இளைஞர்மணி

ஸ்டார்ட் அப்... சிந்தியுங்கள்... தொடங்குவதற்கு முன்பு!

23rd Feb 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

மற்றவர்களின் கீழ் பணிபுரியாமல், சுயமாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி அதன் வாயிலாகப் பலருக்கும் வேலை அளிக்க வேண்டும் என்ற கனவு தற்கால இளைஞர்கள் பலருக்கு இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று மேலோங்கிய ஆர்வத்தில், சிறப்பாகத் தொடங்கும் இளைஞர்கள் எல்லாரும் தொடர்ந்து அந்த நிறுவனத்தை நடத்த முடிகிறதா என்றால் இல்லை என்பதே பதில். எல்லாரும் வெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

வெறும் கனவும் ஆசையும் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவுவதற்குப் போதுமானவை அல்ல.

ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு மிகவும் அடிப்படைத் தேவை, புதிய யோசனை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதே ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றிக்கான சூட்சுமம்.

ADVERTISEMENT

அதற்கு மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் எவை என்ற பட்டியலை முதலில் தயார்செய்து கொள்ள வேண்டும். அன்றாடம் மக்கள் எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றை வரிசைப்படுத்தி அவற்றுக்கு எந்த மாதிரியான தீர்வுகளை நம்மால் அளிக்க முடியும் என்று யோசிக்கலாம்.

அத்தகைய சூழலில், நம் மனதுக்கு நெருக்கமான பிரச்னையை, நம்மால் எளிதில் தீர்வளிக்க முடிகிற பிரச்னையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்தப் பிரச்னையைத் தேர்வு செய்கிற வேளையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், அதற்குத் தீர்வளிப்பது நம் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையுமா என்பதையும் தீர ஆராய்ந்து முடிவு செய்வதாகும்.

ஏனெனில், மிகப் பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கப் போகிறோம். அந்நிறுவனம் நம் விருப்பத்துக்கு ஏற்பவும் ஆர்வத்தைத் தூண்டுவதைப் போலாகவும் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், அதில் எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான மனநிலை நமக்கு இயல்பாகவே ஏற்படும்.

நமக்கு ஆர்வமே இல்லாத விஷயத்தில் தீர்வைக் காண முயன்றால் அது எந்தவித பலனையும் அளிக்காது. மனச்சோர்வு காரணமாக, அதைப் பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல் உருவாகும். எனவேதான் அடிப்படையை வலுவுடன் அமைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எந்தப் பிரச்னைக்குத் தீர்வாக எத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கப் போகிறோம் என்பதை உறுதியாகத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களின் தேவைகளை நிறைவு செய்கிறவிதமான, புதிய பொருளை உருவாக்கி அதன் வாயிலாகப் பிரச்னைக்குத் தீர்வளிக்கப் போகிறோமா அல்லது செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தீர்வளிக்கப் போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் நாம் அளிக்கப் போகும் சேவை அல்லது பொருள் நடைமுறைக்கு ஏற்றதா, குறைந்த விலையில் மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்குமா என்பனவற்றைத் தெளிவாக ஆராய வேண்டும். குறைந்த செலவில் சிறந்த தீர்வு என்பதில் அதிக கவனம் தேவை.

ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு அது சரியானதுதானா அதனால் மக்களுக்கு நிச்சயமாகப் பலன் ஏற்படுமா என்பனவற்றை ஆராய்வது மிக மிக அவசியம். இது தொடர்பாக சந்தைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் போன்ற சேவை அல்லது பொருளை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கக் கூடும். அவை நீங்கள் திட்டமிட்டதை விட சிறப்பான சேவையை, பொருளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் தொடங்க நினைக்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்காமல் இருப்பதே மேல்.

எனவே, நீங்கள் தொடங்க நினைத்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனித்துவம் வாய்ந்ததா என்பதை ஒருமுறைக்குப் பலமுறை உறுதி செய்து கொள்வது நல்லது. நீங்கள் தொடங்க நினைத்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தைப் போல ஏற்கெனவே உள்ள நிறுவனங்களைவிட உங்களுடைய நிறுவனம் எந்த எந்த விதங்களில் எல்லாம் சிறந்ததாக இருக்கும்; இருக்க வேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டுக் கொண்டு செயல்படுவது உங்களை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும். அப்போதுதான் நீங்கள் தொடங்கப் போகும் ஸ்டார்ட்அப் நிறுவனம் லாபத்தை ஈட்டி உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்கும்.

எனவே ஸ்டார்ட் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, நமக்கு நெருங்கிய நண்பர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் பலரிடம் ஆலோசனை பெறுவது நல்ல பலனைத் தரும். அவர்களிடமிருந்தும் நமக்குப் புதிய யோசனைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உங்களது ஸ்டார்ட்அப்பிற்கு நுகர்வோரிடையே நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதையும் எளிதில் கண்டறிந்துவிட முடியும்.

சமூக வலைதளம், தகவல் திரட்டுவது, கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றின் வாயிலாக நுகர்வோரின் கருத்துகளை எளிதில் பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் தற்போது ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. போதுமான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு உங்களது ஸ்டார்ட் அப் குறித்த முடிவு சரியானதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கு அடுத்து, உங்களது தயாரிப்பைக் (புதிய பொருளோ அல்லது செயலியோ, மென்பொருளோ) குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடம் கொடுத்து பரிசோதிக்கலாம். அப்படிச் செய்வது அதை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இந்நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஸ்டார்ட்அப் நிறுவன முயற்சிகளை நாம் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் செய்கிறோமா என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்வது. அதுவே நம்மை அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்லும்.

ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குவதற்கான சரியான தேவையைக் கண்டறிவது, மிக மிக முக்கியம். அதைக் கண்டறிந்த பிறகு நமது முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.

Tags : தொடங்குவதற்கு முன்பு!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT