தினமணி கொண்டாட்டம்

மனிதனாக வாழ்தல் மகத்தானது!

15th May 2022 04:58 PM | -ஜி.அசோக்

ADVERTISEMENT

 

சர்வதேச அடையாளங்களுடன் உலா வருகிறார் இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு. அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாகியிருக்கிற "கட்டில்', "கருவறை' என இரு படங்களுமே உலகப் பட விழாக்களில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட சர்வதேச விழாக்களிலும், புனே, மும்பை உள்ளிட்ட இந்திய திரை விழாக்களிலும் விருதுகளை குவித்திருக்கிறது. ஹங்கேரி திரைப்பட விழாவில் "கருவறை' இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

""நிறைய திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட் என நிறைய விருதுகள்.... ஹங்கேரி விழாவில் சிறந்தப் படத்துக்கான விருது வாங்கியிருப்
பதில் கூடுதல் சந்தோஷம். இரு படங்களையும் அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வர இருக்கிறேன். நம் படம் இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதை தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்து பார்க்க போகிறேன்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் இ.வி. கணேஷ்பாபு. ஒரு பக்கம் விளம்பர படவுலகம் என இன்னும் சிலிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறார்.

""இந்த இரு படங்களுக்கான கருவையும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கைதான் எல்லாம். வாழ்க்கையின் அனுமானம்தான் இந்த இரு கதைகளுமே... "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படங்கள்.''

ADVERTISEMENT

"கட்டில்' பற்றி முதலில் பேசலாம்....

நம் நினைவுகளோடும் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கிறது. தாத்தாவின் பேனா, சந்தோஷங்களைச் சுமந்து வந்த ஒரு கடிதம், அப்பாவின் சட்டை, தாத்தா தந்து விட்டு போன பம்பரம், அம்மாவின் தாலி இப்படி ஏதோ ஒன்றை எல்லோரும் வைத்துக் கொண்டுதான் வாழ்கிறோம். விதவிதமாக, ரகரகமாக இவ்வளவு கார்கள் ஓடும் பெருநகரத்தில், இன்னமும் நினைவில் ஒரு சைக்கிளைச் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு முதியவரை எங்கேயாவது பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்.

யோசித்துப் பார்த்தால், எண்பதுகள் வரை பிறந்த எல்லோரது ஞாபகத்திலும் கை, கால், முகம் முளைத்த ஒரு சைக்கிள் உட்கார்ந்திருக்கும். அது போல்தான் இந்தக் கதையில் கட்டில். பரம்பரையாகத் தொடரும் ஒரு கட்டில் அதைச்சுற்றிய மனிதம்தான் கதை. மொழியே தெரியாமல் பார்த்தாலும் கண்ணீர் கரையும். சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம்.


எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்கு தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில் திட்டமிட்டுச் செய்து முடித்ததுதான் இந்தப் படம். மனிதனாக வாழ்தல் மகத்தானது. இதை 1970, 1940, இப்போது என மூன்று காலக் கட்டங்களாக அடுக்கியிருக்கிறேன். தாத்தா, மகன், பேரன் என வாழ்வாங்கு வாழ்ந்த கதை இது.

லெனின் சார் எழுதிய கதை இது. பாரம்பரிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவர்தான் கிளறி விட்டார். அதை கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என சினிமாவுக்குள் எடுத்து வந்திருக்கிறேன். லெனின் சார் இந்தப் படைப்புக்கு ஆகச் சிறந்த பலம்.

நீங்களே தயாரித்து, நடித்து, இயக்குவது கடினம் இல்லையா....

மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாத்துக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். இதுகூட சென்டிமெண்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதுசு. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதற்கு பிறகுகூட துறவு கதைகள் இங்கே அதிகமாக இருக்கிறது. சித்தார்த்தன் முதல் பட்டினத்தார் வரை ஏக கதைகள் உண்டு. எங்கே நிம்மதி, எப்படி சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. நல்லவன் வாழ்க்கை எவ்வளவு எளியதாயினும் நிம்மதியானது. வைரமுத்து சார், ஸ்ரீகாந்த் தேவா, "வைட்ஆங்கிள்' ரவிசங்கரன், சிருஷ்டி டாங்கே, விதார்த் என துணைக்கு எல்லோருமே அவ்வளவு பலம்.

"கருவறை'யின் கதை வடிவம் எப்படி....

அரவிந்த், ஆர்த்தி இந்த இரண்டு பேருக்குமான காதலும், அன்பும்தான் படம். வாழ்க்கையை ரசனையாக, அதன் போக்கில் காமெடியாக, உற்சாகமாகவே வாழ்கிறவன்... அரவிந்த் வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்காரன். எந்த பிரமிப்பும் ஏக்கமும் அவனுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான்.

அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற மனப்பக்குவம் கொண்ட மனுஷி ஆர்த்தி. இவர்களின் ஒரே மகள் அஞ்சனா. இந்த மூவருக்குமான உலகம்தான் கதை. வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதை விடக் கொடுப்பினை ஏது...

நீண்ட பயணம்... சலிக்காத உழைப்பு... ஒரு வெற்றி பெரிய மாற்றம் தரும் இல்லையா....?

எல்லோருக்கும் இன்னும் மேலே போக ஆசைதான். எல்லா எல்லைகளையும் அடைந்து விட்ட ஒரு இயக்குநரை போய், இனி என்ன இருக்கிறது என கேட்க முடியாது. அவருக்கும் இன்னும் மேலே போக ஆசை. இப்படி எல்லோருக்கும் வாழ்க்கை ஒரு விதம். சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் என கிடைக்கிற வாழ்வு எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை.அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம்.

கிராமத்தில் இருந்து வந்து நமக்கென ஒரு இலக்கு வைத்து இந்த பெருநகரத்தில் சுழலும் போது, அந்த இலக்கை அடைய மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது. மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. தகுதியே இல்லாதவர்கள் உச்சம் அடைந்து விடுவதையும், எல்லாத் தகுதியும் இருந்தும் கஷ்டப்படுகிறவர்களையும் பார்க்கும் போது, வாழ்வின் மீது வெறுப்புதான் வருகிறது. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது. பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT