தினமணி கொண்டாட்டம்

பயணங்களில் நிகழும் அபூர்வம்!

18th Sep 2022 04:36 PM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

""வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது... இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரு நகர வாழ்க்கை, தேடல்கள்.... ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.'' உள் வாழ்க்கை உணர்ந்து பேசுகிறார் அறிமுக இயக்குநர் ர. கார்த்திக். "நித்தம் ஒரு வானம்' படத்தின் மூலம் கோலிவுட் நுழைகிறார்.

தலைப்பே கவனம் ஈர்க்கிறது...

கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இது. ரொம்பவே என்னை ஈர்க்கும் வரிகள். அதனால் மட்டுமில்லாமல்இந்தக் கதையின் அடிப்படையும் அதுதான். எனவே இந்தத் தலைப்பு. வாழ்வென்பதே பயணம்தான். தினமும் நம் மேலே இருக்கும் வானம் கலைந்து போகும் மேகம் போல, வாழ்வின் பயணம் நம்முள் ஏற்படுத்தும் தாக்கங்களை, மனதை கொள்ளை கொள்ளும் அழகான திரைக்கதையில் சொல்லுவதே படம். மூன்று காலகட்டங்களில் நிகழும் கதை. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என இன்னும் சில பேர். அவர்களின் அன்பையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் ஒரு அழகான கவிதை இது. இவர்களை சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது. எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை. இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும். இங்கே ஆரம்பிக்கிற கதை குலுமனாலி, சிக்கிம், கோவா, தில்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணமாகும்.

ADVERTISEMENT

படத்தின் பேசு பொருள் என்ன...

உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. இந்தக் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அந்த போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம்.

பயணமாகி படப்பிடிப்பு நடத்தியது தனி சவாலாக இருக்குமே...

அதுதான் பயணங்களின் பேரற்புதம். மறுபடியும் கண்டடைய முடியாத மனிதர்கள். முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள்.. என்னை ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான். பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியதோரைப் பொட்டலம், ஒரு புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல் எல்லாவற்றுக்குமே ஒரு காவியத் தன்மை வந்து விடுகிறது. என் வாழ்க்கையில் சரி பாதி பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான காட்சிகள் படிமங்களாக மனதில் கிடக்கின்றன. கவலைகளையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாத பிரிவுகளையும் துடைத்து வீசி விட ஒரே ஒரு புதிய நிலப்பரப்பின் காட்சியில் முடிந்து விடுகிறது. பயணத்தின் போதுதான் வெயிலும் மழையும் ஒளியும் இருளும் புதிதாக இருக்கின்றன. என் மனம் எதை நேசிக்கிறதோ, அது கதையில் வருகிறது அவ்வளவுதான். இதோ இப்போது கூட ஏதோ ஒரு பாரம். பயணமாகி கொண்டுதான் இருக்கிறேன். பயணங்களில்தான் அபூர்வம் நிகழ்கிறது.

பயணக் கதைக்கு பாடல், இசைக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்....

கோபி சுந்தர்தான் மியூசிக். ஒரு நாளும் இவர் இசையை ரொம்ப லேசாக எடுத்துக் கொண்டது கிடையாது. தெலுங்கு, மலையாளம் என இவருக்கு தனி வட்டம் உண்டு. தமிழிலும் தனித்துவம் இருக்கிறது. அவசரப்படாமல் கதை கேட்டு அதில் இசைக்கு என்ன வழி உண்டு என பார்த்து விட்டு "சரி'ன்னு சொல்கிற ஆளு. இசைக்கு வலிமையான இடங்கள் இருப்பதை தெரிந்து கொண்டு, உடனே அவரது பெஸ்ட்டைக் கொடுத்து இருக்கிறார். ரசித்து கேட்கும் ட்யூன். பாடல்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. கிருத்திகா நெல்சன் எழுதியிருக்கிறார். தனித்துவத்தை நீங்களே உணர்வீர்கள். எல்லோரும் சேர்ந்து உழைத்து இருக்கிறோம். ஓர் அழகான நம்பிக்கை சித்திரம் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT