இளைஞர்மணி

இலக்கையும் திட்டமிடுங்கள்!

தினமணி

பெரும்பாலான சினிமாக்களில் பார்த்திருப்போம், ஏழையாக இருக்கும் ஒருவர் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறி விடுவார். இது  சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
யாருமே ஒரே நொடியில் பணக்காரனாக மாறிவிட முடியாது, ஏதேனும் லாட்டரிச் சீட்டில் பணம் கிடைத்தால் ஒழிய.  அதுவும் கூட தடை செய்யப்பட்டுவிட்டது. 
படிப்படியான வளர்ச்சி மட்டுமே சாத்தியம். அதுவே ஒருவருக்கு நிரந்தர உயர்வைத் தரும். 
ஒவ்வொரு மனிதனும் தற்பொழுது தாம் இருக்கும் நிலையை விட உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அந்தக் கனவை நனவாக்குவதற்கு ஒவ்வொரு மனிதனும் அந்த இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அதற்குக் கூட  படிப்படியாக  முயற்சிக்க வேண்டுமே தவிர, தடாலடியாக ஒரே நேரத்தில் இலக்கை நோக்கிய பயணம் அமைந்துவிடாது. அப்படி முயற்சி செய்தால் விபரீத விளைவுகளே ஏற்படும். 
உதாரணமாக , உடல்நலப் பிரச்னையால் அவதிப்படும் ஒருவரிடம் குறிப்பிட்ட விதத்தில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை சொல்லி இருப்பார். அந்த அளவுதான் மருந்தை எடுக்க வேண்டும். ஒரே நாளில் குணமாக வேண்டும் என நினைத்து அவர் குறிப்பிடும் அளவை விட கூடுதலாக மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
தனிமனித முன்னேற்றமும், சுய முயற்சியும் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான விஷயங்கள். அதேசமயம் அதை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும்போது சிலசமயங்களில் அதிக மருந்துகளை உட்கொள்ளும் போது ஏற்படும் பாதிப்பு போல எதிர்மறையான விளைவுகளை  அது ஏற்படுத்திவிடக் கூடும். 
பெரும்பாலோனோர் தற்போது தாங்கள் இருக்கும் நிலை போதுமானதாக இல்லை என்ற எண்ணத்தில் இருப்பார்கள். சிலர் மற்றவர்களைப் பார்த்து தாம் அந்த நிலையை அடைவதற்கு உரிய திறமை தம்மிடம் இல்லை என்று நினைப்பார்கள். இதனால் அவர்களைப் போல தாமும் உயரவேண்டும் என்று நினைத்து சுய முயற்சியில் பல வழிகளில் ஈடுபடுவார்கள். அது சில சமயங்களில் அதீத ஈடுபாட்டை கொடுத்து அவருடைய மற்ற செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 
சுய முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பவர்களில் பலர் தம்மால் அதை எட்ட முடியவில்லையே,  தமக்கு அந்தத் திறமை இல்லை என எதிர்மறையான எண்ணத்தை தமக்குள் உருவாக்கி கொள்வார்கள். இது கூட அவர்களின் சுய முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடும். நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்துடன் படிப்படியாக அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நம்மைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடும் எண்ணமும் உருவாகிவிடும். 
தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்திற்கும் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும். நம்மால் முடியும் என்று நினைத்தால் தன்னம்பிக்கை. நம்மால் மட்டுமே முடியும் என்று நினைத்தால் அது தலைக்கனம். 
அதுபோல, நம்முடைய முயற்சியையும் நம்மால் அளவீடு செய்ய முடியும். 
ஓர் இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது அந்த இலக்கை அடைய முடியும். இல்லையெனில் அடைய முடியாத நிலை கூட ஏற்படலாம். 
அத்தகைய நிலையில் இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இதில் வெற்றி பெற்றிருக்கலாம். அல்லது அடுத்த முறை இன்னும் கூடுதலாக முயற்சி செய்து அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நினைப்பது ஒருவிதம். இது சரியானது. 
அதே சமயம் இலக்கை நாம் அடைந்திருந்தால் தான் நமக்கு மதிப்பு. இப்பொழுது நமது மதிப்பு போய்விட்டது என்று நினைப்பது விபரீதம். இது சரியானது அல்ல. 
எனவே, எதிர்மறை எண்ணங்கள் நமது மனதில் ஏற்படாத வகையில் சுய முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்தால் மட்டுமே நான் மதிக்கப்படுவேன் என்று நினைப்பதே மிக தவறானது. அது நமது உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும்.   
இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி.  
எப்போதுமே நான் மதிப்பில்லாதவன் என்று யாரும் நினைக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதை உணர்ந்து செயல்பட்டாலே போதும். 
மனித வாழ்க்கையில் மாற்றம் என்பதைத் தவிர்க்க முடியாது.   மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான திறன்களை நம் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். குறையில்லாத மனிதன் என்று யாருமே இல்லை. எனவே 100 சதவீதம் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களை வருத்திக் கொண்டால் அது மூளைத்திறனைக் கூட பாதிக்கும். 
சுய முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன்னை பற்றிய சுய அக்கறையை மனதில் கொண்டு அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். 
சினிமாவில் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு அதுபோல பலர் முயற்சி செய்வார்கள். மிகப்பெரிய இலக்கை மனதில் இருத்திக் கொண்டு அதை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியமில்லாமல் போகலாம். இது அவர்களின் மன வலிமையை வெகுவாகக் குறைத்து விடக்கூடிய அபாயம் உள்ளது. 
அடைய முடியாத இலக்கை மனதில் கொண்டு அபாய குழியில் விழுந்து விடாதீர்கள். நமக்கு எது செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உதாரணமாக பிறரின் பேச்சைக் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ  இலக்குகளை நிர்ணயம் செய்யக்கூடாது. நமக்கு என்ன 
முடிகிறதோ அதை மட்டுமே செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
சுய முன்னேற்றம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் எப்போதும் அதை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பவர்கள் விரைவில் சுயநலம் கொண்டவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நல்ல குணத்தைக் கூட இழந்து விடும் சூழல் உருவாகும். நல்ல நட்புகளை   இழக்க நேரிடும். 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். எனவே எப்பொழுதும் பெரிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் மிகப்பெரும் ஏமாற்றங்களைக் கூட நாம் சந்திக்க நேரிடும். 
வெற்றியை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர்த்து, அந்த இலக்கை நோக்கி நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்து பயணிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் வாழ்க்கையில் அந்த இலக்கை தவிர்த்து மற்ற நல்ல விஷயங்கள் அனைத்தையும் இழந்து விடக்கூடிய சூழலும் உருவாகி
விடும். 
எப்போதும் உண்மையாக இருக்க பழகுவது நலன் பயக்கும். அத்துடன் அந்த இலக்கை அடைவதற்கான திறனை நாம் எப்போது வேண்டுமானாலும் பெற்றுவிட முடியும் என்று நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும். 
சுயமுன்னேற்றம் அவசியமான ஒன்றுதான். அந்த அவசியத்திலும் எது அத்தியாவசியமோ அதை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT