இளைஞர்மணி

30 கோடி பூமிகள்?

17th Nov 2020 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT


பிரபஞ்சத்தில் பூமியைப் போன்று உயிர்கள் வாழும் அல்லது வாழ்க்கைச் சூழலைக் கொண்ட வேற்று கிரகங்கள் உள்ளனவா என்கிற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூரியனை பூமி சுற்றி வருவதுபோல ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகமானது "எக்ஸோபிளானட்' என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நமது விண்மீன் மண்டலத்தில் ஏற்கெனவே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்ஸோபிளானட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நமது வீண்மீன் மண்டலத்தில் பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய சாத்தியகூறுகள் கொண்ட 30 கோடி கிரகங்கள் இருக்கலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. 2009 முதல் 2018- ஆம் ஆண்டு வரை செயல்பட்ட கெப்லர் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது.

நாசாவின் அமெஸ் மையத்தை சேர்ந்த ஸ்டீவ் பிரைஸன் தலைமையிலான 44 வானியலாளர்கள் கெப்லரின் தரவுகளை இரு ஆண்டுகளாக ஆய்வு செய்து இந்தக் கண்டுபிடிப்பைத் தந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் "அஸ்ட்ரானாமிகல் ஜர்னல்' என்கிற இதழில் வெளியாகியுள்ளன. இது தோராயமான மதிப்பீடுதான் எனவும், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இந்தத் தோராயமான மதிப்பீட்டைப் பெறுவதற்காக வயது மற்றும் வெப்பநிலை அடிப்படையில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் தேடினர். அவற்றில் எத்தனை நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றி வரக் கூடிய கிரகங்களைக் கொண்டுள்ளன என்கிற முடிவுக்கு வந்தனர். கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதை ஆதரிக்கக்கூடிய "கோல்டிலாக்ஸ் மண்டலத்தைக்' கண்டறிவதற்காக அதன் நட்சத்திரத்திலிருந்து ஒரு கிரகம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் "கயா' மிஷனும் உதவியது.

ADVERTISEMENT

தற்போதைய மதிப்பீடுகளின்படி விண்மீன் மண்டலத்தில் சூரியனைப் போன்று சுமார் 400 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில், 30 கோடி நட்சத்திரங்களாவது தம்மை சுற்றி வரக் கூடிய ஒரு கிரகத்தைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் பூமியைப் போன்று உயிர்கள் வாழும் சூழலைக் கொண்ட 30 கோடி கிரகங்கள் நமது விண்மீன் மண்டலத்தில் இருக்கலாம் எனவும், அவற்றில் அருகில் இருக்கும் கிரகமானது பூமியிலிருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT