தினமணி கொண்டாட்டம்

வரலாறு போற்றும் குடை

2nd Oct 2022 06:00 AM | -கி. ஸ்ரீதரன்  தொல்லியல் துறை (ஓய்வு)

ADVERTISEMENT

 

குடை - வெயிலிலும் மழைக்காலத்திலும் அதன் அவசியம் அனைவராலும் உணரப்படுகிறது. வரலாறு, கலைச் சிறப்பில் குடையானது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.  திருமலை திருப்பதியில் அலங்கரித்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று புரட்டாசி மாதத்தில் பெருமாளிடம் சேர்ப்பிப்பார்கள்.

அரச சின்னம்: 

பண்டையக் காலத்தில் குடை அரசு சின்னமாகக் கருதப்பட்டது. அரசனின் முடிபுனை விழாவில் வெண்மையான குடை அளிக்கப்பட்டதாக கலிங்கத்துப்பரணி கூறுகிறது. குடை அரசு உரிமையை குறிப்பது என்ற பொருளில் புறநானூறு "கொற்ற வெண்குடை' என்று குறிக்கிறது. சேரன் செங்குட்டுவனை  "மாலை வெண்குடை மன்னன்'  என்று சிலம்பு கூறுகிறது.
குடிமக்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றித் தன் அருட்குடையின் கீழ் அரசர்கள் கொண்டு வர வேண்டும். இதைப் பற்றி வெள்ளைக்குடி நாகனார் என்னும் சங்க காலப் புலவர், "வளவ உன்னுடைய குடை வெயில் மறைப்பதற்காக கொள்ளப்பட்டதா என்றால் இல்லை. வருத்தமுற்ற குடியை நிழற் செய்தல் காரணத்தால் கொள்ளப்பட்டது'  என்பதை "வியன் குடை வெயில் மறை கொன்டன்றோ அன்றே வருந்திய குடி மறைப்பதுவே கூர்வேல் வளவ' என்று பாடுகின்றார்.
மக்களின் வருத்தத்தை போக்கும் சின்னமாக இது கருதப்பட்டதால் "குளுமை நிறைந்தது'  என்று புலவர்களால் பாடப்பட்டது.
"தொல்குல மாமதி போல் பனி முத்திலங் குங்குடை மன்னன்' என்று நெடுமாறன் புகழப்படுகிறான். (பாண்டி கோவை 131) கடும் வெயில் அடித்தாலும், பெரும் மழை பெய்தாலும், கொடிய காற்று வீசினாலும், தடையின்றி மக்களைப் பாதுகாக்க வல்லது நெடுஞ்சேரலானது குடை என்று (பதிற்றுப்பத்து 17) கூறுகிறது.
கிள்ளிவளவனது குடையானது, கடலால் சூழப்பெற்ற இந்த உலகம் முழுவதும் சோழ அரசை நினைவூட்டி அமைதி பெறுமாறு அருள் நிழல் தரும் என்று முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று குறிக்கிறது.
குடை - கல்வெட்டுகளில்,  செப்பேடுகளில் மேற்கூறிய கருத்தினைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் வலியுறுத்துகின்றன. அதிராஜேந்திரனின் கல்வெட்டு "திங்களேர் மலர்ந்து வெண்குடை மனடிய மன்னுயிர் தோறும் இன்னொரு சுரந்து நிறை நிழல் பரப்பி எனக் குறிக்கிறது. "மக்களைப் பெற்ற தாயினும் சிறக்கக் காக்க வல்லது என பன்மணிக் கொற்ற வெண்குடை நிழல் குவலயத்து உயிர்களைப் பெற்ற தாயினும் பேணி'  என்று வீரராஜேந்திரன் கல்வெட்டுக் கூறுகிறது.
"அகில புவனமும் களிப்பதோர் புது நதி போல வின்கொடை நீமிசை நிழற்ற' என்று விக்கிரமச்சோழன் மெய்க்கீர்த்தியும், "திங்கள் வெண்குடை திசைகளெட்டுந்தாங்கும் தனிக்கூடந்தான் என விளங்க'  என்று இரண்டாம் இராஜராஜனின் மெயக்கீர்த்தியும் கூறுகின்றன.
"குளிர் வெண்குடை மண் காப்ப' என்று பாண்டியரின் வேள்விக் குடிச்செப்பேடு குறிக்கிறது. "வெண்குடை இருநிலை வளாகம் எங்கனும் தனது இரு நிழல் வெண்ணிலா திகழ' என்று முதற்குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி கூறுகிறது.
"மன்னன் கொடை கீழமர்ந்து அரசாண்டதை வெண்குடை நிழர்கீழ் செங்கோலோச்சி' என்று குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி கூறுகிறது.
"மன்னனின் ஆட்சி எதுவரை பரந்து நின்றது அது வரையிலும் மன்னனின் குடை நிழல் அளித்தது' என்று புலவர் சிறக்கப் பாடுகிறார்.
விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி "சந்திரன் சூரியன் வரையும் அவன் குடை நிழல் பரவியது' என்று குறிக்கிறது. தெய்வ வழிபாடு நடக்கும் இடங்களில் அரசனது குடை தாழ்த்திப் பிடிக்கப் பெறும். பல்யாகசாலை முதுகுடுமி பெருவழி சிவபெருமானின் கோயிலை வலம் வரும் பொழுது அவன் குடை தாழ்த்தி பிடிக்கப்பட்டது.
ஒரு மன்னன் மாற்றரசர் மீது படையெடுக்க புறப்படும் போது நல்ல வேளையில், நல்ல நாளில் குடை, வாள்,  முரசு முதலியவற்றை வடதிசையில் பெயர்த்து வைப்பது மரபு. "வாருங்குடையும் வடதிசை பெயர்க' என்று செங்குட்டுவன் ஆணையிட்டதாகச் சிலம்பு கூறுகிறது.
போரில் ஒரு மன்னனது குடை வீழ்ந்தால் அவன் தோற்றான் எனக் கருதப்படும். பெருஞ்சேரலிரும்பொறை என்ற மன்னன் சோழ பாண்டியரை வென்று அவர்களுடைய முரசும், குடையும், கலனும் கொண்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.
பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனுடன் கடும் போரிட்ட போது பல்லவ மன்னர் வெற்றி பெற்றான். மாற்று அரசனுடைய குடை சிதறியது என்று கூரம் செப்பேடு கூறுகிறது.

ADVERTISEMENT

தலைக்கோல்: 

போரில் மாற்றரசர்களை வென்று அவர்களிடம் இருந்து கவர்ந்த கொற்றக்குடையின் காம்புகளை தலைக்கோலாக செய்வது வழக்கம். தலைக்கோலின் கண்கள்தோறும் நவரத்தினங்களால் கட்டி,  இடைப்பகுதியை பொன் தட்டால் கட்டுவர். நாடகக் கணிகை "தலைப்கோல்' 
கொள்ளும் நாளன்று அதற்கு நீராடி மாலை சூட்டி அரங்கில் கொண்டுவரப்பட்டு பின்பு நாட்டிய மகளுக்கு "தலைக்கோலி'  என்ற என்னும் பட்டம் அளித்தல் மரபு இருந்து வந்ததாக சிலம்பு கூறுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த குடையைப் பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. தமிழக கோயில்களில் உள்ள சிற்பங்களிலும், ஓவியங்களிலும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

பல்லவர் காலம்

இக்கால சிற்பங்களில் இறைவன் அல்லது தேவையின் தலைக்கு மேலே குடை இருக்கும். அல்லது யாராவது ஒருவர் பிடித்துக் கொண்டிருப்பது போல காட்டப்பெறும். கைலாசநாதர் கோயில்,  மாமல்லை ஆகிய இடங்களில் இத்தகையச் சிற்பங்களைக் காணலாம். விழுப்புரம் மாவட்டம் பனைமலையில் இராஜசிம்மன் காலத்து ஓவியங்கள் உள்ளன. இறைவன் சம்கார தாண்டவம் ஆடும் காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. பக்கத்து சுவரில் அவர் ஆடலில் மெய் மறந்து நிற்கும் அன்னையின் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது. ஒரு காலை மடித்து பூங்கொடி என நிற்கிறாள் அன்னை. அவளின் தலைக்கு மேல் அழகான வண்ணக்குடை உள்ளது. அதன் விளிம்பிலிருந்து தொங்கும் தொங்கல்கள் முதலியவை அழகுற தீட்டப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைக்கு இவை எடுத்துக்காட்டாகும்.

சோழர் காலம்

முற்காலச்சோழர் காலத்திலும் - சிற்பங்களில் மேலே சிறிய குடை காட்டப் பெற்றிருக்கும். புள்ளமங்கை, சக்கரப்பள்ளி,  தஞ்சை பெரியகோயில் முதலிய இடங்களில் இத்தகைய சிற்பங்களைக் காணலாம். இராஜராஜசோழன் காலத்தில் ஓவியங்கள் தஞ்சை பெரியகோயில் கருவறையைச் சுற்றியுள்ள பாதையில் தீட்டப்பட்டுள்ளன. மன்னர்கள் கோயிலுக்குக் குடை செய்து தானமளித்ததைப் பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்கொற்றக்குடை தானம் அளித்தான்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வண்ணக் கற்கள் பதித்த பொன்னாலான குடை ஒன்று விஜயரங்க சொக்கநாத நாயக்கனால் தானம் அளிக்கப்பட்டது. அக்குடையின் மீது தானமளித்த செய்தி தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

சமண சமயத்தில் தீர்த்தங்கரரின் சிற்பங்களில் தலைக்கு மேலே முக்குடை இருக்கும். இவரை "முக்குடை பகவான்'  என்று கூறுவார்கள்.

புத்தர் பிறந்ததின் நினைவாக எடுப்பிக்கப்பட்டுள்ள ஸ்தூபங்களின் மீது மூன்று விதமான குடைகள் இருக்கும்.

பிள்ளையார் சதுர்த்தியன்று களிமண் பிள்ளையாரின் தலைக்கு மேலே வைப்பதற்காக பல விதமான வண்ணக்குடைகள் தயாராகின்றன. 

(தொல்லியல் துறை - பணி நிறைவு).
 

ADVERTISEMENT
ADVERTISEMENT