தினமணி கொண்டாட்டம்

கணவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்த மனைவி!

29th Jan 2023 06:00 AM | சக்ரவர்த்தி

ADVERTISEMENT

 

கணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி கொடுத்து தனது சொந்த நிறுவனத்தில் வேலைக்கு வைத்திருக்கிறார் இந்திய பெண்மணி பூனம்.

ஸ்காட்லாந்தில் தொழில் முனைவராக இருக்கும் பூனம் கூறியதாவது:

""ஸ்காட்லாந்தில் பணிபுரியும் புனித் குப்தாவுடன் எனக்கு திருமணம் 2002-இல் நடைபெற்றது. அதன் காரணமாக, ஸ்காட்லாந்து சென்றேன்.

ADVERTISEMENT

எங்களுக்கு இரண்டு மகள்கள்.

இப்போது ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறேன். ஸ்காட்லாந்து மக்கள் வியக்கும்படியாக தொழிலில் உயர்ந்து காட்டியுள்ளேன். அண்மையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குக்காக ஏற்பாடு செய்யப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தில்லி வந்திருந்தேன்.

எம்பிஏ பட்டதாரி. போதிய அனுபவம் இல்லாததால், தொடக்கத்தில் எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால், நானே தொழில் தொடங்க முடிவு செய்தேன். இன்று நான் சாதனைப் பெண்மணி.

எந்த மூலப் பொருளை அடிப்படையாக வைத்து தொழில் தொடங்குவது என்பதில் முதலில் குழப்பமாக இருந்தது. நிறுவனங்கள் அன்றாட வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களில் "வேண்டாம்' என்று தூக்கி எறியும் காகிதக் கழிவுகளை அப்புறப்படுத்தவே பல கோடிகள் செலவு செய்கிறார்கள் என்று தெரியவந்தது. இவை அகற்றுவதும் பல சிக்கல்கள் நிறுவனங்களுக்கு இருந்தன. அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, காகிதக் கழிவுகளை குறைந்த விலையில் பெற்று, மறுசுழற்சி செய்வது என முடிவு செய்தேன்.

இறக்குமதி செய்ய பணம் வேண்டுமே! கடன் சொல்லி காகிதக் கழிவுகளை வாங்க, இத்தாலி நிறுவனம் ஒன்றுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். அந்த நிறுவனம் எப்படியோ காகிதக் கழிவுகள் தங்கள் வளாகத்திலிருந்து இடத்தைக் காலி செய்தால் போதும் என்று சம்மதித்தது. காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை இந்தியாவில் கண்டுபிடித்தேன். எனது வேலை எளிதானது. வாங்கும் காகிதக் கழிவுகளை மறுசுழற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு நல்ல லாபம் கிடைத்தது. எனது நிறுவனத்திற்கு "பி. ஜி' பேப்பர் ‘ என்ற பெயரைச் சூட்டினேன்.

வர்த்தகம் விரிந்தது. என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதும் வர்த்தகத்தில் உதவுங்கள் என்று கணவர் குப்தாவைக் கேட்டுக் கொண்டேன். அப்போது அவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.80 லட்சம் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார்.

"இவ்வளவு சம்பளம் தர உனது நிறுவனத்தால் முடியாது' என்று கணவர் தயங்கினார். "முழுநேரம் வேலை பார்க்க வேண்டாம். பகுதி நேரத்தில் வேலை செய்யுங்கள். பிறகு தீர்மானியுங்கள்' என்றேன். இதை ஏற்றார்.

நாளடைவில் எனது நிறுவனத்தின் வர்த்தகத்தின் விற்பனை பல நூறு கோடிகள் என்று தெரிந்ததும், முழுநேர அலுவலர் ஆனார். கணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி சம்பளம் தருகிறேன். அவர் அசந்து போனார்.

எனது உழைப்புடன் கணவர் உழைப்பும் சேர, கழிவுத் தாள்கள் வர்த்தகத்துடன், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் துறைகளில் தடம் பதித்தோம். இந்தியா உள்பட ஏழு நாடுகளில் எங்கள் அலுவலகங்களைத் திறந்து பலதரப்பட்ட வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளோம்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT