இளைஞர்மணி

எங்கேயும்... எப்போதும்!

ஜீவா

சிகரெட் விற்றால் ரூ.15 ஆயிரம் அபராதம்!

வியட்நாமில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்றால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகத்திலேயே அதிகமாகப் புகைப்பிடிக்கும் நபர்கள் உள்ள நாடுகள் 15. அதில் வியட்நாமும் ஒன்று. ஆசிய நாடுகளில் அதிகமாகப் புகைப்பிடிக்கும் நாடுகளில் மூன்றாவதாக வியட்நாம்உள்ளது. இந்தோனேசியாவும், பிலிப்பைன்ஸýம் மற்ற இரண்டு நாடுகள்.

உலக சுகாதாரநிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வியட்நாமில் ஒவ்வோராண்டும் 40 ஆயிரம் பேர் புகைப்பிடிப்பதால் இறந்து போகின்றனர்; புகைப்பிடிக்கும் இருவரில் ஒருவர் இறந்து போகிறார்களாம்.

இதைத் தடுக்கவே வியட்நாம் அரசு களத்தில் இறங்கியிருக்கிறது. 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்கும் கடைக்காரர் நமது ரூபாய் மதிப்பில் ரூ.9500 இலிருந்து ரூ.15000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. ""இது மிகவும் அதிகம்'' என்று கடை வைத்திருப்பவர்கள் கொதிக்கிறார்கள்.

2013 - ஆம் ஆண்டிலிருந்தே சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த வியட்நாம் அரசாங்கம் முனைப்புக் காட்டி வந்திருக்கிறது. கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் சிகரெட் விற்க வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இருந்தும் இந்தப் பிரச்னை தொடர்கிறது.

""18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? கடைக்கு வரும் ஒவ்வொருவரிடமும் வயதுச் சான்றிதழா கேட்க முடியும்?'' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

""எந்தச் சட்டம் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்தும்போது இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்'' என்கிறது அரசு தரப்பு.

கரோனா தந்த பரிசு!

கரோனா தீநுண்மிக்கு மருந்து கண்டுபிடித்து உறுதிப்படுத்தப்படாத நிலையில் கரோனா தீநுண்மியை அழிக்கும் என்று கூறி பலவிதமான கிருமிநாசினிகள், சோப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கரோனா தீநுண்மியை அழித்துவிடும் என்று விளம்பரம் செய்யப்பட்ட வாய் கொப்புளிக்கும் திரவங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

700 யென் விலையுள்ள (ரூ.495) அரை லிட்டர் வாய் கொப்புளிக்கும் திரவத்தை 2 ஆயிரம் யென் வரை (ரூ.1, 415) அதிக விலை வைத்து விற்றிருக்கிறார்கள்.

இதற்காக டோக்கியோ நகரின் ஷிபுயா வார்டு பகுதியில் பெரிய பல் மருத்துவ
மனையையும் மருந்து விற்பனை நிலையத்தையும் நடத்தி வரும் 57 வயதான கியோஷி அமேனோ என்பவரை டோக்கியோ மெட்ரோபாலிட்டன் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த வாய் கொப்புளிக்கும் திரவங்கள் ஜப்பான் நாட்டின் மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் சட்டத்தை மீறுவதாக உள்ளன என்றும் இந்தத் திரவங்கள் அந்நாட்டு மருத்துவப் பொருள்களை அங்கீகரிக்கும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கரோனா தொற்றுக்கு முன்பு இன்புளூயென்சா, சர்க்கரை வியாதி, புற்றுநோய் ஆகியவற்றை இந்த வாய் கொப்புளிக்கும் திரவங்கள் குணமாக்கிவிடும் என்று செய்தித்தாள்கள், இதழ்கள், தொலைக்காட்சிகள்ஆகியவற்றில் விளம்பரம் செய்திருக்கிறார் கியோஷி அமேனா. கரோனா தொற்று ஏற்பட்டவுடன் கூடுதலாக அதையும் குணமாக்கிவிடும் என்று விளம்பரத்தில் சேர்த்திருக்கிறார். அதிக லாபத்தைத் தந்த கரோனா, அவரை இப்போது சிறைக்குள் தள்ளியிருக்கிறது.

அதிக வெப்பமுள்ள நாடு!

அரபு நாடுகளில் ஒன்றான குவைத் உலகிலேயே அதிக வெப்பமுள்ள நாடாகும்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வடமேற்கு குவைத்தில் உள்ள மிட்ரிபா பகுதியில் பதிவான வெப்பநிலை 129 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும் (53.9 சென்டிகிரேடு). பூமியில் பதிவாகியுள்ள அதிக வெப்பநிலையில் இது மூன்றாவது இடத்தில் உள்ள வெப்பநிலையாகும். இந்த வெப்பநிலை இங்கிலாந்து நாட்டை விட 15 டிகிரி சென்டிகிரேடு அதிகம். தற்போதும் குவைத்தில் இந்த வெப்ப நிலையே உள்ளது.

ஈராக்கிற்கு தெற்கேயும், சவுதி அரேபியாவுக்கு வடக்கேயும் உள்ள இந்தப் பகுதியில் 40 டிகிரி சென்டிகிரேடு (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலை வழக்கமான ஒன்று. இதனால் பெரும்பாலான மக்கள் ஏசி அறைகளுக்குள் புகுந்து கொள்வது வழக்கம். பிற நாடுகளில் இருந்து வேலைக்காக இந்த நாட்டிற்கு வந்த கட்டடத் தொழிலாளர்கள்தாம் இந்த வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

தானியங்கி கார்கள்... தடுமாறும் பாதுகாப்பு!


ஓட்டுநர் இல்லாமல் ஓடும் தானியங்கி கார், சென்சார் மூலம் இயக்கப்படும் கார் என்று நவீன தானியங்கிக் கார்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால் இந்தக் கார்களில் உள்ள ரேடியோ யாரும் ஆன் செய்யாமலேயே ஒலிக்கத் தொடங்கினால்... காரை நிறுத்த பெடலை அழுத்தினாலும் கார் நிற்காமல் ஓடினால்... என்ன செய்வது? எவ்வளவுக்கெவ்வளவு இணையதளம், ஜிபிஎஸ், வைஃபை மூலமாகவெல்லாம் கார்கள் இயங்குகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் செயல்களில் வெளியாட்கள் குறுக்கிடும் வாய்ப்பும் வந்துவிடுகிறது.

திருட்டுத்தனமாக இணையவெளிக்குள் நுழைந்து, வெளியாட்கள் கார்களை இயக்கத் தொடங்கிவிடுகிறார்கள். சைபர் குற்றங்கள் அதிகரித்துவரும் இந்நாளில் இவையெல்லாம் சாதாரணமான செயல்களாக ஆகிவிடுகின்றன. கார்கள் எந்த அளவுக்கு மென்பொருள் சார்ந்து இயங்குகிறதோ அந்த அளவுக்கு வெளியாட்கள் உள்நுழைந்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிகிறது.

இவற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலைச் சேர்ந்த சி2ஏ செக்யூரிட்டி என்ற நிறுவனம் ஆட்டோசெக் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது காரில் உள்ள நூற்றுக்கணக்கான பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வெளியாட்கள் இந்தக் காரை எந்தவிதத்திலும் இயக்க முடியாதநிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT