இளைஞர்மணி

வருங்கால பேட்டரி!

ஜீவா

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காற்று மாசுபடுவதற்குக் காரணமாக வாகனங்களில் இருந்து வரும் புகை இருக்கிறது. ஆனால் வாகனங்கள் இல்லாமல், வாழ்க்கை நடத்த முடியாது. வாகனங்களும் வேண்டும்; காற்றும் மாசடையக் கூடாது என்பதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் மின்சார கார்கள். இந்த கார்களில் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஹூண்டாய் முதல் போர்ஷே கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரை மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. மஹிந்திரா நிறுவனமும் மின்சாரக் கார்களை விற்பனை செய்கிறது.

மின்சாரக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி லித்தியம் அயன் பேட்டரியாக உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆகிறது. நீண்ட தூரம் இந்த லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள கார்களில் பயணம் செய்ய முடியவில்லை.

இந்தக் குறைகளைப் போக்கும்விதமாக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனமான "லாக்9 மெட்டீரியல்ஸ்' என்ற நிறுவனம் அலுமினியம் எரிசக்தி பேட்டரிகளைத் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனத்தை ஐஐடி - ரூர்க்கியில் பயின்ற விஞ்ஞானியான அக்ஷய் சிங்கால் உருவாக்கியிருக்கிறார்.

""பொதுவாக வாகனங்கள் இயங்கும்போது மின்சாரம் உற்பத்தியாகும். அது அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப்படும். பேட்டரியில் மின்சாரம் உற்பத்தியாகாது. ஆனால் நாங்கள் உருவாக்கிய இந்த அலுமினியம் ஃபியூயல் செல்ஸில் மின்சாரம் உற்பத்தியாகிறது. பிற பேட்டரிக்கும் எங்களுடைய பேட்டரிக்கும் அடிப்படையில் இந்த வேறுபாடு உள்ளது.

இந்த பேட்டரியில் அலுமினியம், தண்ணீர், கிராபெனி வடிவத்திலான கார்பன் ஆகியவை உள்ளன. இந்த கிராபெனியில் தண்ணீர் படும்போது, மின்சாரம்
உற்பத்தியாகிறது.

இதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுவதில்லை. வழக்கமாக காரில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி அதிக விலை உள்ளது. அதன் தயாரிப்புச் செலவும் அதிகம். மேலும் உலக அளவில் அதிகம் கிடைக்கும் மூலப் பொருள்களில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் உள்ளது. லித்தியமோ 25 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் லித்தியமோ, கோபால்ட்டோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்போது அதன் தேவைக்கு லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிப்பது சிரமமாக இருக்கும். தேவை அதிகரிக்கும்போது லித்தியம் பற்றாக்குறை ஏற்பட்டால், பேட்டரியின் விலை மேலும் அதிகமாகும். எனவே தொடர்ந்து லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டே நாங்கள் அலுமினியம் ஃபியூயல் பேட்டரிகளைத் தயாரிக்கத் தொடங்கினோம்'' என்கிறார் அக்ஷய் சிங்கால்.""வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சாரக் கார்களை சார்ஜ் செய்ய குறைந்தது 2 மணி நேரத்துக்கும் அதிகமாகும். அதிக தூரமும் பயணம் செய்ய முடியாது. ஆனால் இந்த அலுமினியம் ஃபியூயல் பேட்டரி பொருத்தப்பட்ட கார்களை 1000 கி.மீ. தூரம் ஓட்டிச் செல்லலாம். அதன் பிறகு, இந்த கார் பேட்டரியில் உள்ள அலுமினியம் பிளேட்களை மாற்றினால் போதுமானது. அதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். இந்த பேட்டரி வெப்பமடைவதில்லை. ஏனென்றால் பேட்டரியே தண்ணீரில்தான் இயங்குகிறது. 300 கி.மீ. பயணம் செய்தால் பேட்டரிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்'' என்கிறார் அக்ஷய்.

எதிர்காலத் தேவையை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த அலுமினியம் ஃபியூயல் பேட்டரி. தற்போது செல்போன் டவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் தருகின்றன. வருங்காலத்தில் இந்த பேட்டரி, டீசல் ஜெனரேட்டர்களின் இடத்தைப் பிடித்துவிட வாய்ப்புள்ளது. வீடுகளுக்கு, ஏடிஎம்களுக்கு எல்லாம் இந்த பேட்டரியைப் பயன்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT