இளைஞர்மணி

முதல் பார்வையிலேயே நன்மதிப்பு!

24th Nov 2020 06:00 AM | எம்.அருண்குமார்

ADVERTISEMENT


ஒருவர் நம்மைப் பார்த்தவுடனேயே நம்மைப் பற்றிய நன்மதிப்பு உருவாகும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான சில வழிமுறைகள்:

நாம் பிறருடன் பேசும்போது அவருடைய கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச வேண்டும். அதன் மூலம் நம்மைப் பற்றிய நன்மதிப்பு அவருக்கு ஏற்படும்.

பிறருடன் கை குலுக்கும்போது ஏனோதானோவென்று கை குலுக்கக் கூடாது. கை குலுக்கும்போது, கட்டை விரலுக்கும், மற்ற நான்கு விரல்களுக்கும் இடையில் உள்ள பகுதி இறுக்கமாக இணைவதன் மூலம் இருவருக்கும் இடையில் நம்பகத் தன்மை உறுதிப்படுகிறது.

ஒருவரைப் பார்த்த உடனேயே நம்மீதான நல்லெண்ணம், நம்பகத் தன்மையை உடனடியாக உருவாக்க வேண்டுமென்றால் அவரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். பிறரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் சார்ந்த துறை குறித்த பல விவரங்களை ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மற்றவர்களிடம் பேசும்போது ஆர்வமில்லாதது போல பேசுவது, உடல்மொழியிலும் எவ்வித அக்கறையையும் வெளிக்காட்டாமல் இருப்பது, ஒருவர் நம்மைப் பற்றிய எதிர்மறையான அபிப்ராயம் கொள்ள செயல்படுவதன் மூலம் நம்மீதான நல் அபிப்ராயத்தை இழக்க நேரிடும். அதனால் மற்றவர்களுடன் பேசும்போது ஆர்வத்துடன் பேச வேண்டியது அவசியமாகும். அவர்களிடம் பேசும்போது என்ன செய்கிறீர்கள், எதற்காக செய்கிறீர்கள், எப்போது செய்து முடிப்பீர்கள் என்பது போன்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்ப வேண்டும். மேலும் அவர்களுக்கு நம்முடைய விசிட்டிங் கார்டை வழங்குவது அவசியமாகும். அப்போது தான் அவர்கள், நம்முடன் மீண்டும் தொடர்பு கொள்ளவும், நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும்.

நாம் நம்முடைய சேவை, அறிவு, தொடர்பு, கால நேரம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு நாம் வழங்கினால், அவர்கள் அதைவிட நமக்கு அதிகமாக வழங்குவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சில திறமைகள் இருக்கும். அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினால் தான் அதன் மூலம் நன்மதிப்பைப் பெறமுடியும். ஆனால் அந்த திறமைகளை வெளிப்படுத்தாமல் இருந்தால் நாம் முதல் நல் அபிப்ராயத்தை பெற முடியாமல் போய்விடும். எனவே நமது சுயபலத்தைக் காட்டும் வகையில் மிகவும் அடக்கமாக ஆனால் தெளிவாக நாம் யார் என்பதைப் பிறருக்குப் புரிய வைக்கும் வகையில் நமது பேச்சு, செயல்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் முதல் சந்திப்பிலேயே நாம் நம்மைப் பற்றி தெளிவாக வெளிப்படுத்தியவர்கள் ஆவோம்.

உங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருந்தால் மற்றவர்களுடன் நன்றாகப் பேச வேண்டும். கூர்ந்து கவனிக்கும் திறன் இருந்தால் நிறைய கேள்விகள் எழுப்பி அதற்கான விடைகளைப் பெற வேண்டும்.

எது தொடர்பாக நாம் பேச இருக்கிறோமோ அது குறித்து முழு விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பிறகு நாம் பேச வேண்டும். ஆனால் விவரம் ஏதும் தெரிந்து கொள்ளாமல் பேசினால் முழுமையாக நாம் சொல்ல வந்த விசயத்தை சொல்ல முடியாமல் போய்விடும். பிறர் நம்முடைய திறமையை சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் நம்மை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதனால் நாம் அவர்களுடன் பழகும்பொழுது நல்ல விதத்தில் பழக வேண்டும். அதை விடுத்து நம்மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவதற்காக கடுமையாக முயற்சிக்கக் கூடாது. அது தேவையில்லாமல் நம்மீதான நல்ல அபிப்ராயத்தை அழித்துவிடும்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT