இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 15

சுப. உதயகுமாரன்

பாரதி போல "சுடர்மிகு ஒளியுடன்' திகழ்பவர்கள், தாம் பெற்றிருக்கும் அந்த ஒளியை வாழ்க்கையின்மீது சிந்தி, சிறக்கச் செய்வதைத்தான் நாம் படைப்புத் திறன் என்கிறோம். புதிய கருத்துகளை உருவாக்குவது, அல்லது தற்போதைய கருத்துகள் மீது புதிய பார்வையைச் செலுத்துவதுதான் படைப்புத் திறன்.
உங்கள் உடலும், உள்ளமும், ஆன்மாவும் ஒன்றோடொன்று ஆழ்ந்த இணைப்பிலிருக்கும்போது, அதாவது நீங்கள் உங்களில் உறுதியாக நிலைத்திருக்கும்போது, உள்ளுக்குள் ஒரு பேரமைதி ததும்பி நிற்கும்போது, படைப்புத் திறன் வெளிப்படுகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும், கடற்காற்றும், கருமேகங்களும், குளிர்மலையும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு பெருமழைக்குத் தயாராவது போல, உங்களுக்குள் இருக்கும் படைப்புத் திறனுக்கும் ஒரு தயாரிப்புக் காலம், பருவம் இருக்கிறது.
இரண்டாவதாக, தானிட்ட முட்டைகளை தாய்ப் பறவை பொறுமையாக, கவனமாக அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல, உங்களுக்குள் திரண்டிருக்கும் "நுண்மாண் நுழைபுலம்' (நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு) பொரிந்து புறப்படும் முன் குறிப்பிட்ட காலம் அடைகாக்கப்படுகிறது.
மூன்றாவதாக, உங்களுக்குள் சிதறிக் கிடக்கும் எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்கள் போன்ற முத்துகள் எல்லாம் ஒன்று திரண்டு, ஓர் உருப்பெற்று குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.
நான்காவதாக, உலகின் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளுக்குள்ளாகி, "ஆம், இது ஒரு விளக்கேதான்' என்று உலகம் ஏற்றுக் கொள்கிறது.
படைப்புத்திறன் என்பது மேற்குறிப்பிட்ட நான்கு நிலைகளைக் கொண்டதென நம்முடைய புரிதலுக்காகப் பகுத்துக் கொள்கிறோம். இவற்றுக்கிடையேயான காலம், தூரம், தாக்கம் போன்றவற்றுக்கெல்லாம் எந்தவிதமான துல்லியமான சூத்திரமும் கிடையாது.
பண்பும், பயனும் ஒன்றாக இருக்கும் இந்த படைப்புத் திறனை எப்படிக் கண்டுணர்வது, வளர்த்தெடுப்பது? "தாயறியாத சூலில்லை' என்பது போல, படைப்புத் திறன் உடையவர்களால் தங்களின் மனமும், இதயமும், ஆன்மாவும் பீறிட்டு எழுவதை நிச்சயமாக உணர முடியும். முளையிலேயே தெரியும் அந்த விளையும் பயிரை பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர், நண்பர்கள் கண்டுணர்ந்து தூண்டிவிடலாம்.
படைப்புத் திறன் மிளிர அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆம். அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்காமல், துணிந்து எழுந்து நிற்க வேண்டும்; உலகம் ஆரத்தழுவி அணைக்குமா அல்லது அடித்துக் கீழே தள்ளுமா என்றெல்லாம் கவலைப்படாது, படைத்து, பொது சமூகத்துக்குப் படையல் இட வேண்டும்.
படைப்புத் திறனுக்குப் படிப்போ, பட்டமோ எதுவும் தேவையில்லை. என்னுடைய தந்தைவழிப் பாட்டி தங்கம்மாளின் ஊர், குமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்பதால், எங்கள் ஊரான இசங்கன்விளையில் அவரை மண்டைக்காட்டா(ள்) என்றே அழைப்பார்கள் (பெயர் வைப்பதிலுள்ள படைப்புத் திறனைப் பாருங்கள்!). அடிப்படைக் கல்வியறிவு கூட இல்லாத மண்டைக்காட்டாளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. ஆனால் அவரைவிடச் சிறந்த கதைசொல்லியை நான் கண்டதேயில்லை. இரவு தூங்கும்போது இராமாயணம், மகாபாரதம், நல்ல
தங்காள், செம்புலிங்கம் போன்ற கதைகளை அவ்வளவு அற்புதமாகச் சொல்வார். துணைக் கதைகளுக்குள் புகுந்து, கிளைக் கதைகளுக்குள் ஊடாடி, முதுமொழி, பழமொழி தொடர்பான கதைகளைச் சொல்லி, மீண்டும் பெருங்கதைக்குத் திரும்பி, கதைகளின் அருங்காட்சி
யகம் ஒன்றைக் கண்டுகளிக்கும் அனுபவத்தைப் பாட்டி ஏற்படுத்தும் வித்தையை எண்ணி இன்றும் வியக்கிறேன்.
படைப்புத்திறன் ஜொலிக்க கட்டற்ற கற்பனை வளம் வேண்டும். யதார்த்தத்தை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், படைப்புத்திறன் வெளிப்படாது. அகக்கண்ணைத் திறந்து அண்டசராசரம் எங்கும் எட்டிப் பார்க்க வேண்டும்.
ஒருவர் தன்னுடைய அறிவை, அனுபவங்களை, அவதானிப்புகளைப் படைப்புத் திறனோடு வெளியிடுவதுதான் கவிதையாக, பாடலாக, இசையாக, நாட்டியமாக, கதையாக, நாடகமாக, திரைப்படமாக, ஓவியமாக, சிற்பமாக எப்படியெல்லாமோ மிளிர்கிறது. படைப்புத் திறன் நுண்கலைகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல. ஒரு தச்சரோ, கொத்தனாரோ, யாராக இருந்தாலும் தனக்குள் ஒளிந்து கிடக்கும் படைப்புத் திறனைக் கண்டுபிடித்து வெளிக் கொணர முடியும்.
அதேபோல, படைப்புத் திறன் ஒரு சில விசேட மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானதுமல்ல. "தொட்டனைத் தூறும் மணற்கேணி' போல, படைக்கப் படைக்கத்தான் படைப்புத் திறன் ஊற்றெடுக்கும். பயிற்சியாலும், முயற்சியாலும் அதை வளர்த்தெடுக்க முடியும்.
புதிதாக திருமணம் செய்துகொள்பவர்கள் ஏராளமான வேறுபாடுகளை எதிர்கொள்வார்கள். அனைத்திலும் கருத்துப் பரிமாற்றம் நடத்தி, விட்டுக் கொடுத்து, தத்தம் விருப்பு, வெறுப்புகளில் அவர்கள் பெரும் மாற்றங்கள் கொண்டு வந்தாக வேண்டும். எந்தெந்தப் பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் எழலாம் என்று பட்டியலிட முயன்றால், அதற்கு எல்லையே கிடையாது. ஆனால் இந்தக் கருத்தை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும். என்ன செய்வது?
டாம் ஃபர்லாங் என்கிற ஓர் அமெரிக்கர் "புதுமணத் தம்பதியருக்கு ஒரு வார்த்தை' என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதி அதைச் சாதிக்கிறார்:
பற்பசைக் குழாய் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:
அதிலே தம்பதியர் தலையைப் பிய்த்துக் கொள்வோம்.
ஒருவர் குழாயின் நடுவில் பிதுக்குவார்,
மற்றவரோ அடிப்பகுதியில் அமுக்குவார்,
இருவருமே இப்பழக்கத்தை மாற்றுதல் கடினம்.
இப்படி ஒரு நிலை உங்களில் எழுந்தால்
உடனே இரண்டு குழாய்கள் வாங்குவீர்;
ஒன்று அவனுக்கும், இன்னொன்று அவளுக்கும்.
கண்ணடித்து, கொஞ்சம் சிரித்தவாறே உடன்படுவீர்:
வாழ்வோ, சாவோ, உடல் நலிவோ, நலமோ,
அடுத்தவர் பற்பசைக் குழாயை அங்கிருந்து
அணுவளவும் நகர்த்தி அகற்றமாட்டோம்.
நீவிர் மகிழ்வாய் வாழும் வழிவகை இதுதான்!
யாரோ எழுதிய "பள்ளத்தாக்கில் ஓர் ஆம்புலன்ஸ்' என்றோர் ஆங்கிலக் கவிதையை அண்மையில் படித்தேன். அந்த அபாயகரமான மலையுச்சியில் இயற்கை அழகை ரசிக்கச் சென்ற, அவ்வப்போது அவ்வழியே நடந்து சென்ற பலர், தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு ஒரு வழி காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
விழுகிறவர்களின் மீதான இரக்கமும், ஊர் மக்களின் மீதான கரிசனமும் மேலோங்க, அப்பகுதி மக்களும், பாதசாரிகளும் பெருந்தன்மையாய் நன்கொடைகள் வழங்க, பள்ளத்தாக்கில் ஓர் ஆம்புலன்ஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
அப்போது அந்த வழியே வந்த ஓர் அறிஞர் பெருமான் ஆம்புலன்ஸ் முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டார். பிரச்னையின் மூலகாரணத்தைக் கண்டுகொள்ளாமல், முகிழ்க்கும் விளைவை மாற்றியமைக்க முனைகிறார்களே மக்கள் என்று வருந்தினார். ""வருமுன்னர் காப்பதா, வந்த பின் ஓடுவதா?'' என்று மக்களிடம் கேட்டார். சிந்தித்த அப்பகுதி மக்கள், ""முளையிலேயே கிள்ளி எறிவோம், மலையுச்சியில் வேலி அமைப்போம்'' என்று ஆர்ப்பரித்தனர். ஒரு படைப்பு எத்தனை லாகவமாக நம்மைச் சிந்திக்கவைக்கிறது,
பாருங்கள்.
அன்றாடம் நாம் வாழும் நமது வாழ்வின் யதார்த்தத்தை ரிச்சர்ட் லெட்டிஸ் எனும் ஓர் அமெரிக்கர் அற்புதமான படைப்புத் திறனுடன் பாங்காகச் சொல்வதைக் கண்ணுறுங்கள்:
திங்கள் ஒரு மோசமான நாள்; வேலைக்கு மீண்டும் வருவதால்!
செவ்வாய் இன்னும் சிறந்த நாள்; திங்கள் கடந்து சென்றதால்!
புதன் நம்பிக்கை அளிக்கும் நாள்; வாரத்தில் பாதி கடந்ததால்!
வியாழன் ஒரு தூங்குமூஞ்சி நாள்; பெரிதாக எதுவும் நடக்காததால்!
வெள்ளியோ ஆரவாரமான நாள்; வாரஇறுதி வந்துவிட்டதால்!
சனி, ஞாயிறு இரண்டு நாள் எல்லோருக்குமே இன்பத் திருநாள்!
அடுத்து வருவதும் அறிந்தோம்; மோசமானதொரு திங்கள் நாள்!
உள்ளுணர்வும், உந்தித் தள்ளும் ஊற்றுப் பெருக்கும் இல்லாமலாகி, வேகமும், பரபரப்பும், கட்டுப்பாடு
களும் ஆக்கிரமித்திருக்கும் நம்முடைய நவீன வாழ்க்கை, படைப்புத் திறனை மழுங்கடிக்கிறது.
"பசித்திரு, தனித்திரு, விழித்திரு' எனும் வள்ளலார் பெருமான் வழங்கும் மந்திரம் படைப்புத்திறனை வளர்த்தெடுக்க உதவும்.
"படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று புளகாங்கிதமடைந்த கவிஞர் கண்ணதாசன் பாடினார்:
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன், அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன். நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
ஆம், படைப்புத்திறன் மிக்க படைப்புகளுக்கு மட்டுமல்ல, அவற்றை படைப்பவர்களுக்கும் மரணமில்லை. படைப்புத்திறனால் நிலைத்திருக்க வழிதேடுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT