இளைஞர்மணி

எளிய வழிகள்... வெற்றியை வசமாக்க !

வி.குமாரமுருகன்

திறன்களை மேம்படுத்தி கொள்வது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான விஷயமாக உள்ளது. இது மூளையை கூர்மையாகவைத்துக் கொள்ள உதவுவதுடன் சவாலான பணிகளில் ஈடுபடுவதற்கான அறிவாற்றலையும் சிறந்த நினைவுத் திறனையும் இது வழங்குகிறது.

பத்து வயதோ, நூறு வயதோ தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இளமையான மனதுடன் இருக்க முடிகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் காலத்தின் கட்டாயம்.

கவனத்துடன் உற்று நோக்குதல்

எந்தச் செயல் என்றாலும் அதை நோக்கி நம் முழுக் கவனமும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுதான் கவனத்துடன் உற்று நோக்குதல். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதனை மேம்படுத்த முடியும். சாதாரணமாக செய்யும் செயலை விட கவனத்துடன் ஒரு செயலைச் செய்யும் போது அதன் தரம் சிறப்பாக அமையும். பொழுதுபோக்கு நிறைந்த இந்த உலகில் கவனச்சிதறல் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. அதனால் செயலின் தரம் குறைந்து போக வாய்ப்பு உருவாகிறது .எனவே கவனத்தை மேம்படுத்துவதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்ளும் பக்குவம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். காலம் எப்போதும் மாறிக் கொண்டேதான் இருக்கும். சூழ்நிலைகளும் மாறிய வண்ணமே இருக்கும். அதனால் சூழ்நிலை மாறி கொண்டே இருக்கிறதே என்று கவலைப்படாமல் அந்த சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக்கி அதனுடன் இணைந்து பணியாற்றினால் மட்டுமே உயர்ந்த நிலையை எட்ட முடியும். கரோனா தொற்று வரும் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் அந்த பேரிடர் நேரத்தையும் நம்மால் கடக்க முடிந்தது என்பது சூழ்நிலையுடன் நம்மால் ஒத்து போகும் திறன் நமக்கு உள்ளதைக் காட்டுகிறது. அனைத்துச் செயல்களிலும் இந்த ஒத்துப்போதலுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கற்றுக்கொள்ளும் திறன்

புதிய செயல் ஒன்றைத் திறமையாகவும், சிறப்பாகவும் எவ்வாறு விரைவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பது குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

உதாரணமாக போட்டித் தேர்வுகளில் குறுக்கு வழிகளில் தர்க்கரீதியான கணக்குகளை செய்வதைப்போல ஒரு செயலை விரைவாகச் செய்து முடிப்பதற்கான திறன்களை தேடி அறிந்து கற்றுக் கொள்வது அவசியம்.

இத்தகைய திறன்களைத் தெரிந்து கொண்டால் புதிதாக எந்த ஒரு செயலையும் தயக்கமின்றி செய்து முடிக்க முடியும்.

திட்டமிடல்

ஒவ்வொருமனிதனின் மனதிலும் தாங்கள் செய்ய விரும்பும் செயல்களின் பட்டியல் நிறைய உள்ளன. ஆனால் அதை எப்படிச் செய்வது? எப்போது செய்வது ? என்ற திட்டமிடல் அவர்களிடம் இல்லையென்றால் அந்தப் பட்டியல் வெறும் கனவாகவே போய்விடும். உதாரணமாக நீண்ட தூர பயணம் செய்ய நினைக்கும் போது , எந்த வாகனத்தில் பயணிப்பது? எத்தனை நாள் தங்குவது? எங்கெல்லாம் தங்குவது? அதற்காக நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் எவை? என்பன போன்ற விவரங்களை முதலிலேயே திட்டமிட்டுக் கொண்டால், போகும் இடங்களில் சிரமமின்றி மகிழ்ச்சியாகப் பயணிக்க முடியும். அப்படி திட்டமிடாவிட்டால் தேவையான மாற்றுத் துணி கூட இல்லாமல் போய்விடலாம். தங்குவதற்கு அறை இல்லாமல் போய்விடலாம். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உதவி கேட்டல்

ஒரு சிறு உதவி கிடைத்தால் உயரத்திற்கு சென்று விடலாம் என்பன போன்ற நிலை சிலருக்கு ஏற்படும். ஆனால் அவர்களுக்கு உதவி கேட்க மனசு வராது. பெரும்பாலோனோர் எல்லாவற்றையும் தாங்களே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். அதுகுறித்து தெரிந்த ஒருவரிடம் ஒரு சிறு உதவி கேட்டால், அந்தச் செயல் முடிந்து விடும் என்பதும் தெரியும்.

ஆனால் அதை அவர்கள் கேட்க மாட்டார்கள். தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் உதவியை கேட்டுப் பெறுவதில் தவறில்லை. அது நம் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

இலக்கினை முடிவு செய்யுங்கள்

வில்லிலிருந்து அம்பை செலுத்த தயாராகி விட்டோம். ஆனால் இலக்கு எது என்று திட்டமிடவில்லை என்றால் அந்த அம்பு வீணாகிப் போய்விடும். எனவே நமக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டியது மிகவும் அவசியம். தடகள வீரராக மாற வேண்டும் என ஆசைப்பட்டால் அந்த இலக்கை மனதில் இருத்தி அந்த இலக்கை எட்டுவதற்கான தரவுகளையும், தகவல்களையும் திரட்டி அதற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் .

இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே அதற்கான முன்னேற்பாடுகளை நம்மால் செய்ய முடியும்.

நேர்மறையான அணுகுமுறை

எப்போதும் பிறருடைய செயல்பாடுகளில் குறையை மட்டுமே கண்டு கொண்டிருந்தால், அவர்களிடமிருந்து நாம் எந்த உதவியும் பெற முடியாத நிலை உருவாகிவிடும். உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் பெண்ணிடம் "சாம்பார் சரியில்லை' என்று குறை கூறுவதைக் காட்டிலும் அன்றைய தினம் நன்றாக செய்த ரசம் குறித்து சிறப்பாகப் பேசி நேர்மையான அணுகுமுறையை மேற்கொண்டால் அது நல்ல பலனைத் தரும்.

கேட்பது அவசியம்

நீங்கள் சொல்லும் கருத்துகளை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல, மற்றவர்கள் சொல்லும் கருத்துகளையும் நீங்கள் உன்னிப்பாக கவனம் செலுத்தி கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் சொல்லும் கருத்துகளில் இருந்து தேவையான கருத்துகளை நாம் பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சுய விமர்சனம்

நமக்கு கிடைக்கும் வெற்றியும், நமக்கு கிடைக்கும் தோல்வியும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கவே செய்கின்றன. அதிலிருந்து நமக்கு தேவையான விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டு சுய விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும். உலகில் முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்கள் என்றாலும் சரி, விளையாட்டு வீரர்கள் என்றாலும் சரி , தொழில் முனைவோர்கள் என்றாலும் சரி , அவர்கள் தங்களிடமிருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டு , அதில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறி வந்தவர்களாக தான் இருப்பார்கள். எனவே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். எனவே, இன்றைய இளைய தலைமுறை இத்தகைய திறன்களை மேம்படுத்திக் கொண்டால் முன்னேற்றப் பாதையில் செல்வது எளிதாக இருக்கும் என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT