இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 43: தன் மேலாண்மைத் திறன் - 3

சுப. உதயகுமாரன்

வெற்றி, வெற்றி என்றே உலகம் உங்களை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தோல்வி பற்றியும் சிந்திப்பது மிகவும் முக்கியம். சான்டி ஃபெல்மேன் என்பவர் சொல்வதைத்தான் நீங்கள் மனதில் நிறுத்தி இயங்க வேண்டும்: "தோல்வி உன்னை தோல்வி அடையச் செய்யும்முன், நீ தோல்வியைத் தோல்வியடையச் செய்!'

ஒருவேளை தோல்வியைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லையென்றால், என்ன செய்வது? மீண்டும் முயல்வதுதான் ஒரே வழி. "முயற்சி திருவினையாக்கும்' என்கிறது வள்ளுவம்.

என்னதான் முயன்றாலும், எத்தனை தடவைகள் முயன்றாலும், சில நேரங்களில் தோல்வியைத் தோல்வியடையச் செய்ய முடிவதில்லையே, என்ன செய்வது? கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது:


நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்;
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.

நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இந்த ஷ் காரணியை எப்படிக் கைக்கொள்வது? ஆன்மிக நம்பிக்கை உடையவர்கள் "இறைவனின் சித்தம்' என்று கடந்து செல்வார்கள்.

நல்லநேரம், நற்பேறு, பாக்கியம், கொடுப்பினை, ஊழ், தலைவிதி என்றெல்லாம் சிலர் விளக்கம் சொல்வார்கள். வாழ்வில் எப்போதும் எல்லாவற்றையும் நம் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது எனும் அடிப்படை உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் புழங்கும் "அமைதிப் பிரார்த்தனை' ஒன்று இப்படி வேண்டுகிறது: ""இறைவா/இயற்கையே, என்னால் மாற்றவியலாத விடயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், மாற்றவொண்ணும் விடயங்களை மாற்றும் தைரியத்தையும், இரண்டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை அறியும் ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக!''

தோல்வியுறும் திறன் மிகவும் முக்கியமானது. ஒரு தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தோற்றுப்போனால், வெற்றி பெற்றவரை வாழ்த்திவிட்டு முன்னேறிச் செல்லுங்கள். ஒரு தேர்வில் மீண்டும் மீண்டும் முயன்றும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து, கடைசி வாய்ப்பையும் இழந்துவிட்டீர்கள் என்று வையுங்கள். இயற்கை உங்களுக்கு வேறு ஏதோ திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து, தொடர்ந்து செல்லுங்கள். தோல்வியுறும் திறனைவிட, இந்த தொடரும் திறன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

குத்துச்சண்டையில் தோல்வியாளர் என்பவர் விழுந்தவர் அல்ல; மீண்டும் எழாமல் வீழ்ந்தே கிடப்பவர்தான். அதேபோல, வாழ்க்கையிலும், விழுவது பிரச்னை அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் பிரச்னை. எனவே தோல்விகளை வெல்வது என்பது தொடரும் விடா முயற்சிதானே தவிர, தப்பித்தல், தவிர்த்தல், தற்கொலை போன்ற பெருந்தோல்வி ஒன்றை நோக்கி தாவிச் செல்வதல்ல.

தற்காப்புத் திறன்:

தோல்விகளைப் போலவே வாழ்வில் ஏராளமான இடறல்களும் ஏற்படலாம். தோல்விகளைப் போலல்லாமல், இடறல்களை உங்களால் கட்டுப்படுத்த இயலும். அவற்றிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதை தற்காப்புத் திறன் என்று அழைக்கலாம். மனித வாழ்வின் இன்றியமையாத அம்சங்கள் நான்கு: உயிர் பிழைத்திருத்தல், நல்வாழ்வு வாழ்தல், அடையாளம் கொண்டிருத்தல், விடுதலையோடிருத்தல்.

உயிர்ப் பிழைத்திருத்தல் என்பது உடல்நலம், மனநலம் பேணல், நீச்சல் தெரிந்திருத்தல், பாதுகாப்புக் கலைகள் அறிந்திருத்தல் போன்றவற்றை உள்ளடக்கும்.

நல்வாழ்வு வாழ்தல் என்பது சமூக-பொருளாதார- அரசியல் பரிவர்த்தனைகளில் நேர்மை, காவல்துறை, நீதித்துறை போன்ற அரசுத் துறைகளோடான உறவுகளில் தலைநிமிர்ந்து நிற்றல் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

அடையாளம் கொண்டிருத்தல் என்பது அடிப்படை அடையாளங்களைத் தக்கவைத்து, அவற்றுக்கிடையே திறமையுடன் ஊடாடி, அவற்றைச் சிதைக்கும் முயற்சிகளை தடுத்தழித்தல் போன்றவைதான்.

விடுதலையோடிருத்தல் என்பது அடிப்படை உரிமைகளை, பாத்யதைகளை, சுவாதீனங்களைப் பாதுகாத்துக் கொள்வதை உள்ளடக்கும்.

இன்னோரன்ன வாழ்வியல் அம்சங்களை தற்காத்துக் கொள்ளவில்லை என்றால், எளிதில் இடறிவிடுவீர்கள். சிறு இடறல்கள் பெருந்தோல்விகளுக்கு இட்டுச் சென்று விடும் ஆபத்து எப்போதுமே தொக்கி நிற்கிறது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

எனும் வள்ளுவம் வழங்கும் கோட்பாடு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உரியதுதான்.

சமநிலை பேணும் திறன்:

நாமெல்லாம் சூப்பர்மேன்கள் அல்ல, சராசரி மனிதர்கள்தாம். நம்மை சில வேளைகளில் அச்சம், கவலை, கழிவிரக்கம், குற்றவுணர்ச்சி போன்ற எதிர்மறை உணர்வுகள் பீடிக்கலாம். அப்போது கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலைக் கேளுங்கள்:

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கையில் எது வந்தாலும், என்ன நடந்தாலும், உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் சமநிலைக்காக்கும் திறன்தான் வாழ்வின் அதிமுக்கியமான திறன்.

ஒருமுறை ஒரு கடிதத்தை மிக அவசரமாகப் பதிவு அஞ்சலில் அனுப்புவதற்காக தானியில் (ஆட்டோ ரிக்ஷாவில்) பயணித்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நிமிடங்களில் அஞ்சல் நிலையத்தின் அந்தச் சேவை மூடப்பட்டுவிடும் என்பதால், இருக்கையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன்; உடலே இறுகிப்போய் இருந்தது. மூச்சுக்கூட முழுமையாய் விடமுடியவில்லை. பரபரப்பும், படபடப்பும் தாங்க முடியாமல் இருந்தன.

இந்த அனுபவத்தை என்னுடைய யோகா ஆசிரியரிடம் சொன்னேன். பொறுமையாகச் செவிமடுத்த அவர், அமைதியான குரலில் கேட்டார்:

""அவ்வளவு காத்திரமான நெருக்கடி உணர்வோடுநீங்கள் பயணித்தது தானியின் வேகத்தை அதிகரித்ததா?''

""இல்லை''

""போக்குவரத்தைச் சீர்செய்து உங்கள் தானிக்கு தனிவழி ஏற்படுத்திக் கொடுத்ததா?''

""இல்லை''

""அஞ்சல் நிலையத்தின் அலுவல் நேரத்தை மாற்றியமைத்ததா?''

""இல்லை''

""அப்படியானால் ஆயாசமாக உட்கார்ந்திருந்து, ஆழமாக மூச்சுவிட்டு, சுற்றுமுற்றும் கண்ணுற்று சுகமாகப் பயணித்திருக்கலாமே?'' என்னிடம் பதிலேதும் இருக்கவில்லை.

உள்ளுக்குள் சமநிலையைப் பேணிக்கொள்ள பலரும் பல வழிகளைக் கடைபிடிக்கிறோம். சிலர் "நடப்பவை எல்லாம் நல்லதற்கே' என்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.

ஒருமுறை ஒரு ராஜா வேட்டைக்குப் போகும்போது தனது கட்டைவிரலைத் தவறுதலாகத் துண்டித்துக் கொண்டுவிட்டாராம். அருகேயிருந்த அமைச்சர், "" அதுவும் நல்லதற்குத்தான்'' என்று சொன்னாராம். கோபமடைந்த ராஜா, அமைச்சரை சிறையில் அடைத்துவிட்டார். அடுத்த முறை ராஜா வேட்டைக்குச் சென்றபோது, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் அவரைப் பிடித்து, தங்களின் கடவுளுக்கு பலிகொடுக்கத் தீர்மானித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஒருவர் பலிகிடாவுக்குக் கட்டைவிரல் இல்லை என்பதை கண்டுபிடித்துச் சொன்னார். முழுமையாக இல்லாதவரை பலிகொடுக்க முடியாதென்று காட்டு மிராண்டிகள் ராஜாவை விட்டுவிட்டார்கள்.

"தப்பித்தோம், பிழைத்தோம்' என்று ஓடோடிவந்த ராஜா, நேராகச் சிறைக்குப் போய், அமைச்சரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி, ""அமைச்சரே, நீர் கூறியது சரிதான். எனக்கு கட்டைவிரல் போகாமலிருந்திருந்தால், என்னைப் பலிகொடுத்திருப்பார்கள்'' என்று அரற்றினாராம். அமைச்சரை சிறையில் தள்ளியமைக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கோரினார். ஆனால் அமைச்சரோ, ""அதுவும் நல்லதற்குத்தான்'' என்றார். குழம்பிப்போன ராஜா, ""அதெப்படி?'' என்று வினவினார். அமைச்சர் சொன்னார்: ""நீங்கள் என்னைச் சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால், நான் உங்களோடு வேட்டைக்கு வந்திருப்பேன். என்னைப் பிடித்து பலிகொடுத்திருப்பார்களே?''

சிலர் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதால், வருவதை வருவதுபோல எதிர்கொள்வோம் என்று இயங்குகின்றனர்.

ஒரு விவசாயி ஓர் அழகான பெண் குதிரையை
அன்புடன் வளர்த்து வந்தார். ஒருநாள் திடீரென அந்தக் குதிரை காணாமற்போய் விட்டது. அக்கம்பக்கத்தார் வந்து விசாரித்து ஆறுதல் சொன்னார்கள். விவசாயி, ""இது நல்லதா, கெட்டதா'' என்று யாருக்குத் தெரியும்? என்று பதிலளித்தார்.

ஓரிரு வாரங்கள் கழித்து அந்தப் பெண் குதிரை வாட்டசாட்டமான ஓர் ஆண் குதிரையோடு திரும்பி வந்து, சினையாகி, ஓர் அழகான குட்டியை ஈன்றது. கிராமத்தார் "இது உங்களின் பெரும் பாக்கியம்' என்றெல்லாம் விவசாயியைப் பாராட்டிப் புளகாங்கிதமடைந்தனர். விவசாயி, ""இது நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?''என்று பதிலளித்தார்.

ஒரு வருடம் சென்ற நிலையில், அந்த குதிரைக் குட்டியின் மீதேறி விளையாடிய விவசாயியின் ஒரே மகன் கீழே விழுந்து, அடிபட்டு, நடக்கமுடியாமல் ஆகிப்போனான். ஊர்க்காரர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்கள். விவசாயி, ""இது நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?'' என்று பதிலளித்தார்.

சில வருடங்கள் கழித்து ஒரு பெரும் போர் வந்து, உடல் திறனுள்ள இளைஞர்கள் அனைவரும் கட்டாய இராணுவச் சேவைக்கு அழைக்கப்பட்டு, பெரும்பாலானவர்கள் உயிரிழந்தனர். விவசாயியின் ஒரே மகன் மட்டும் உயிர்
தப்பினான்.

கவிஞர் டி. எஸ். இலியட் சொல்வது போல, ""நல்லதோ, கெட்டதோ, காலச்சக்கரம் கடிதில் சுழலட்டும். நம் கடன் பணிசெய்து கிடப்பதே என்றியங்குங்கள்''

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT