இளைஞர்மணி

எப்போதும் சாத்தியமா முழுநிறைவு?

வி.கே.எம்.

எதையும் எந்தக்குறைவும் இல்லாமல் தங்களின் முழு உழைப்பையும் திறமையையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்ய நினைப்பவர்களைத் தான் முழுநிறைவுவாதிகள் (பெர்ஃபெக்ஷனிஸ்ட்) என்று நாம் சொல்வோம்.

இத்தகைய முழுநிறைவுவாதிகளின் செயல்பாடுகள் அவர்களுக்கு வரமா? சாபமா? என்றெல்லாம் பல இக்கட்டான காலகட்டங்களில் கேள்விகள் எழத்தான் செய்யும். இருப்பினும் கூட,அவர்கள் தாங்கள் தொடங்கும் செயல்களை எந்த குறையுமின்றி சிறப்பாகவே செய்ய முற்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காவிட்டாலும் கூட பல நேரங்களில் மிக உயர்ந்த வெற்றியை அவர்கள் பெற்றுவிடுவார்கள். இருப்பினும் கூட பல சமயங்களில் முழுநிறைவுவாதம் மன அழுத்தத்தைத் தரத்தான் செய்கிறது. இத்தகைய முழுநிறைவுவாதம் ஒருவரின் முன்னேற்றப் பாதையைத் தடுக்காமல் இருப்பதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்ளத்தான் வேண்டும்.

அங்கீகரித்தல்: முதலில் தாங்கள் ஒரு முழு நிறைவுவாதி என்பதை அவர்களே முழுமையாக மனதில் கொண்டு தங்களின் பண்புகளை அங்கீகரிக்கத் தொடங்குவார்கள். அத்துடன் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். தாங்கள் முழுநிறைவுவாதி என்ற நிலையில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி யோசிக்க மாட்டார்கள்.

முன்னேற்றம்: சில நேரங்களில் முழுநிறைவு வாதம் ஒருவரின் முன்னேற்றத்தின் மீது தனது கட்டுப்பாட்டை, ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. சிறிய அளவிலான செயல்களில் ஒருவர் தனது முழுநிறைவுத் தத்துவத்தைச் செயல்படுத்தி வெற்றியைக் காண முடியும். உதாரணத்திற்கு ஒரு திருமண நிகழ்வில் பல கட்டங்களாக இருக்கும் பணிகளில், ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் எடுத்து அதற்காக பல நாட்கள் செலவிட்டு முழுத் திறனையும் பயன்படுத்தி சிறப்பாகச் செய்துவிட முடியும். அதே நேரம் எஞ்சியுள்ள பல கட்டப் பணிகள் அப்படியே கிடந்து போக வாய்ப்பு உண்டு.

அல்லது அரைகுறையாக நின்று போகும் வாய்ப்பு உண்டு.சில நேரங்களில் முழுநிறைவு வாதம்வேலையைச் சிறப்பாகமுடிக்க உதவுவதை விட அதைத் தடுக்கவே செய்கிறது.

உச்சத்தை அடையும் மனஅழுத்தம்: பெரும்பாலான முழுநிறைவுவாதிகள் எப்பொழுதும் ஒருவித மனஅழுத்தத்துடன் பயணப்பட்டு வருகிறார்கள். இந்த சமூகம் அவரின் திறன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளதால் அதை உண்மையாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முழுத் திறனையும் வெளிப் படுத்தி உழைப்பார்கள். இது வெளிநபர்களுக்காக மட்டுமின்றி,தங்களுடைய முழுநிறைவுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக, ஒரு செயலை நிறைவாக முடிப்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும்.இதனால் அவர்களின் மனஅழுத்தம் எப்போதும் உச்சத்தை நோக்கியே இருக்கும்.

முழுநிறைவு பண்பை நிர்வகித்தல்: ஒரு கல்வியாளராகவோ அல்லது வேறு துறையிலோ அல்லது தனிப்பட்ட செயலிலோ முழு முழுநிறைவுவாதத்தைப் பயன்படுத்தி சிறப்பானதொரு வெற்றியை ஈட்டும் பொழுது அந்த முழுநிறைவு பண்பிற்கு நன்றி சொல்ல வேண்டியது அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த முழுநிறைவு வாதம் முழு வெற்றியைத் தருமா என்பதையும் யோசிக்க வேண்டும் . எப்பொழுதுமே நேர்மறையான முடிவு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது.

வரையறை: சில நேரங்களில் முழுநிறைவுவாதத்தின் காரணமாக பலன் தரக் கூடிய விளைவுகள்நிகழாமல் போய்விடக் கூடும். சிலநேரங்களில் முழுநிறைவாக ஒரு விஷயம் முழுமை பெறலாம். பத்து விஷயங்கள் எதிர்மறையாகப் போய்விடலாம்.அதனால் 10 பணிகள் இருக்கும் நிலையில் பத்து பணிகளுக்கும் தேவையான நேரத்தை முதலிலேயே ஒதுக்கி பணியாற்ற வேண்டும். மேலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அதை வரிசைப்படுத்தி செயலாற்ற வேண்டும். அதையும் தாண்டி எதுகுறித்தும் பயமின்றிப் பணியாற்ற வேண்டும். இந்த பணி முழுமை பெறவில்லையே அல்லது முழுநிறைவுபெறவில்லையே என்று நினைத்துப் பயந்தால் அடுத்தடுத்த பணிகள் பாதிக்கப்பட்டு விடும்.

எதிர்பார்ப்புகளை மாற்றி அமையுங்கள் : முழுநிறைவு வாதிகள் ஒரு செயலுக்காக தங்களை மிகவும் வருத்திக் கொள்வார்கள். அவர்கள் இலக்கு எப்பொழுதுமே மிக உயர்ந்ததாகவே இருக்கும். அதை எட்ட முடியாத போது அவர்கள் மிகுந்த மனச்சோர்வை அடைவார்கள். அவர்கள் அதை மறந்து அந்தத் தோல்வியால் கற்ற பாடங்களை அனுபவமாக எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

டேக் இட் ஈஸி: ஒரு செயலை முடிப்பதற்காக எப்போதுமே அழுத்தத்தைக் கொடுத்து பயணித்தால் அது திறன்களைக் கூட பாதிப்படையச் செய்து விடும். மிக உயர்ந்த இலக்கை நிர்ணயித்து அதற்காக முழுமூச்சுடன் பயணித்து அதில் வெற்றி கிடைக்காவிட்டால் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொள்ளக் கூடாது. முடியாது என்ற எண்ணத்தை முழுநிறைவு வாதிகள் குறைத்துக் கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறை எண்ணங்களை மனதில் இருத்தி எப்பொழுதுமே டேக் இட் ஈஸி யாக இருக்க முயலவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT