இளைஞர்மணி

நிலவிலிருந்து  எடுத்து வருகிறார்கள்!

எஸ். ராஜாராம்


நிலவிலிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பும் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ஆளில்லா விண்கலத்தை கடந்த நவ. 24-ஆம் தேதி வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது சீனா. அந்நாட்டின் பெண் கடவுளான சாங் பெயரில் "சாங்-5' என இந்த விண்வெளித் திட்டத்துக்கு சீனா பெயரிட்டிருக்கிறது.
 சீனாவின் விண்வெளி வரலாற்றில் மட்டுமன்றி, உலகிற்கே சிக்கலானதாகவும், சவால் மிகுந்ததாகவும் அறியப்படுகிறது இத்திட்டம். இதற்கு முன்னர் நிலவிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு வரும் வகையில் விண்வெளி வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. சோவியத் யூனியனின் ஆளில்லா விண்கலத் திட்டத்தில்கூட, நிலவுக்குச் சென்ற ஆளில்லா விண்கலம் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு நிலவிலிருந்து நேரடியாக பூமிக்குத் 
திரும்பியது.
ஆனால், சீனாவின் சாங்-5 திட்டத்தின்படி நிலவுக்குச் சென்றுள்ள விண்கலம் அங்கிருந்து மாதிரிகளைச் சேகரிப்பதுடன், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்காக நிலவில் ஒரு தொழில்நுட்பத் தளத்தையும் அமைக்கவுள்ளதாக சீனாவின் தேசிய  விண்வெளி நிர்வாகத்தின் நிலவுத் திட்ட துணை இயக்குநர் பெய் சாவோயூ தெரிவிக்கிறார்.
 சாங்-5 விண்கலமானது சுற்று வாகனம் (ஆர்பிட்டர்), தரையிறங்கும் வாகனம் (லேண்டர்), தரைப் பரப்பிலிருந்து மேற்பரப்புக்குச் செல்ல உதவும் கருவி (அசென்டர்), திரும்பி வர உதவும் வாகனம் (ரிட்டர்னர்) ஆகிய 4 அம்சங்களை உள்ளடக்கியது. விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்ததும் லேண்டர்-அசென்டர் இணையானது ஆர்பிட்டர்-ரிட்டர்னர் இணையிலிருந்து தனியாகப் பிரிந்துவிடும். ஆர்பிட்டர்-ரிட்டர்னர் நிலவின் தரைப்பரப்பிலிருந்து 200 கி.மீ. உயரத்தில் சுற்றிவரும் வேளையில், லேண்டர்-அசென்டர் நிலவின் வடமேற்குப் பகுதியில் வரும் டிசம்பர் தொடக்கத்தில் தரையிறங்கும்.
அடுத்த 48 மணி நேரத்தில் லேண்டரிலிருந்து வெளிப்படும் இயந்திரக் கரமானது நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைகளை அகற்றி தரையில் துளையிட்டு சுமார் 2 கிலோ எடையிலான மாதிரிகளை ஒரு சிறிய கன்டெய்னரில் சேகரிக்கும். பின்னர், அசென்டர் அந்த கன்டெய்னரை எடுத்துக் கொண்டு நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் ஆர்பிட்டர்-ரிட்டர்னருக்குச் செல்லும். மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கன்டெய்னர் ஆர்பிட்டர்-ரிட்டர்னருக்கு மாற்றப்
பட்டதும் அசென்டர் அதிலிருந்து பிரிந்துவிடும்.
அதன் பிறகு ரிட்டர்னரை ஆர்பிட்டர் பூமிக்குக் கொண்டு வரும். பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் ரிட்டர்னர் வடசீனாவின் உள்பகுதியான மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் ஓரிடத்தில் தரையிறங்கும்.
குறைந்த செலவில், ஆளில்லா விண்கலத் திட்டத்துக்கான அடிப்படைத் தொழில்நுட்பத்தைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது. இதற்கு முன் அமெரிக்காவும், ரஷியாவும் மாதிரிகளைச் சேகரிக்க தேர்ந்தெடுக்காத பகுதியை இப்போது சீனா தேர்ந்தெடுத்துள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் மாதிரிகள் சிறந்த அறிவியல் மதிப்புகளைக் கொண்டிருக்கும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT