தினமணி கொண்டாட்டம்

படித்ததோ கணினி அறிவியல்; வளர்ப்பதோ கருங்கோழி...!

29th Jan 2023 06:00 AM | கண்ணகி ஜோதிதாசன்

ADVERTISEMENT

 

படித்து முடித்து, அந்தத் தகுதிக்கான வேலையைத் தேடுவோர்தான் உண்டு. ஆனால்,  கணினி அறிவியலில் 4 பட்டங்கள் பெற்ற இளம்பெண் கருங்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்.  

"செய்யும் தொழில்தான் தெய்வம். வேலைக்காகக் காத்திருக்காமல் வேலை கொடுப்பவராக மாற வேண்டும்' என்கிறார் அவர்.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் எம்.எஸ்ஸி., எம்.எட். கணினி அறிவியல் படிப்பை முடித்த எஸ்.நிர்மலா தேவி என்பவர் 150-க்கும் மேற்பட்ட கருங்கோழிகளை வளர்த்து வருகிறார். இதன் முட்டைகளை இணையம் வாயிலாக விற்பனை செய்கிறார். இவரைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றபோது ஒரே ஒரு முறை அழைத்தவுடன் அவரைத் தேடி அத்தனை கருங்கோழிகளும் ஒரு சில நிமிடங்களில் வந்துவிட்டன. அவருடன் ஓர் சந்திப்பு:

ADVERTISEMENT

கருங்கோழி வளர்ப்பில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

எனது சொந்த ஊர் கோவை. எங்கள் வீட்டில் 20 பசுக்கள் இருந்தன. பால் கறந்து விற்பது எங்கள் தொழில்.  எனது கணவர் செந்தில்குமாரின் சொந்த ஊர் நாமக்கல். அவர் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். என்னைத் திருமணம் செய்து கொடுக்கும்போது,  சீதனமாக இரு பசுக்களையும் என் பெற்றோர் கொடுத்தார்கள்.  இவற்றில் பால் கறந்து விற்பனை செய்து வந்தேன். இப்போது என்னிடம் 20 பசுக்கள் உள்ளன. பசும்பாலிலிருந்து நெய், பன்னீர்,சுத்தமான பால் என எனது தொழில் விரிவடைந்தது.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுத்தமான பால், சுக்கு, வெல்லம், ஏலக்காய்,  ஆரோக்கியமான கடலைமிட்டாய்,கடலை உருண்டை, பொரி உருண்டை,பர்பி வகைகள்,எள்ளு மிட்டாய் ஆகியவற்றை தயாரித்து  விற்பனை செய்கிறேன்.

கோயம்புத்தூரில் இருக்கும்போது,  என் பாட்டி கடலைமிட்டாய் செய்யும் தொழில்நுட்பத்தை எனக்கு கற்றுக் கொடுத்தார். "அம்முச்சி'  என்று நிறுவனத்தின் பெயராக்கி அதே பெயரில் இணையதளமும் உருவாக்கினேன். இத்தொழிலை சிறப்பாக செய்து கொண்டிருந்தபோது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிலர் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுங்கள் என்றார்கள். 

அதற்காக இரு நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். நாட்டுக்கோழிகளைவிட அதிக சத்துள்ள கோழிகள் எதுவும் இருக்கிறதா என இணையத்தில் உலவிய போது கருங்கோழிகள் பற்றிய தகவல்களை படித்து ஆச்சரியப்பட்டேன். இரு கருங்கோழிகளை வளர்த்து அதன் முட்டைகளைச் சாப்பிட்டு வந்தேன். வைட்டமின் டி சத்து மிக அதிகமாகியது.   அதன் பின்னர் நாம் ஏன் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க கருங்கோழி வளர்க்கக் கூடாது என முடிவு செய்தேன்.  முட்டைகளை விற்பனை செய்து வருகிறேன்.இப்போது 150 கருங்கோழிகள் இருக்கின்றன.

விற்பனை எப்படி இருக்கிறது?

தினசரி நேரிலும், இணையம் மூலமாகவும்  விற்பனை செய்கிறேன். ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோழி 105 முட்டைகள் வரை இடும். கொரியர் செலவு சேர்த்து ஒரு முட்டை விலை ரூ.30. ஒரு கோழியின் விலை ரூ.1000. இக்கோழியின் இறைச்சி கருப்பாகத்தான் இருக்கும்.அதிக சுவையாக இருக்காது. அதிகமான சத்து உடையது. இந்தக் கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரிக்காது. எப்போதும் கூண்டில் அடைப்பதில்லை.வெளியில் சுற்றித் திரிவதால் வெயில் அதன் மீது பட்டு ஆரோக்கியமாகவே இருக்கின்றன.

கருங்கோழி முட்டையிலும்,கடலை மிட்டாய் விற்பனையிலும் நல்ல வருவாய் கிடைக்கிறது.அதே நேரத்தில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. விரைவில் பாரம்பரிய அரிசியில் கடலை மிட்டாய்,பர்பி செய்வதும்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் எனது கனவு. 

கருங்கோழியைப் பற்றி...?

முட்டைக்காக வளர்க்கப்படும் நாமக்கல் கோழிகள்;  சண்டைக்காகவே வளர்க்கப்படும் அசீல் சேவல்கள்; கழுத்துப்பகுதியில் இறகுகளே இல்லாமல் காணப்படும் மொட்டைக் கழுத்துக் கோழிகள்; இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் வனராஜா;  கிரிராஜா என கோழிகளில் பல வகை உண்டு.

கிராமங்களில் நாட்டுக்கோழி முட்டைக்கும், இறைச்சிக்கும் ஒரு தனி மதிப்பு உண்டு. இந்தக் கோழிகளைவிட மகாராஷ்டிர மாநிலத்தில் கடக்நாத் என்ற பெயரில் முழுவதுமே கருமையாக இருக்கக் கூடிய கருங்கோழிகளும் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், வைட்டமின் டி சத்து நிறைந்தது,கொழுப்புச் சத்துக் குறைவு என இதன் மருத்துவப் பயன்கள் நீள்கின்றன. 

உங்களது வெற்றிக்கு காரணம்..?

பெண்கள் தொழில் செய்வதை மட்டமாக நினைக்கிறார்கள்.இடையூறு செய்கிறார்கள். அதைத்தாண்டித் தான் வெற்றி பெற வேண்டியது இருக்கிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் வீட்டு வேலைகளை செய்வதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு தொழிலை செய்ய வேண்டும்.  காஞ்சிபுரம் மாவட்டத் தொழில் மைய அதிகாரிகள் கொடுத்த ஊக்கம்தான் வெற்றியாளராக நிற்க முடிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT