தினமணி கொண்டாட்டம்

சதுரங்கத்தின் தாயகம்!

17th Jul 2022 06:00 AM

ADVERTISEMENT

 

சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிகுந்த பல்லவ மன்னர்களின் துறைமுகப்பட்டினமான மாமல்லபுரத்தில் இந்த ஆண்டு (2022 ஜூலை 28-இல் தொடங்க உள்ளது.

செஸ் என்னும் சதுரங்கம் மிகவும் தொன்மையான விளையாட்டாகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற கீழடி அகழ்வாராய்ச்சியில் சூளையில் சுடப்பட்ட சதுரங்கத்தின் ஆட்ட காய்கள் கிடைத்துள்ளன. பல்வேறு வடிவமைப்புடன் இவை விளங்குகின்றன. இதுபோன்ற சுடுமண் ஆட்ட காய்கள் காஞ்சிபுரம், திருக்காம்புலியூர், திருக்கோவிலூர், போவோம்பட்டி போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்துள்ளன. 

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகளால் அவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அதாவது சுமார் 3000 ஆண்டுகள் தொன்மையானதாக விளங்குகிறது. பிற்காலத்தில் தந்தம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆட்டக்காய்களும் பயன்பாட்டில் வந்திருந்தன.

ADVERTISEMENT

சதுரங்க விளையாட்டு இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு பரவியது என "ஜேம்ஸ் ருத்வனமுர்ரே" என்பவர் 1913-இல் எழுதிய செஸ் விளையாட்டின் வரலாறு" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது அரசர்களின் விளையாட்டு என முன்பு கருதப்பட்டது. 64 கட்டங்கள் கொண்ட விளையாட்டு அஷ்டபாதா - சதுரங்கா என அழைக்கப்பட்டது. 32 காய்கள். அதில் அரசன் - அரசி- கோட்டை- மந்திரி,  குதிரை- படை வீரன் என்ற பெயர்களால் அழைக்கப்படுவதைக் காண்கிறோம்.

சதுரங்க வல்லபநாதர்

தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில் திருவாரூர் மாவட்டத்தில்  நீடாமங்கலம் அருகில் பாமணி ஆற்றின் கரையில் திருப்பூவனூர் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புராண வரலாற்றில் வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கினாள் அம்பாள். சதுரங்க ஆட்டத்தில் இறைவன் அம்பாளை வென்று மணந்து கொண்டதால் இறைவனுக்கு சதுரங்க வல்லபநாதர்" என்று இங்கு போற்றி அழைக்கப்படுகின்றார். மேலும் சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கிய பட்டடக்கல் விருப்பாட்சர்" கோயிலிலும் இறைவன் சதுரங்க ஆட்டம் ஆடும் சிற்பங்களைக் காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20-ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினமாகக் கொண்டாடப்படுகிறது. தொன்மைச் சிறப்பு வாய்ந்ததும் அறிவுக்கூர்மையின் அடையாளமாக விளங்குவதுமான சதுரங்க விளையாட்டு தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கக் கூடியதாகும்.
-கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு).

ADVERTISEMENT
ADVERTISEMENT