இளைஞர்மணி

நிலவில் 4 ஜி!

27th Oct 2020 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

விண்வெளிக்கோ, நிலவுக்கோ செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு ரோவருடன் அழகான செல்ஃபி எடுத்துக் கொண்டோ, நிலவின் தரைப்பரப்பில் நடந்து சென்று கொண்டே லைவ் வீடியோவோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கற்பனையை விரைவில் நனவாக்க உள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

விண்வெளியில் "இணைய இணைப்பு' இதற்குத் தேவை. அதற்காக நிலவில் 4 ஜி நெட்வொர்க்கை பிரபல செல்லிடப்பேசி நிறுவனமான நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது.

2028-ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு தளத்தை உருவாக்கவும், விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது நாசா. அதற்காக கிரையோஜெனிக் உறைவு, தொலைநிலை மின் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ்மற்றும் 4ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பங்களை நிலவின் தரைப்பரப்பில் நிறுவுவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் 370 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2714 கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. ஆற்றல் சேமிப்பு, தகவல் தொடர்பு, மேற்பரப்பு மின் உற்பத்தி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண இத்தொழில்நுட்பம் உதவும் என நாசா நம்புகிறது. அதன் ஒரு பகுதியாக நிலவில் 4 ஜி நெட்வொர்க்கை அமைப்பதற்கான "டிப்பிங் பாயிண்ட்' தொழில்நுட்பத்தை மேம்படுத்த நோக்கியாவின் ஆராய்ச்சிப் பிரிவான பெல் லேப்ûஸத் தேர்வு செய்துள்ளது நாசா. இதற்காக அந்நிறுவனத்துடன் ரூ.102 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, நிலவில் தரைப்பரப்பில் 4ஜி/எல்டிஇ தொழில்நுட்பத்துடன் கூடிய நெட்வொர்க்கை பெல் லேப்ஸ் கட்டமைக்கும். விண்வெளியின் அதிகப்படியான வெப்பநிலை, கதிர்வீச்சு மற்றும் வெற்றிட நிலைமைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்த நெட்வொர்க் வடிவமைக்கப்படும். சந்திரனின் தரைப்பரப்பில் விண்கலங்கள் தரையிறங்கும்போது அல்லது தரைப்பரப்பிலிருந்து புறப்படும்போது ஏற்படும் அதிர்வைத் தாங்கக்கூடியதாக இருக்கும். இந்த 4ஜி தொழில்நுட்பம் பின்னர் 5ஜி-ஆக தரம் உயர்த்தப்படும்.

ADVERTISEMENT

நிலவில் நிறுவப்படும் இந்த 4ஜி/எல்டிஇ தகவல் தொடர்பு முறையானது, நிலவின் தரைப்பரப்பு தகவல் தொடர்பானது அதிக தொலைவிலும், அதிக வேகத்திலும் கிடைக்க உதவி செய்யும் என நாசா தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறக்கப்படும் ரோவர்களின் கட்டுப்பாடு, சந்திர புவியியலின் நிகழ்நேர வழிசெலுத்துதல், உயர்தரமான வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தரவு பரிமாற்ற பயன்பாடுகளுக்கு இந்த 4ஜி நெட்வொர்க் முக்கிய ஆதாரமாக இருக்கும். இந்தப் பணியானது எதிர்காலத்தில் சந்திரனில் மனித வாழ்விடத்துக்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தும் என பெல் லேப்ஸ் தெரிவித்துள்ளது.

நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதையும், ஆய்வுப் பணியில் ஈடுபடுவதையும் கூடவே ஆளில்லாத அந்த துணைக் கோளின் அழகையும் உயர்தரமான புகைப்படங்களாக, வீடியோவாகப் பார்த்து மகிழக் கூடிய நாள் தொலைவில் இல்லை.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT