தினமணி கொண்டாட்டம்

'சீட்டா' கம்மிங்..!

2nd Oct 2022 06:00 AM | பா.சுஜித்குமார்

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு புதிய விருந்தினர்களாக 70 ஆண்டுகள் கழித்து சீட்டாக்கள் எனப்படும் சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வனப் பகுதிகளில் சிங்கம், புலி, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. அனைத்துக்கும் தனித்தனி குணங்கள் உள்ளன. மேலும் மிகவும் வேகமாக ஓடும் தன்மை கொண்ட புலி, சிங்கம், ஜாகுவார், சிறுத்தை, பனிச் சிறுத்தை போன்றவை ஒரு பிரிவாகவும், சிறுத்தைப் புலி, மலைச் சிங்கம் போன்றவை ஒரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் பரவலாக வசித்து வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், சிறுத்தைப் புலிகள் (சீட்டாக்கள்) , பனிச்சிறுத்தைகள் போன்றவை உள்ளன. தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாப்பதற்கு வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. குறிப்பாக புலிகள் அருகி வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகள் பொதுவாக இந்தியாவில் அதிகளவில் உள்ளன. கடந்த 2018-இன் கணக்கெடுப்பின்படி மொத்தம் 12,852 சிறுத்தைகள் உள்ளதாக தெரியவந்தது. இவற்றின் சகோதர இனமாக உள்ளது சிறுத்தைப் புலிகள் ஆகும்.
1952-இல் முற்றிலும் அழிவு: 1947-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் இருந்தன. 1952-இல் இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வனப் பகுதியில் மீண்டும் சிறுத்தைப் புலிகளை அறிமுகம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக, 70 ஆண்டுகள் கழித்து நமீபியாவில் இருந்து 8,000 கி.மீ பயணத்துக்கு பின்னர் சிறப்பு விமானம் மூலம் 5 பெண், 3 ஆண் சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்பட்டன. அனைத்தும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள 750 சதுர கிமீ பரப்பு கொண்ட குணா தேசிய பூங்காவில் விடப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப். 17-இல், சிறுத்தைப் புலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. குணா தேசிய பூங்காவில் ஏராளமான மான்கள், காட்டுப் பன்றிகள், புள்ளி மான்கள் உள்ளன. சிறுத்தைப் புலிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடவும், வளர்க்கப்பட்டன. முகலாய பேரரசர் அக்பர் காலத்தில் மொத்தம் 10,000 சிறுத்தைப் புலிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக இடம் மாற்றப்பட்ட பெரிய விலங்கு: சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. மிகப்பெரிய விலங்கு ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கு முதன்முறையாக மறுஅமர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் மொத்தம் 7,000 சிறுத்தை புலிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
குணா தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ள சிறுத்தைப் புலிகள் 1 மாதத்துக்குத் தனியாக வைக்கப்பட்டுள்ளன. புதிய இடத்தின் சூழலுக்கு ஏற்ப அவை மாறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாக்க 2 யானைகள்: 8 சிறுத்தைப் புலிகளையும் பாதுகாப்பதற்கு என சித்தநாத், லட்சுமி என்ற 2 யானைகள் அமர்த்தப்பட்டுள்ளன. சாத்புரா புலிகள் காப்பகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள 2 யானைகளும், இரவு பகலாக வனத்துறை ஊழியர்களுடன் ரோந்து செல்கின்றன. சிறுத்தைப் புலிகள் வருவதற்கு முன்பு அவற்றுக்கு அமைக்கப்பட்டிருந்த தனியிடத்தில் நுழைந்த 4 சிறுத்தைகளை விரட்டுவதில் 2 யானைகளும் முக்கிய பங்கு வகித்தன.
தற்போது தனியிடத்தில் உள்ள 8 சிறுத்தைப் புலிகளுக்கும் எருமை மாட்டு இறைச்சி உணவாக தரப்பட்டுள்ளது. அவற்றின் உடல்நிலையும் வழக்கமாக உள்ளது. நமீபியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இங்கேயே தங்கி சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
70 ஆண்டுகள் கழித்து புதிய விருந்தினர்களாக வந்துள்ள சிறுத்தைப் புலிகளால், இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT