தினமணி கொண்டாட்டம்

புதுமையாகுது பழைமை..!

DIN

சர்வதேச அளவில் பழைமை என ஒதுக்கப்பட்ட பல விஷயங்கள் தற்போது சில மாற்றங்களோடு மீண்டும் புதுமையாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வேளாண்மை, தொழில்நுட்பம் என பலவும் இதில் அடங்கும். அதில் ஒன்றுதான் போக்குவரத்து. கடந்த காலத்தில் நடந்துசென்ற மக்கள், பிறகு போக்குவரத்துக்கு மாடுகளையும், குதிரைகளையும் சவாரி விலங்குகளாகப் பயன்படுத்தினர். சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள் தோன்றின. அதன் தொடர்ச்சியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பேருந்து,  ரயில், விமானம் என நாம் பல வளர்ச்சியைப் பார்த்து வருகிறோம்.

இவற்றால் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய சீர்கேடுகள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளன. இந்த நிலையில், சூழல் சீர்கேட்டை குறைக்கும் ஒரு வாய்ப்பாக மின்சார பைக்குகள், கார்கள், பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தனிநபர்களின் குறைந்த தொலைவு பயணம், வேகம் தேவையற்ற பயணம் போன்றவற்றுக்கு மைக்ரோமொபிலிட்டி வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இது கிட்டத்தட்ட நாம் மீண்டும் சைக்கிளுக்கு மாறிய ஒன்றாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.

அந்த வகையில், ஆட்டோமொபைல் துறையில், குறிப்பாக வெளிநாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மைக்ரோமொபிலிட்டி துறை நம்பகமான எதிர்காலமாக உருவாகிவருகிறது.

மைக்ரோ மொபிலிட்டி என்பது மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் நம்மால் இயக்கப்படும் சிறிய, இலகுரக வாகனங்களாகும். இதில், மிதிவண்டிகள், மின்-பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார ஸ்கேட் போர்டுகள், பகிரப்பட்ட சைக்கிள்கள் மற்றும் மின்சார பெடல் உதவி சைக்கிள்கள் ஆகியவை அடங்கும். 

தொற்றுநோய்க்குப் பிந்தைய நிலையில், தற்போது மைக்ரோமொபிலிட்டி வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் இப்போது பொறுப்புடன் வாழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்குக் காரணம். கோவிட் 19-க்குப் பிறகு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மின்சார பைக் விற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள், இ- பைக்குகள் மற்றும் வழக்கமான சைக்கிள்கள் போன்ற குறைந்த புகை உமிழ்வு போக்குவரத்து அதிகமாகி, சூழல் மேம்பாட்டுக்கான தீர்வுகள் அதிகரித்து வருகின்றன. 

நிலையான எதிர்காலத்தை விரும்புவோருக்கு, தீங்கு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை அகற்றுவதற்கு மைக்ரோ- மொபிலிட்டி சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். உலகில் வெளியாகும் மொத்த புகை உமிழ்வுகளில் குறைந்தது 28% போக்குவரத்து தொடர்பானது. தற்போதைய சூழ்நிலையில் மைக்ரோமொபிலிட்டி என்பது காலத்தின் தேவையாகிவிட்டது. நம்முடைய போக்குவரத்து முறைகளில் மாற்றங்களைச் செய்தால், நிலையான மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்.

போக்குவரத்து வசதியற்ற பகுதியில் உள்ள நுகர்வோரின் ஆர்வத்தால் மைக்ரோமொபிலிட்டி நிறுவனங்களான ஓஎப்ஓ, மொபைக், சிட்டி பைக் மற்றும் ஜம்ப் பைக் போன்றவற்றின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

மிதிவண்டிகள், இ-பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார ஸ்கேட் போர்டுகள், பகிரப்பட்ட மிதிவண்டிகள் மற்றும் மின்சார பெடல்-உதவி (பெடலெக்) சைக்கிள்கள் போன்ற சிறிய, இலகுரக வாகனங்கள் இளைஞர்களிடையே நவநாகரீக போக்குவரத்து கருவிகளாக மாறியுள்ளன. 

எதிர்காலப்  போக்குவரத்துக்கான   மெக்கின்úஸ மையம் ஜூலை 2021 இல் நடத்திய ஆய்வின்படி, ஆய்வில் பங்கேற்ற 70 சதவீதம் பேர் தங்கள் வசதிக்காக மைக்ரோமொபிலிட்டி வாகனங்களைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர். மெக்கின்úஸ நிறுவன கூற்றுப்படி, மைக்ரோமொபிலிட்டி துறை 2030 ஆம் ஆண்டளவில் 30 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் இத்துறையின் வேலைவாய்ப்பில் செங்குத்தான உயர்வு காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பை விரும்பும் மாணவர்களுக்கு, குறிப்பாக மைக்ரோமொபிலிட்டி துறையில் வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஜெர்மனி மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. மாணவர்களுக்கான சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அங்கு அதிக அளவில் கிடைப்பதே இதற்குக் காரணம்.

ஆட்டோமொபைல் தொடர்பான படிப்புகளை விரும்பும் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. சவாலான பகுதிகளில் செயல்படும் தைரியம் இருந்தால், மைக்ரோமொபிலிட்டி துறை அவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தொழில் தேர்வாகும். முதல் வகுப்பு இளங்கலை பட்டம், சரளமான தகவல் தொடர்பு திறன், அதீத தொழில்நுட்ப அறிவு, சர்வதேச அளவில் வேலை பெறுவதற்கான ஆவல் ஆகிய திறன்கள் நிச்சயமாக சிறப்பான வாய்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் எதிர்காலத்தை விரும்பிய திசையில் வடிவமைக்கவும் உதவும். 

மைக்ரோ மொபிலிட்டி தொழில் மிகவும் உற்சாகம் மற்றும் போட்டித்தன்மையுடன் உலகம் முழுவதும் அதன் நோக்கத்தையும், திறனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபில்யு, ஆடி, போர்ஸ், வி.டபில்யு போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய போக்குவரத்து உத்தியான மைக்ரோ-மொபிலிட்டியை நோக்கிச் செயல்படுகின்றன. 

இந்தத் துறையில் தங்கள் வேலைவாய்ப்பை அமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஜெர்மனியில் உள்ள மொபிலிட்டி சிஸ்டம்ஸ் என்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட், நியூ மொபிலிட்டி-மைக்ரோமொபிலிட்டி, ஆட்டோமோடிவ் சிஸ்டம்ஸ் அட் எஸ்லிங்கன் யுனிவர்சிட்டி, எல்க்டிரிக் வெகிகில் புரபல்சன் அண்ட் கன்ட்ரோல் அட் கெய்ல் யுனிவர்சிட்டி ஆகிய கல்லூரிகளில் பயில பரிந்துரைக்கப்படுகிறது.

இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 

ஆனால், வேலைப் பளு காரணமாக, அவர்கள் தினசரி நடைமுறைகளில் போதுமான உடல்பயிற்சியைப் பெறுவதில்லை. எனவே, வேலைக்குச் செல்வதற்கான சைக்கிள்கள் போன்ற மைக்ரோமொபிலிட்டி தீர்வுகள் உடல்பயிற்சிக்கு மட்டுமல்ல, வேலைவாய்ப்பிலும் சிறந்த மாற்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT