இளைஞர்மணி

ஐஐடி - மெட்ராஸ்... மாணவர் உருவாக்கிய இ- பைக்!

23rd Feb 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT


சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தின் (ஐஐடி - மெட்ராஸ்) உதவியுடன் கடந்த 10- ஆம் தேதி ஒரு புதிய வாகனம் தன் சிறகை விரித்தது. "பைமோ' என்று பெயரிடப்பட்ட அந்த எலக்ட்ரிக் பைக் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இ - பைக்கை உருவாக்கிய இளைஞர் விசாக் சசிகுமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து ஐஐடி - மெட்ராஸில் எம்.எஸ்சி என்டர்பிரனர்ஷிப் முதுகலைப் பட்டம் படித்தவர். ஏற்கெனவே இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் படித்த பொறியாளர். பைபீம் எலக்ட்ரிக் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இந்த புதிய வாகனம் பற்றியும், இளம் தொழில்முனைவோராக ஆக விரும்புபவர் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் பற்றியும் நம்மிடம் பேசினார்:

""வருங்காலத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. டீசல், பெட்ரோல் வாகனங்களால் பெரிய அளவுக்கு காற்று மாசடைந்துவிடுகிறது. தில்லி போன்ற நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்ல முடிவதில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விலை அதிகம் இல்லாததும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாததுமான ஓர் இருசக்கர வாகனத்தை உருவாக்க நினைத்தேன். ஏற்கெனவே பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்கின்றன. அவற்றிலிருந்து வேறுபட்டதாக நான் தயாரிக்கும் இ - பைக் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் அடிப்படையில் உருவானதுதான் "பைமோ' இ-பைக்.

இந்த இ - பைக் ஐஐடி - மெட்ராஸின் முழு உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதியனவற்றை கண்டுபிடித்தல், உருவாக்குதல் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஐஐடி - மெட்ராஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அது உதவுகிறது.

ADVERTISEMENT

முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்த அது தொடர்பான பல ஐயங்களுக்கு இங்குள்ள பேராசிரியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். தயாரிக்கும் பொருள்களை அவ்வப்போது பரிசோதனை செய்ய இங்குள்ள ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐஐடி மெட்ராஸ் வளாகத்திலேயே ஆய்வு நிகழ்த்துவதற்காக இடம் தருவார்கள். கண்டுபிடிப்பின் விளைவாக உருவாகும் பொருளைக் காட்சிப்படுத்தவும் உதவுகிறார்கள். அப்போது நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் மூலமாக பொருள்களைப் பெரிய அளவில் தயாரிக்க முடியும். சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்த வங்கிக் கடன் பெறுவதற்கும் வழிகாட்டுவார்கள்.

ஏற்கெனவே உள்ள இ - பைக்குள் மின்சாரத்தின் மூலம் இயங்கினாலும் அவற்றில் பெடலும் இருக்கும். நான் தயாரித்துள்ள இந்த இ- பைக்கில் பெடல் இல்லை. பெரிய இரு சக்கர வாகனங்களில் உள்ளது போல ஷாக் அப்சர்வர்கள் இதில் உள்ளதால், மேடு பள்ளங்களில் இந்த இ - பைக்கை ஓட்டிச் சென்றாலும் முதுகு வலி வராது.

இ- பைக்கின் பின்சீட்டில் அமர்ந்து செல்பவர்கள் வசதியாக அமர்ந்து செல்வதற்காக பெரிய ஸ்கூட்டர்களில் உள்ளதைப் போன்ற இருக்கை வசதியும் உள்ளது.

மணிக்கு 25 கி.மீ.வேகத்தில் செல்லும் இந்த இ - பைக்கை ரிஜிஸ்டர் செய்யத் தேவையில்லை. இதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெறவும் தேவையில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை செல்லலாம். 50 கி.மீ. பயணம் செய்ய வெறும் அரை யூனிட் மின்சாரமே செலவாகும். வெறும் ரூ.5 செலவில் 50 கி.மீ. பயணம் செய்யலாம்.

இந்த இ- பைக்கை நாங்கள் அறிமுகம் செய்த அன்றே 100 பைக்குகளுக்கான ஆர்டர்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

இதை உருவாக்க பெரிய தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தற்போது நிறைய சிறு, குறு தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இந்த இ - பைக்குக்குத் தேவையான பல பாகங்களை இந்த நிறுவனங்களிடம் தயாரிக்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். இதனால் இடம், கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான முதலீடுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இப்படி பட்டறைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள் தரமானவையாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படும். அதற்காக பட்டறைகளில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளின் தரத்தை அளவிட அதற்கான சோதனை வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த சோதனை வழிமுறைகளின்படி, தயாரிக்கப்படும் பொருள் தரமில்லாததாக இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிடுவோம்.

டீசல், பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசடைகிறது. இந்த இ - பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரியால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர். இந்த இ - பைக்கில் பயன்படுத்தப்படும் பேட்டரி நீண்ட நாள்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு, வாகனத்தை இயக்கப் பயன்படாது. அதன் பிறகு இந்த பேட்டரியின் மூலம் மின்சார பல்புகளை எரியச் செய்யலாம். அதற்குப் பிறகு இந்த பேட்டரியை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். எனவே இ - பைக்கில் உள்ள பேட்டரியால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது.

இந்த இ-பைக்கில் பயன்படும் பேட்டரியை அடிக்கடி ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். பேட்டரியைத் தனியாகக் கழற்றியும் ரீ சார்ஜ் செய்யலாம்.

இந்த ஆண்டு 10 ஆயிரம் இ - பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தற்போது நிறைய விற்பனையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் மிகவும் திட்டமிட்டு, அன்றாட நடைமுறைகளிலிருந்து நிறையக் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். எதிர்ப்படும் தோல்விகளால் மனம் குலைந்து போகாமல், உறுதியுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

Tags : மாணவர் உருவாக்கிய இ- பைக்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT