இளைஞர்மணி

மாறுங்கள்... புதிய தொழிலுக்கு!

சுரேந்தர் ரவி

நாம் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அத்தொழிலை அடிப்படையாகக் கொண்டே நமது வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கும். அதில் கிடைக்கும் வருமானம், நண்பர்கள், அனுபவங்கள் உள்ளிட்டவையே நிகழ்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கும் கருவிகளாகின்றன.

குறிப்பிட்ட தொழிலில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, "இது நமக்கேற்ற தொழிலல்ல' என்று சிலர் நினைப்பார்கள். உதாரணமாக, விளம்பரத் துறையில் பணியாற்றி வருபவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எத்தகைய பொருள்களை விளம்பரப்படுத்துகிறோம் என்பதில் பணியின் தன்மை வேறுபடுகிறது. ஒன்றிலிருந்து மற்றொரு பிரிவுக்குச் செல்ல சிலர் விரும்புவர்.

நிதித்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வோருக்கும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. தற்போதுள்ள பணியிலிருந்து வேறு தொழிலுக்கு மாறி விடலாமா என்ற எண்ணம் இதனால் பலருக்குத் தோன்றும். ஆனால், அவ்வாறு செய்வது சரியாக இருக்குமா அல்லது தவறாக முடியுமா என்ற தயக்கமும் அவர்களிடத்தில் காணப்படும்.

அவ்வாறு தொழிலை மாற்ற விரும்புவோர் குறிப்பிட்ட சில செயல்முறைகளைக் கடைப்பிடித்தால் புதிய தொழிலிலும் வெற்றி காண முடியும்.

தன்னம்பிக்கை

புதிய தொழிலில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு ஏற்படுவது மிகவும் முக்கியம். புதிய தொழிலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து சந்தேகப் போக்கு நிலவி வந்தால், அதில் முழு ஈடுபாட்டைச் செலுத்த முடியாமல் போகும். அதனால், நம்பிக்கையுடன் செயலில் ஈடுபட வேண்டும்.

குறைந்த வருமானம்

புதிய தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் அச்சம் கொள்ளும் முக்கிய விஷயம் வருமானம். தற்போதைய பணியில் போதிய அனுபவம் பெற்றிருப்பதால், சற்று அதிக வருமானம் கிடைக்கும். ஆனால், புதிய தொழிலில் ஈடுபடும்போது அதில் அவர் கற்றுக்குட்டி என்பதால், சிறு குழந்தை போல எல்லா விஷயங்களையும் புதிதாகக் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறான சமயங்களில் வருமானம் சற்று குறைவாகவே கிடைக்கக் கூடும். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த வருமானத்தைக் கொண்டும் வாழ்க்கையை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய தொழிலில் படிப்படியாக போதிய அனுபவம் கிடைக்கும் என்பதால், சில ஆண்டுகள் கழித்து நமக்குப் பிடித்தமானதாக புதிய பணி மாறிவிடும்; வருமானமும் அதிகரித்துவிடும். எனவே, ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைக்கிறது என்பது குறித்து அதிகமாகக் கவலைப்படக் கூடாது.
தற்போது ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், புதிய வேலைக்குச் செல்லும்போது, மிகக் குறைந்த வருமானம் கிடைத்தால் அதற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது. புதிய தொழிலில் போதிய அனுபவம் இல்லாமல் இருந்தாலும், வேறு சில பணிகளில் கிடைத்த அனுபவம் புதிய தொழிலிலும் கைகொடுக்கும். எனவே, அடிமட்ட வருமானத்தை புதிய வேலைக்குச் செல்லும்போது ஏற்கக் கூடாது.

திறமைகளை வளர்த்துக் கொள்தல்

புதிய தொழிலுக்கு மாறுவதற்கு முன்பாக அதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அத்திறமைகளே புதிய தொழிலில் நமக்குப் பெரும் உதவியாக இருக்கும். அத்தொழிலில் தனித்தன்மையுடன் செயல்படுவதற்கும் அத்திறமைகளே முக்கியக் காரணியாக அமையும்.

கடின உழைப்பு

புதிய தொழிலில் சிறக்க வேண்டுமெனில் கடினமாக உழைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதே தொழிலில் பல ஆண்டுகள் ஈடுபட்டு வருபவர்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் சில ஆண்டுகளிலேயே அவர்களுடைய இடத்தைச் சென்றடைய முடியும். மற்றவர்களைப் போலவே நீங்களும் உழைத்தால், புதிய தொழிலில் வெற்றியை ஈட்டுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

கற்றுக் கொள்ளுங்கள்!

புதிய தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டு அனுபவம் உள்ளவர்களிடம் தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தொழிலில் அவர்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால், அவர்களிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்ள முடியும். அது நம் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடமும் விரிவாக உரையாட வேண்டும். தொழிலின் நுணுக்கங்களை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அத்தகையோரை நம் ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

புதிய தொழில் குறித்த சில பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். பல தொழில்களுக்கு அரசு சார்பிலும் தனியார் அமைப்புகள் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் கலந்து கொண்டு தொழில் குறித்த பட்டறிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய இளைஞர்கள் பலர் விருப்பமான வேலைக்குச் செல்வதை விட கிடைத்த வேலைக்குச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்றினால், விருப்பமான பணிக்கே நம்மால் செல்ல முடியும். சரியான நேரத்தில் சரியான விஷயங்களைப் பின்பற்றுவோம். வாழ்க்கையில் வெற்றி காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT