தினமணி கொண்டாட்டம்

வெற்றிக்கு நம்பிக்'கை' போதும்!

3rd Jul 2022 06:00 AM | ஜி. கிருஷ்ணகுமார்

ADVERTISEMENT


வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம் என்பவை தன்னம்பிக்கை வரிகள்.  அந்தத் தன்னம்பிக்கை வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விரல்கள் மட்டுமல்ல, கைகளே இல்லாமலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  மாணவி லட்சுமி.

திருவாரூரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்குப் பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்ததால், பிறந்த 16 -ஆவது நாளிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவர் லட்சுமி.  இந்தப் பெயர்  குழந்தையாகப் பராமரிக்க ஏற்ற அன்பகம் மாற்றுத்திறனாளிகள் காப்பக நிர்வாகிகள் கலாவதி -  ஞானசம்பந்தம் தம்பதியர் சூட்டியதுதான்.

முடத்தால் முடங்காத இந்த மாணவி,  பல்வேறு கலைகளிலும் தனது திறமைகளை வளர்த்துகொண்டு, சாதனைப் பெண்ணாக ஜொலிக்கிறார்.

தரையில் வைக்கப்படும் கரகத்தை தன் கால்களால் தலையில் ஏந்தி, தேர்ந்த கரகாட்டக் கலைஞரைப் போன்று லட்சுமி ஆடும் கரகாட்டத்தைக் கண்டு வியப்பில் விரியாத விழிகள் இருக்க முடியாது.  ஆடுவதில் மட்டுமல்லாமல், அனைத்துப் பாடல்களையும் சுருதி சுத்தமாக பாடுவதிலும் வல்லவராகவே உள்ளார் லட்சுமி.

ADVERTISEMENT

இவை எல்லாவற்றுக்கும் மேலாக,  தனது இடது கால் விரலில் எழுதுகோலைப் பிடித்து இவர் வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பேசும் படங்கள். கால் விரல்களில் மருதாணி கோனை ஏந்தி சக மாணவிகளின் கைகளை அலங்கரிக்கும் இவரது மெகந்தி, காண்போரை மெய்சிலிர்க்கச் செய்பவை.

2017-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி மகா புஷ்கரம் திருவிழாவின்போது, காவிரி துலாக்கட்டத்தில் லட்சுமி ஆடிய கரகாட்டம், காண்போர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில், அவரது பெற்றோரும் அடங்குவர்.

லட்சுமியின் கரகாட்டத்தை யூடியூப் மூலம் பார்த்த அவரது பெற்றோர், லட்சுமிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுடன் மயிலாடுதுறை அன்பகம் வந்து லெட்சுமிக்கு அன்புடன் அழைப்பு விடுத்த போதும், அடுத்த சில மாதங்களுக்குப் பின்னர் உறவினர்களுடன் வந்து அழைத்தபோதும், அந்த அழைப்புகளை நிராகரித்துள்ளார் லட்சுமி.

""எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குத் தாய் - தந்தையாக இருந்து என்னை வளர்த்தவர்கள் அன்பகம் நிர்வாகிகள். பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் - என் உறவினர்கள். என் சக மாணவர்கள் என் சகோதர, சகோதரிகள். இந்தக் குடும்பத்தை என்னால் பிரிய இயலாது'' என்ற மாணவி லட்சுமியின் வார்த்தைகள், அவரது நன்றியின் பிரதிபலிப்பு. மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் உள்ள தம்பிக்குநல்லான்பட்டினம் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் பயின்ற லட்சுமி, அண்மையில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியோடு (ஸ்கைரப்) சந்தித்து, 277 மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவயங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளவர்கள் பலரும் கூட பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், கைகள் இரண்டும் இல்லாத மாணவி 277 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதையறிந்து மகிழ்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் நேரடியாக மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்துக்கு வந்து, மாணவி லட்சுமிக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

அதுமுதல், மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் மாணவி லட்சுமிக்குக் குவிகின்றன.

""வாழ்த்துகளும், பாராட்டுகளும் மென்மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளன. அந்த ஊக்கத்துடன் வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகளைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார் லட்சுமி. ஆம் அவர்  உண்மையான தைரியலெட்சுமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT