இளைஞர்மணி

தப்பிக்கலாம்... தேவையற்ற அழைப்புகளில் இருந்து!

12th Jan 2021 06:00 AM | -ந.ஜீவா

ADVERTISEMENT


பேசுவதற்காக உருவாக்கப்பட்ட செல்லிடப் பேசி இன்று பலவிதங்களில் பயன்படுகிறது. ரயில், பஸ் டிக்கெட் போடுவது, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பிறருடைய கணக்குக்கு மாற்றுவது, தேவையான பொருள்களை வாங்குவது, மதிய உணவை ஆர்டர் செய்வது என அதன் பயன்கள் நீண்டு கொண்டே போகின்றன.

தொலைபேசியாக மட்டும் இல்லாமல் கேமரா, தொலைக்காட்சி, கணினி, கடிகாரம், டேப் ரிக்கார்டர், டார்ச் லைட் என செல்லிடப் பேசிக்கு பலவிதமான முகங்கள் இப்போது.

நாம் எந்த அளவுக்கு அதிகமான பயன்களை செல்லிடப் பேசியில் இருந்து பெறுகிறோமோ... அந்த அளவுஆபத்துகளும் அதில் நிரம்பியிருக்கின்றன. மிகவும் எச்சரிக்கையாக அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

பலவிதமான பணிகளை செல்லிடப் பேசிகள் செய்ய, அதற்குத் தேவையான நிறைய செயலிகளை செல்லிடப் பேசிகளில் நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

செல்லிடப் பேசியில் எந்த ஒரு செயலியையும் நிறுவ வேண்டும் என்றால், செல்லிடப் பேசியின் வேர் முதல் கிளைகள் வரை எல்லாத் தகவல்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது. செல்போனின் ஐடி, அதில் பேசப்படும் அழைப்புகள் குறித்ததகவல்கள், வைஃபை கனெக்ஷன், மைக்ரோ போன், கேமரா, செல்லிடப் பேசியில் உள்ள புகைப்படங்கள், பைல்கள் ஆகியவை பற்றிய தகவல்கள், நமக்கு வரும் குறுஞ்செய்திகள், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல்கள், நம் செல்லிடப் பேசியில் உள்ள தொடர்பு எண்கள், எந்தச் செயலிகளை எல்லாம் நாம் பதிவிறக்கம் செய்திருக்கிறோம் என்கிற தகவல்கள் உள்பட எல்லாத் தகவல்களையும் அந்த செயலி சார்ந்த நிறுவனத்துக்கு அளித்தால்தான், நமக்குத் தேவைப்படும் அந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து செல்லிடப் பேசியில் நிறுவ முடியும்.

ஒரு செயலியை நமது செல்லிடப்பேசியில் நிறுவிவிட்டால், அதன் பிறகு நம் ஒவ்வொரு சிறு அசைவும் அந்தச் செயலியால் கண்காணிக்கப்படுகிறது.

ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்து பஸ் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் செல்லிடப்பேசியின் திரையில் வாடகைக் கார் செயலி தோன்றி, உங்கள் கவனத்தை திசை திருப்பும். ஓர் இடத்துக்குச் செல்லும்போது, அந்த இடத்தில் உள்ள உணவகங்களைப் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்திகளாக உங்களை ஈர்க்கும். மிக முக்கியமான பிரச்னைகளில் நீங்கள் வாழ்க்கையை வெறுத்து ஈடுபட்டிருக்கும்போது, "உங்களுக்கு வங்கிக் கடன் வேண்டுமா?' என்று யாரோ ஒருவர் உங்களிடம் அன்பொழுகக் கேட்பார். வணிகமயமான உலகுக்குள் உங்களை செல்லிடப் பேசி செயலிகள் இழுத்துக் கொண்டு செல்லும்; மூழ்கடிக்கும். சில சமயங்களில் செல்லிடப் பேசி தரவுகளைத் திருடுபவர்கள் உங்களுடைய செல்லிடப் பேசியில் உள்ள தகவல்களைத் திருடி உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுத்துக் கொள்வதற்கான ஆபத்து கூட ஏற்பட்டுவிடும்.

இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும்விதமாக, செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார் ஆதித்யா வூச்சி என்ற இளைஞர். ஹைதராபாத்திலுள்ள "டென்20 இன்ஃபோமீடியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் இயக்குநராக ஆதித்யா வூச்சி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் மூலமாக அவர் உருவாக்கியுள்ள "தூஸ்ரா' என்ற செயலியை நீங்கள் உங்கள் செல்லிடப் பேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால், செல்லிடப் பேசியால் உருவாக்கப்படும் பல சிறைகளில் இருந்து நீங்கள் தப்பிவிடுவீர்கள்.

இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் உங்களுக்கு 10 இலக்கங்கள் கொண்ட ஒரு புது செல்லிடப் பேசி எண் தரப்படுகிறது. அதற்காக தனி "சிம்' எல்லாம் இல்லை. உங்களுடைய உண்மையான செல்லிடப் பேசி எண்ணுக்குப் பதிலாக, தூஸ்ரா தரும் எண்ணை வாடகைக் காரைப் பிடிப்பது முதல் மளிகைக்கடையில் கால் கிலோ புளி வாங்குவது வரை எல்லாவற்றுக்கும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இதனால் உங்களுடைய உண்மையான எண் அவர்களுக்குத் தெரியாது. உங்களுடைய செல்லிடப் பேசியில் உள்ள எந்தத் தகவலையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியாது.

வணிகம் மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் உங்களிடம் பேசி அவ்வப்போது தொல்லை தர மாட்டார்கள்.

உங்களுக்கு வரக் கூடிய தவறான, தொந்தரவு தரும் அழைப்புகளை, குறுஞ்செய்திகளை எல்லாம் இந்தச் செயலி தடுத்து வைத்துக் கொள்ளும். இந்த "தூஸ்ரா எண்'ணுக்கு வருகிற எல்லா அழைப்புகளும் நேரடியாக உங்களுக்கு வராமல், வாய்ஸ் மெயிலில் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து, யாரிடமாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளலாம். அவர்களுடைய எண்ணை உங்களுடைய உண்மையான செல்லிடப் பேசி தொடர்பு எண்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். நம்பிக்கையான அழைப்புகள், நம்பிக்கையான சேவைகள் என நீங்கள் நினைப்பதை மட்டுமே உங்களுடைய உண்மையான செல்லிடப் பேசி எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த தூஸ்ரா செயலி தொடர்பான செயல்பாடுகளை ஆதித்யா வூச்சி கடந்த ஆண்டு (2020) மே மாதம் தான் தொடங்கினார். செப்டம்பர் மாதம் செயலி வெளியிடப்பட்டு இருக்கிறது. செயலி வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் 10 ஆயிரம் பேர் இதனைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். தூஸ்ரா செயலி தரும் 10 இலக்கச் செல்லிடப் பேசி எண்ணை நீங்கள் விரும்பும் எண்ணாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

தூஸ்ரா செயலியை உருவாக்கிய டென்20 இன்ஃபோமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓலா, சுவிக்கி, ùஸாமட்டோ, அர்பன்கம்பெனி, ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தூஸ்ரா செயலி தரும் எண்ணையே எல்லாத் தொடர்புகளுக்கும் பயன்படுத்தலாம்.

""இன்று பல தொழில், வணிகநிறுவனங்கள் உங்களுடைய செல்லிடப் பேசி எண்ணை எடுத்துக் கொள்கிறார்கள். அதை அவர்களுடைய தனிப்பட்ட லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக என்று அவர்கள் கூறினாலும், எப்படியெல்லாம் தவறாகச் செல்லிடப் பேசி எண்ணைப் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இந்தச் செயலியை உருவாக்கினேன்'' என்கிறார் ஆதித்யா வூச்சி.

இந்தச் செயலியைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT