தினமணி கொண்டாட்டம்

தமிழகம் போற்றும் 'மண்பானை பொங்கல்'

16th Jan 2022 06:00 AM | கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை

ADVERTISEMENT

 

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற வாக்கிற்கு இணங்க, நமக்கு உணவு அளித்து, நல்வாழ்வு அளிக்கும் உழவுத் தொழிலை தைப்பொங்கல் திருநாளில் நாம் வந்தனை செய்கிறோம்;. வேளாண்மைக்கு உதவி செய்கின்ற கதிரவன், கால்நடைகள் தமிழகம் போற்றும் மண்பானை பொங்கல் கலப்பை ஆகியவற்றை அந்நன்னாளில் போற்றி வணங்குகிறோம்.

மண்பானை

தை மாதம் அறுவடையான புது அரிசியை புது மண்பானையில் இட்டு, பொங்கலிட்டு வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அன்றாட பயன்பாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டாலும், பொங்கல் திருநாளின்பொழுது மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. புதுப்பானை, மஞ்சள்-இஞ்சிக் கொத்து, இனிமை நிறைந்த கரும்புகளுடன் நம் வழிபாடு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வரலாற்றில் மண்பானை

மண்பானை நமது வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. மனிதன் நாகரீகம் அடைய தொடங்கியதும் உணவுஉற்பத்தியைத் தொடங்கிய புதிய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் பானைகளை கைகளால் செய்து வெயிலில் காய வைத்து பயன்படுத்தினர். இத்தகைய பானை ஓடுகள் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
இதற்குப் பின் வந்த உலோக காலம் எனப்படும் இரும்பு காலத்தில், மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி வேளாண்மையை செய்து, வாழத் தொடங்கினான். இக்காலத்தில் பானைகளை சக்கரத்தில் வைத்து வனைந்து சூளையில் வைத்து வேகவைத்து தயாரித்துக் கொண்டார்கள். ஈரக் களிமண்ணில் பானைகளை செய்யும் பொழுது அதனை வலிமைப்படுத்துவதற்கு மரப்பலகையால் தட்டி கடினப்படுத்துவர். அப்பொழுது மண்பானையின் உட்புறத்திலும் பானைச் சுவர் உடையாமல் இருக்க ஒரு வட்ட வடிவமான கல்லைக் கையில் அணைப்பாக வைத்துக் கொள்வர்.
வ்வாறு பயன்படும் கல் டாப்பர் என அழைக்கப்படும். அத்தகைய கற்களும் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன. இக்காலத்தில் உட்புறம் கருமை நிறமாகவும் வெளிப்புறம் சிவந்த நிறமுடைய பானைகள் அதிக அளவில் கிடைக்கின்றன. இத்தகைய கருப்புச் சிவப்பு பானை ஓடுகள் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் முக்கியச்சான்றாக விளங்குகின்றன. இப்பானை ஓடுகளின் மீது குறியீடுகளும் , பண்டைய தமிழ் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தைச் சேர்ந்த இக்கால பண்பாடு, கொடுமணல், கீழடி, கரூர், மாங்குடி, தேரிருவேலி, உறையூர், அழகன்குளம், பட்டரை பெரும்புதூர், மாளிகைமேடு, (கடலூர்), காஞ்சிபுரம், பண்ருட்டி அருகே மருங்கூர், பொருந்தல் போன்ற பல இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் காணப்படுகின்றன. சங்க இலக்கியம் குறிப்பிடும் முதுமக்கள் தாழிகள் செம்பியன் கண்டியூர், ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற பல வரலாற்று இருப்பிடங்களில் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியங்களில் மட்பாண்டங்கள்

சங்க இலக்கியங்களில் மட்பாண்டங்கள் செய்வோர் பற்றியும் எவ்வாறு சூளையிலிட்டு வேக வைத்து செய்தனர் என்பதை பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. மேலும் குழிசி, பானை, குடம், தாழி, நெல் சேமித்து வைக்கும் குதிர், தசும்பு என்று பலவகையான மட்கலன்கள் குறிப்பிடப்படுவதை காணலாம். கிராம சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் ஓட்டுப் பெட்டிகளாக மண்பானைகள் பயன்படப்பட்டதாக அகநானூறு கூறுகிறது. இறந்தவர்களைப் புதைக்க பயன்பட்ட தாழியைப் பற்றி கூறும் பொழுது அருளி வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி அகலிதாக வனைமோ நனந்தலை வழைபோ மூதூர் கலம்செய் கோவே (புறம் : 256-4-7) என்று புறநானூறு குறிப்பிடுகிறது. கோவை அருகே அண்மையில் கிடைக்க பெற்ற முதுமக்கள் தாழியின் பானை ஓட்டில் "ஈமத்தாழி' என்றே பண்டைய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பல்வேறு வகையான பானைகள் துளையிடப்பட்ட வடிகட்ட பயன்படும் பானைகள்ஞூஞூ உறைகிணறுகள், கூரை ஓடுகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை பண்டைய நாளில் சிறப்புடன் இருந்த களிமண் சுடுமண் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன என்றால் மிகையில்லை!

இதைத்தவிர அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ரோமானிய நாட்டைச்சேர்ந்த அரிட்டைன், ரெளலட், ஆம்பொரா மதுஜாடிகள் போன்றவைகளும், சீன நாட்டுப்பானை ஓடுகளும் தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பு சான்றாக விளங்குகின்றன.

வேட்கோவர்:

வரலாற்றுக் காலத்திலும் மண்பானைகளை செய்பவர்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவர்கள் வேட்கோவர், வேள்கோ, மண்ணுடையான், கலமிடும் குசவன் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர். கிராமங்களில் வேட்கோவர்கள் முக்கிய இடம் பெற்று விளங்கி இருக்கின்றனர். குயவர்களுக்கு அளிக்கப்பெற்ற நிலம் குசக்காணி, குசப்பட்டி, குசவன் நிலம் என்றெல்லாம் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

குலால விருத்தி

மேலும் திருக்கோயில் வழிபாட்டிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. கோயில் வழிபாட்டிற்கு தேவையான கலங்கள், சால்கள், குடங்கள், அமுதுக்கு பானைகள், சட்டிகள், பாலிகைகள் போன்றவை செய்து அளிக்கப்பட்டது. மட்பாண்டம் செய்ய அளிக்கப்பட்ட நிலம் குலால விருத்தி” என அழைக்கப்பட்டது. திருக்கோயில் மடைப்பள்ளிக்கு (சமையல் செய்யும் இடம்) தேவையான பானைகள் செய்து அளிக்கப்பட்டன. இன்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோயில்களில் இறைவனுக்கு அமுது படைப்பதற்கு மண்பானைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருவரங்கம் கோயிலில் மண்பானை "கூன்' என்று அழைக்கப்படுகிறது.

சட்டிச்சோறு புறம்:

கோயில்களுக்கு வழிபட வரும் வெளியூர் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதற்கு சட்டிச்சோறு என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இதற்காக தானமாக அளிக்கப்பட்ட நிலம் சட்டிச்சோறு புறம் எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது குறிப்பிடப்படுகிறது.

கோயிலுக்கு பலர் தானங்கள் அளித்தது போலவே குயவர்களும் தானம் அளித்ததைப்பற்றி கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்தில் சூளாமணி பெளத்த விகாரம் எடுப்பிக்க ராஜராஜசோழன் ஆனைமங்கலம் என்ற ஊரை பள்ளிச்சந்தமாக - தானமாக அளித்ததாக ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது. ஆனைமங்கலத்தின் எல்லைகளை குறிக்கும்பொழுது அவ்வூரைச் சேர்ந்த வேட்கோவர்கள் கையொப்பம் இட்டனர். அச்செப்பேட்டில் ஐந்து ஊர்களை சேர்ந்த வேட்கோவர்கள் கையெழுத்து இடும் பெருமையையும் பெற்றிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

மண்பானையில் சமையல் செய்து உணவு சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது எனக் கூறுகின்றனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மண்பானை சமையல் மிகச்சிறப்பு வாய்ந்தது ஒன்றாகும்.

நமது வாழ்க்கையில் மண்பானைகள் ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்று விளங்குகின்றன. திருக்கோயில் வழிபாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் தொன்மை வரலாற்றிலும் இன்றியமையாத வரலாற்றுச் சான்றாக அமைகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த மண்பானையில் தைப்பொங்கல் திருநாளில் இனிமை நிறைந்த, மணக்கும் பொங்கலிட்டு மகிழ்வோம்! பொங்கலோ பொங்கல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT