தினமணி கொண்டாட்டம்

பெண் கொடுமைக்கு எதிரான பார்வை

22nd May 2022 05:05 PM

ADVERTISEMENT

 

ரசி மீடியா மேக்கர்ஸ் - வி.வி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் அரசி. தெலுங்கில் "தி குயின்'  என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.  பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையை முன் வைக்கும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக்ராஜு,  அங்கனாராய், மனீஷா ஜெஷ்நானி, ஹாசினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.திரைக்கதை,  வசனம் எழுதி இயக்குகிறார் சூரிய கிரண். படம் குறித்து இயக்குநர் பேசியது:

""ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.  ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது.

ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை.  பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். பெண்களுக்கு எதிராக சமீபமாக அரங்கேற்றப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகளை முன் வைக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது'' என்றார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT