இளைஞர்மணி

அதிவேக ஹைப்பர் லூப்!

24th Nov 2020 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT


சாலை, ரயில், நீர், வான் போக்குவரத்துகளுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது நவீன போக்குவரத்தாக  ஹைப்பர் லூப் உருவாகி வருகிறது.

மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும். ஸ்பேஸ் எஸ்க் நிறுவனர் எலான் மஸ்கின் கனவு திட்டமான இந்த மின்னல் வேக போக்குவரத்து கடந்த ஏழு வருடங்களாக செயலாக்கம் பெற்று வருகிறது. இதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஊது குழாய்க்குள் சிறு பொருளை வைத்து வேகமாக ஊதினால் எப்படி வேகமாகச் செல்கிறதோ அதைப்போல்தான், ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தில் குழாயில் சிறு பெட்டியை காற்று புகாமல் அடைத்து காந்த சக்தியில் அதிவேகமாக இயக்கப்படுகிறது.

தற்போது, ஜப்பானில் மணிக்கு 370 கி.மீ. வேகத்தில் இயக்கும் புல்லட் ரயில்தான் உலகிலேயே அதிக வேகமான ரயிலாகும்.

ADVERTISEMENT

இந்த வேகத்தை ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் நான்கு மடங்காக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நவம்பர் 9-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ், நவேடா பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹைப்பர் லூப் குழாயில் முதல் முறையாக மனிதர்களை அமரச் செய்து இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் அமர்ந்து 500 மீட்டர் தூரத்தை மணிக்கு 172 கி.மீ. வேகத்தில் 15 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

முதல் பயணத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜோஸ் கிரியல், பயணிகள் அனுபவப் பிரிவு தலைவர் சாரா லுச்சியன் ஆகியோர் பயணம் செய்தனர். இரண்டாவது பயணத்தில் "பவர் எல்க்ட்ரானிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்' ஆக பணியாற்றும் புணேவைச் சேர்ந்த பொறியாளர் தனே மஞ்ச்ரேக்கர்  பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார்.

சொகுசு பந்தயக் காரில் அமர்ந்து பயணம் செய்த உணர்வு தனக்குக் கிடைத்ததாகவும், அதிர்வோ நெருக்கடியோ தனக்கு ஏற்படவில்லை என்று தனே மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார். திட்டமிட்ட வேகத்தை எட்டி, பின்னர் எந்தவித தடங்கலுமின்றி வேகம் குறைந்து நின்றது. பயணமும் பாதுகாப்பாக இருந்தது என்றார்.

மும்பை - புணே இடையே ஹைப்பர் லூப் சேவையைத் தொடங்க மகாராஷ்டிர அரசு 2018-இல் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரே நேரத்தில் 28 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பெட்டி தயாரிக்கப்படுகிறது. இது மூன்றரை மணி நேர சாலைப் போக்குவரத்து நேரத்தை 25 நிமிடங்களாகக் குறைக்கும். இதேபோல், பெங்களூரு விமானநிலையத்தை நகரத்துடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பயண நேரம் 10 நிமிடங்களாகக் குறையும்.

திட்டமிட்டபடி நடந்தால் 2029-இல் ஹைப்பர் லூப் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது. மெட்ரோ ரயிலைப் போன்று ஹைப்பர் லூப்பில் சென்று வந்தேன் என நாம் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நம்பலாம். 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT