தினமணி கொண்டாட்டம்

மதத் தலைவர்கள் வெளியிட்ட போஸ்டர்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT


வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர், ட்ரெய்லர் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் "பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்குகிறார்.  கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைக்கிறார். ஆதவா ஈஸ்வரா, நிகிஷா,  தீரஜ் கெர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....

""இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது. மதம் என்கிற கருவியை வைத்து மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து  ஒரு சித்தாந்தத்திற்கு அடிமை ஆக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது. படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம்தான் மேலானது என்பதுதான். மனிதத்தை விட சிறந்த மதம் இல்லை என்பதுதான். இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக  தீரஜ் கெர் நடித்துள்ளார். இவர் நெடுஞ்சாலை,கருப்பசாமி குத்தகைதாரர், கொக்கி போன்ற படங்களைத் தயாரித்தவர். பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர். யாரை வைத்து இதன் போஸ்டர்களை வெளியிடுவது என்று யோசித்தோம். வழக்கமாகச் சினிமா சம்பந்தப்பட்டவர்களை வைத்து வெளியிட்டால் சாதாரணமாகவே தெரியும். பெரிய கவனம் பெறாது என்று நினைத்தோம். 

அதனால் படத்தில் சொல்லப்படும் கருத்தின் வாயிலாகவே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். எனவே  மூன்று வெவ்வேறு மதத் தலைவர்களை வைத்து இதை வெளியிட முயற்சி செய்தோம்.அதற்குப் பலனும் கிடைத்தது. அப்படி இந்து மதத்தின் சார்பாக, இந்து மக்கள்  கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், இஸ்லாம் மதத்தின் சார்பாக இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான கே .ஏ.எம் .முகமது அபுபக்கர்,  கிறிஸ்தவ மதத்தின் சார்பில் பிஷப் டாக்டர் எஸ். எம். ஜெயக்குமார் ஆகிய  மூன்று மதத் தலைவர்களையும் வைத்து வெளியிட்டோம். மதத்தின் பெயரால் நடக்கும்  மாதிரியான தவறான செயல்களைக் கண்டிக்க வேண்டும்,  தடுக்க வேண்டும் அதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று மூவருமே கூறினார்கள். இதுவே எங்கள் படத்திற்கான முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT