தினமணி கொண்டாட்டம்

பிரஸ் கவுன்சில்: முதல் பெண் தலைவர்

3rd Jul 2022 06:00 AM | தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 

இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1966-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கவுன்சிலின் தலைவர் பதவியை வகிக்கும் முதல் பெண் இவர் ஆவார்.

இதற்கு முன்னர் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரமெளலி குமார் பிரசாத்தின் பதவிக்காலம், 2021-ஆம் ஆண்டு நவம்பரில் முடிவடைந்தது. இதனால், தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாயை தலைவராக மத்திய அரசு அண்மையில் நியமித்தது. இதையடுத்து, அவர் பதவியேற்றார்.

ADVERTISEMENT

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் 1949-ஆம் ஆண்டு அக். 30-இல் மும்பையில் பிறந்தார். சட்டம் படித்த அவர், 1973-இல் வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார்.

1979-இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.

1995-இல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுபேற்றார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2011-இல் ஓய்வு பெற்றார்.

பின்னர், ஜம்மு- காஷ்மிர் யூனியன் பிரதேசத்தின் சட்டப் பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர், மின்வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் போன்றவற்றில் பணியாற்றினார்.

தற்போது பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, முதல் பெண் தலைவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT