இளைஞர்மணி

ஆங்கில மொழித்திறன்... விளையாட்டாகவே வளர்த்துக் கொள்ளலாம்!

DIN

ஆங்கிலத்தில் எவ்வளவுதான் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு சொல் குறித்து சந்தேகம் வரும். அகராதிகளைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்வோம். ஆங்கில மொழியில் திறன் பெறுவதற்கு புத்தகங்களைப் படிப்பது, ஆங்கில நாளிதழ்களைப் படிப்பது, ஆங்கில தொலைக்காட்சிச் செய்திகளைக் கேட்பது என பல வழிகள் இருக்கின்றன. ஆங்கில மொழித்திறனை விளையாட்டாகவே வளர்த்துக் கொள்ள ஓர் இணையதளம் உதவுகிறது. http://www.wordplays.com/ என்ற இணையதளம்தான் அது.

இந்த இணையதளத்தில் குறுக்கெழுத்துத் தீர்வாளர் (கிராஸ்வேர்ட் சால்வர்), குழம்பிக் கிடக்கும் சொல் கண்டுபிடிப்பாளர்(ஸ்கிரேபிள் வேர்ட்ஃபைண்டர்), தடுமாற்றம் (பாகிள்), உரை திருப்பம் (டெக்ஸ்ட் ட்விஸ்ட்), சுடோக்கு, பிறழ்மொழி தீர்வாளர், சொல் விளையாட்டு ஆகிய முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

குறுக்கெழுத்துத் தீர்வாளர் எனும் தலைப்பில் சொடுக்கினால், அங்கிருக்கும் மறைந்து கிடக்கும் சொல்லுக்கான குறிப்பு எனும் கட்டம் வரும். அதில் நமக்குத் தேவையான சொல்லுக்குரிய குறிப்பை- தகவலை- உள்ளீடு செய்ய வேண்டும். அதற்கடுத்துள்ள கட்டத்தில் எழுத்துகள் அல்லது வடிவம் என்பதில் தேவையானதை உள்ளீடு செய்ய வேண்டும். கீழுள்ள விடை தேடும் பொத்தானைச் சொடுக்கினால், நாம் உள்ளீடு செய்த குறிப்புடன் தொடர்புடைய பல்வேறு சொற்களை நாம் பார்க்க முடியும். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கேற்க இது உதவும். புதிய - ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிறைய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

குழம்பிக் கிடக்கும் சொல் கண்டுபிடிப்பாளர் எனும் தலைப்பில் சொடுக்கி ஒரு சொல்லை உள்ளீடு செய்து அதன் கீழிருக்கும் மூன்று கட்டங்களுள் நமக்குத் தேவையான சொல்லிற்கான தொடங்கும் எழுத்து, இடையிலுள்ள எழுத்து, முடிவடையும் எழுத்து என்று மூன்று எழுத்துகளையும் உள்ளீடு செய்ய வேண்டும். அதன் கீழுள்ள விடை தேடும் பொத்தானைச் சொடுக்கினால், நமக்குப் பல்வேறு சொற்கள் பட்டியலிட்டுக் கிடைக்கின்றன. அவற்றுள் நமக்குத் தேவையான சொல்லை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பட்டியலிடப்படும் சொற்களின் மேல் சொடுக்கினால் அதன் பொருளையும் அறிந்து கொள்ள முடியும்.

தடுமாற்றம் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் சதுரக் கட்டத்தினுள் இருக்கும் எழுத்துகளைக் கொண்டு எவ்வளவு சொற்களை உருவாக்க முடியும் என்பதற்கான விளையாட்டு இடம் பெற்றிருக்கிறது. இங்கு 4ல4 அல்லது 5ல5 என்று கட்டங்களைத் தேர்வு செய்து விளையாட முடியும். இதே போன்று ஒரு கட்டத்தில் எழுத்தில்லாமலும், விரைவில் விளையாடுவதற்கான விளையாட்டும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த விளையாட்டிற்காகத் தரப்பட்டிருக்கும் நேரத்திற்குள் நாம் எத்தனை சொற்களை உருவாக்குகிறோம் என்பதைக் கணக்கிட்டுக் காண்பிக்கிறது.

உரை திருப்பம் எனும் தலைப்பின் கீழுள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சில எழுத்துகளைக் கொண்டு நம்மால் எத்தனைச் சொற்களை உருவாக்க முடியும் என்பதற்கான விளையாட்டு இது. இங்கு எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சொற்களையும் நிரப்பி விட வேண்டும். நிரப்பப்பட்ட சொற்களுக்கு ஏற்ப நமக்கு மதிப்பெண் கிடைக்கிறது. அனைத்துச் சொற்களும் நிரப்ப முடியாவிட்டாலும், இறுதியில் நமக்கு அனைத்துச் சொற்களும் நிரப்பப்பட்டுக் கிடைக்கின்றன. இதன் மூலமும் நிறைய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

சுடோக்கு எனும் தலைப்பின் கீழான பக்கத்தில் எழுத்து, எண் எனும் இரு வகையான சுடோக்குகளை எளிது, கடினம், மிகக்கடினம் என்று மூன்று பிரிவுகளில் தேர்வு செய்து விளையாட முடிகிறது.

பிறழ்மொழி தீர்வாளர் எனும் தலைப்பின் கீழான பக்கத்தில் பிறழ்மொழிச் சொல்லினை உள்ளீடு செய்து, அதற்கான பொருளினை அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு கீழ்ப்பகுதியில் சில நாடுகளின் வழக்கத்திலுள்ள ஆங்கிலத்தில் தேடுவதற்கான வசதியும் தரப்பட்டிருக்கிறது.

சொல் விளையாட்டு எனும் தலைப்பின் கீழ் சொல்லுக்குள் சொல், சொல் உருபுகள், தினசரி மறைகுறியீட்டுத் தகவல், பிறழ்மொழி, எழுத்துப் பல்கோணம், குறுக்கெழுத்து சவால்கள் போன்ற துணைத்தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சொல் விளையாட்டுகள் தரப்பட்டிருக்கின்றன.

சொல் புதிர் எனும் தலைப்பின் கீழ் சொல்லுக்குள் சொல், எழுத்துக் குவியல், குறுக்கெழுத்து உதவி, சொல் உருபு, மறைகுறியீட்டுத் தகவல் போன்ற துணைத் தலைப்புகள் அளிக்கப்பட்டு சொல் புதிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகரமுதலி எனும் தலைப்பில் ஆங்கில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

இப்பகுதியில் பன்மொழி சொல் விளையாட்டுகள், ஆங்கில சொல் மதிப்பு போன்ற தலைப்பின் கீழும் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இணையதளங்களுக்குச் சென்று பல்வேறு பயனில்லாத தகவல்களைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல், நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT