இளைஞர்மணி

இளைஞர்களின் முன் முயற்சி... தீ நுண்மிகளை அழிக்கும் கருவிகள்!

ந. ஜீவா

""கரோனா தீநுண்மி தொற்று மனிதர்களின் வாழ்க்கையைப் பலவிதங்களில் மாற்றி அமைத்து விட்டது. நமக்குப் பல பாடங்களை அது கற்றுக் கொடுத்துள்ளது. அவற்றில் ஒன்று ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுகாதாரம்.

அதுவும் ஏதோ தனி நபரின் விருப்பத்தைச் சார்ந்ததல்ல. தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவது அவசியமான ஒன்றாகிவிட்டது'' என்கிறார் கவின்குமார் கந்தசாமி.
கோவையில் உள்ள "ஙவடடஉ வெல்னெஸ் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தனது நண்பர் ராஜா பழனிசாமியுடன் இணைந்து நடத்திவரும் அவர் அந்த நிறுவனம் மூலமாக, கரோனா தீ நுண்மியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் கருவிகளை வழங்கி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த கவின்குமார் ஏற்காடில் உள்ள "மாண்ட்ஃபோர்ட் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்தவர். இளநிலைப் பட்டப்படிப்பை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலும், முதுகலைப் பட்டப்படிப்பை பிரான்சின் ரூயென் நகரிலும் படித்தவர். பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்.
கரோனா இவருடைய நிறுவனத்தின் போக்கை வெகுவாக மாற்றிவிட்டது. இவருடைய நிறுவனம் தயாரித்துள்ள "மை யூவி ஒன்' என்ற தூய்மைப்படுத்தும் கருவி, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறையின் (டிஎஸ்ஐஆர்) அங்கீகாரச் சான்றைப் பெற்றுள்ளது.
இந்த தூய்மைப்படுத்தும் கருவி புற ஊதாக் கதிர் "சி' யை பாக்டீரியாக்களை, கரோனா தீ நுண்மி உள்ளிட்ட பல்வேறு தீ நுண்மிகளைக் கொல்லும் திறன் படைத்தது. இந்தக் கருவியை எடுத்துச் சென்று உங்களுடைய கம்ப்யூட்டரின் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், மேஜை, கதவின் கைப்பிடி என எல்லாவற்றையும் தூய்மையாக்கலாம். இந்தக் கருவியை கிருமிகள் நிறைந்துள்ள பொருளின் அருகே பிடித்தால், 40 விநாடிகளில் 7 அங்குல தூரத்தில் உள்ள கரோனா தீநுண்மி உள்ளிட்ட எல்லாவிதமான கிருமிகளையும் இந்தக் கருவி கொன்றுவிடுகிறது.
இந்தக் கருவிக்குள் உருண்டோடும் ஒரு பந்து வடிவிலான சென்சார் உள்ளது. கருவியை நீங்கள் பிடிக்கும்விதத்துக்கு ஏற்ப அது இந்தக் கருவிக்குள் முன் பின்னாக உருண்டோடுகிறது. நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டிய ஏதேனும் ஒரு பொருளின் மீது இந்தக் கருவியைக் காட்டும்போது இந்த பந்துவடிவிலான சென்சார் எந்த இடத்தில் கிருமி, தீநுண்மி தொற்று உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறது. சென்சார் தந்த தகவலுக்கு ஏற்ப, அந்த இடத்தில் புற ஊதாக் கதிர் "சி' படுகிறது. கிருமிகள், தீ நுண்மிகள் அழிந்துவிடுகின்றன.
இந்த "மை யூவி ஒன்' கருவியை மின்னேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் செல்போனை சார்ஜ் செய்வதற்காக வைத்திருக்கிற பவர் பேங்க்கைப் பயன்படுத்தியும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 தடவை கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இந்தக் கருவியைத் தற்போது பல அலுவலகங்களில், வீடுகளில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிறுவனம் தயாரித்துள்ள இன்னொரு தூய்மைப்படுத்தும் கருவி, 40 லிட்டர் கொள்ளளவு உடைய "டேபிள்டாப் சானிட்டைசர்' ஆகும். இந்தக் கருவியும் புற ஊதாக் கதிர் "சி' யைப் பயன்படுத்தியே கிருமிகள், தீ நுண்மிகளைக் கொல்கிறது. இந்தக் கருவிக்குள் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டிய எந்தப் பொருளையும் வைக்கலாம். அது புத்தகமாக, ரூபாய் நோட்டாக இருக்கலாம். தண்ணீரைக் கொண்டு கழுவி தூய்மைப்படுத்த முடியாத எந்தப் பொருளையும் இந்தக் கருவிக்குள் வைத்தால், சிறிது நேரத்தில் அதில் உள்ள கிருமிகள், தீ நுண்மிகள் அழிந்துவிடுகின்றன. இந்த டேபிள் டாப் சானிட்டைசரில் 11 வாட்ஸ் திறனுடைய மூன்று புற ஊதாக் கதிர் "சி' விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு விளக்கும் 254 என்எம் அலைநீளம் உள்ள புறஊதாக் கதிர்வீச்சை நிகழ்த்துகின்றது.
இந்த நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பு, கரோனா தீநுண்மியில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் முகக்கவசம். இந்த முகக்கவசத்தை நீங்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இது நாம் இப்போது பயன்படுத்துகிற சாதாரண முகக்கவசம் அல்ல. வித்தியாசமான துணியைப் பயன்படுத்தி இந்த முகக்கவசத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த முகக் கவசத்தை காற்று மாசு உள்ள இடங்களிலும் பயன்படுத்தலாம். இந்த முகக்கவசத்தின் துணியில் கார்பன் மற்றும் காப்பர் வடிகட்டிகள் உள்ளன. ஒரு தடவை இந்த முகக் கவசத்தை ஒருவர் வாங்கினால் 6 மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.
""கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முகக்கவசங்களால் நிரம்பி வழிகின்றன. பலவிதமான முகக்கவசங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாங்கள் தயாரித்துள்ள முகக்கவசத்தை எல்லாவிதமான தட்பவெப்ப நிலைகளிலும், மாசு நிறைந்த பகுதிகளிலும், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நிறைந்துள்ள பகுதியிலும் பயன்படுத்தலாம். பொதுவாக எங்களுடைய தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் நம்மைச் சூழ்ந்துள்ள ஆபத்தான பகுதிகளில் இருந்து ஒருவர் எளிதாகத் தப்பிவிடலாம்'' என்கிறார் கவின்குமார்.
அவருடைய நண்பரான ராஜா பழனிசாமி விமான ஓட்டி பயிற்சி பெற்றவர். சட்டம் படித்தவர். ஆஸ்திரேலியாவிலும் தென் ஆப்ரிக்காவிலும் பயின்றவர். இவர்கள் இருவரும் இணைந்தே இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
""எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் மக்களிடம் இருவேறு வழிகளில் செல்கின்றன. ஒன்று நேரடியாக மக்களிடம் நாங்களே விநியோகிப்பது. அதாவது டைரட் டூ கன்ஸ்யூமர் (டி2சி) முறையாகும். இன்னொன்று பிற வணிக நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் மூலமாக விநியோகிப்பது. இந்த முறையை பிசினஸ் டூ பிசினஸ் (பி2பி) என்று அழைக்கலாம்.
இந்த இரண்டாவது முறையின் மூலம் 95 கல்வி நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பு வைத்திருக்கிறோம். கோயம்புத்தூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கிற எங்கள் நிறுவனத்துக்கு பெங்களூருவில் கிளை உள்ளது. இந்தியாவின் 14 மாநிலங்களில் எங்களுடைய விற்பனையாளர்கள் உள்ளனர். மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எங்கள் தயாரிப்புகளை விநியோகிக்கும் மையங்களை ஏற்படுத்தி இருக்கிறோம் ஒப்பந்த அடிப்படையில் நிறுவனத்துக்கு வெளியேயும் தேவையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன'' என்கிறார் பெருமையாக கவின்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT