக்கான உடற்பயிற்சிகளை அளிப்பதற்கு தகுந்தவாறு, உடற்பயிற்சி முறைகளைக் கற்றுத் தேர்வதுதான் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியராக மிளிர்வதற்கான அடிப்படையாகும். மக்களோடு இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கிடைக்கும் அனுபவங்கள், புரிதல்கள் உடற்பயிற்சி ஆசிரியரின் வளர்ச்சியை  அடுத்த கட்டத்திற்கு  எடுத்துச் செல்லும்.

தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வது, ஆசிரியரின் திறன்களை மேம்படுத்த உதவும். இதன் வாயிலாக கிடைக்கும் அறிவின் மூலம் பல்வேறு வகையான மக்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்  என்பதோடு, குறிப்பிட்ட உடற்பயிற்சித் தேவைகளைக் கொண்டோருக்கும் அதற்கேற்ற பயிற்சிகளைத் தர முடியும். எனவே மாறிவரும் உலகில் உடற்பயிற்சிஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு பயிற்சி தரும்ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT