தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 49

16th Jan 2022 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT

 

கமகம....வென்ற மணத்துடன் முறுவலான ஆனியன் ரவா நெய் ரோஸ்ட் தோசை ஒன்று,  மெதுவடை ஒன்று,  கெட்டியான தேங்காய் சட்னி,  சின்ன வெங்காய சாம்பார்,  தக்காளி சட்னி - இவைகளெல்லாம் உங்கள் எதிரில் வைக்கப்படுகிறது. இந்த  ஐயிட்டங்களின் வாசனையை உங்கள் மூக்கு நுகர்ந்தவுடனேயே வாய் ஈரமாக ஆரம்பித்துவிடுகிறது. அடுத்ததாக,  இந்த ஐயிட்டங்களை உங்கள் கண்கள் பார்த்தவுடனேயே உங்கள் வாயில் எச்சில் அதாவது "உமிழ்நீர்' ஊறும். ஊறணும். ஊற வேண்டும். அப்படி வாயில் உமிழ்நீர் ஊறவில்லையென்றால்,  ஒன்று உங்களது உடல்நலம் சரியான கண்டிஷனில் இல்லையென்று அர்த்தம். அல்லது உங்கள் எதிரில் வைக்கப்பட்டுள்ள உணவு ஐயிட்டங்கள் உங்கள் ஆசையை,  உங்கள் ஆவலை,  உங்கள் பசியை தூண்டுகிற அளவுக்கு சரியான முறையில் தயாரிக்கப்படவில்லை என்று அர்த்தம்.
விஷயத்துக்கு வருவோம். எதிரில் வைக்கப்பட்டுள்ள உணவு ஐயிட்டங்களைப் பார்த்தவுடனே வாயில் உமிழ்நீர் ஊற ஆரம்பித்துவிடும். உமிழ்நீர் ஊறினாலும் சரி, ஊறாவிட்டாலும் சரி,  நாம் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். சாப்பிட்டு முடித்தபின் வயிற்றில் ஏற்படும் செயல்தான் செரிமானம் என்று எல்லோரும் நினைப்பதுண்டு. அதுதான் கிடையாது. உணவின் வாசனையை நுகரும்போதே, அந்த உணவைப் பார்க்கும்போதே நம்முடைய வாயில் எச்சில் அதாவது உமிழ்நீர் ஊற ஆரம்பித்துவிடுகிறது. நம்முடைய வாயில் எப்பொழுது உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதே செரிமானம்  என்கின்ற செயல் ஆரம்பித்துவிடுகிறது என்று அர்த்தம். எனவே  அதாவது ஜீரணம்,  செரிமானம் என்ற செயல் முதலில் உமிழ்நீரிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. இந்த உமிழ்நீரை ஊறவைக்க வேண்டிய வேலையை செய்வது நம்முடைய மூளையாகும். எனவே ஜீரணம் முதலில் மூளையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. மூளையானது வாயில் உமிழ்நீரையும் வயிற்றில் (இரைப்பையில்) உணவை ஜீரணிக்க உதவும் ஜீரண நீரையும் சுரக்கச் செய்கிறது.
நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் விஷயத்தில், ரத்தத்தின் பங்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தத்தின் உதவி இல்லையென்றால் நாம் மசால் வடையையும் சாப்பிட முடியாது. மசால் தோசையையும் சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு உணவு செரிமான விஷயத்தில், ரத்தம் முக்கியமான வேலையைப் பார்க்கிறது.     
நாம் நமக்குப் பிடித்த உணவை முதலில் வாயில் போட்டு மெல்லுகிறோம். அடுத்து விழுங்குகிறோம். அவ்வளவுதான் நமக்குத் தெரியும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. நெய் ரோஸ்ட் தோசையில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்து,  கொஞ்சம் சட்னியில் தொட்டு, கொஞ்சம் சாம்பாரில் தொட்டு, வாயில் போடுகிறோம். வாயில் போட்ட
வுடன்  நாம் அதை நன்றாக, மெதுவாக மெல்லுவதற்கு ஆரம்பிக்கிறோம். மெல்லும்போது வாயில் போடப்பட்ட தோசைத்துண்டு, உமிழ்நீருடன் சேர்ந்து மிகமிகச் சிறிய துண்டுகளாக, அரையும் குறையுமாக ஆக்கப்படுகிறது. இது நாம் உள்ளே விழுங்குவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்படி ஆக்கப்படுகிறது.
வாயிலுள்ள பற்களினால் அரைகுறையாக அரைக்கப்பட்ட தோசைத்துண்டு,  உங்கள் வாயிலிருந்து வயிற்றுக்குள் ,இறங்குவதற்கு முன்பு,  வாயில் சுரக்கும் , "அமைலேஸ்' என்கிற என்ûஸம்,   வாயில் இருக்கும் உணவிலுள்ள "ஸ்டார்ச்' அதாவது மாவுச்சத்துள்ள பொருளை மட்டும் பிரித்தெடுத்து ஜீரணமாக்கிவிடுகிறது. ஆக, நாம் சாப்பிடும் உணவில், முதலில் ஜீரணமாகும் 
சத்துப்பொருள் - ஸ்டார்ச் அதாவது மாவுச்சத்து. இதை "ரசாயன ஜீரணம்' என்றும் சொல்லலாம்.
உங்களுடைய இருதயம், ரத்தத்தை ஒரு கூட்டான வலைப்பின்னல் கட்டமைப்பு மூலமாக,   பம்ப் பண்ணி உடலெங்கும் சீராக பரவச்செய்கிறது. இவ்வாறு பம்ப் பண்ணப்படும் ரத்தம்,   உங்களது ஜீரண மண்டலத்தின் வழியாகவும் பாய்ந்து செல்லுகிறது. நாம் சாப்பிட்ட உணவு,    வாயிலிருந்து ஜீரண மண்டலத்தின் பாதையில் படிப்படியாக,   கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்கிறது. உணவு இரைப்பைக்கு வந்து சேர்ந்தவுடன்  செரிமான வேலை ஆரம்பிக்கிறது. இரைப்பையில் செரிமான வேலை ஆரம்பித்தவுடனேயே,   உடலின் பல பகுதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ஓட்டம் எல்லாமுமே,   இரைப்பையை சுற்றி வந்துவிடுகிறது. 
இரைப்பை,  செரிமான வேலையைப் பார்க்க,   அதிக ரத்தம் தேவைப்படுகிறதல்லவா‚ சாப்பிட்டு முடித்த முதல் 20 நிமிடத்திலிருந்து 40 நிமிடத்திற்கு,   உணவுப் பாதையில் ரத்த ஓட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்த அதிக ரத்த ஓட்டம் சுமார் 1 மணி நேரம் வரை இருக்கும். சாதாரண சாப்பாட்டுக்குப் பிறகு ரத்த ஓட்டம் இரைப்பையைச் சுற்றி அதிகமாக இருக்கும். அப்படியிருக்கையில்,   சிறப்பு சாப்பாட்டுக்குப் பிறகு ரத்த ஓட்டம் - சொல்லவே வேண்டாம். மிகமிக அதிகமாக இருக்கும். சாப்பிட்டவுடன்,   ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றுப் பகுதிக்குச் சென்றுவிடுவதால்,   மூளைக்குச் செல்லவேண்டிய ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.      
இதனால் மூளை மந்தமாகிவிடும். சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இதனால்தான்.
நமது உடலுக்குத் தேவையான சத்தும்,  சக்தியும் நமது ஜீரண மண்டலத்தின் மூலமாகத் தான் கிடைக்கிறது. அப்படியொரு  அற்புதமான,  திகைப்பான, ஆச்சரியமான,   அசத்தலான, பிரமாதமான ஒரு கருவிதான்,  நமது உடலுக்குள் இருக்கும் உணவு மண்டலமும், இரைப்பையும் ஆகும். "70-80 வருடங்கள் - ஏன் 100 வருடங்கள் வரை பிரச்னை செய்யாத மிக்ஸி உலகில் உண்டா? உண்டு. அதுதான் நம் வயிறு என்று நண்பர் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எனது நூல் ஒன்றின் அணிந்துரையில் சொல்லியிருப்பார்.
மிகமிக மென்மையான தனியா, மிளகாய் போன்றவைகளிலிருந்து,  மிகமிகக் கடினமான பருப்புகள், சுக்கு போன்றவைகளையெல்லாம் அரைத்து பவுடராக்கக்கூடிய மாவு மில்லில் உள்ள மெஷின் போல, எதை வாயில் போட்டாலும் அரைத்துத் தள்ளி, பொடிப்பொடியாக்கி, சுக்கு நூறாக்கி, செரிமானம் செய்யக்கூடிய அளவுக்கு, மனித உடலுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான கருவிதான் உணவு மண்டலத்திலுள்ள இரைப்பை ஆகும். 
வாயில், உமிழ்நீருடன் சேர்ந்து அரைகுறையாக அரைக்கப்பட்டுத் தயாரான உணவுக் கவளம் வயிற்றிலுள்ள இரைப்பையை வந்தடைகிறது. இரைப்பையில் ஏற்படும் அலை போன்ற நகர்வுகளால் உணவுக் கவளம் இரைப்பையில் இருக்கும் மிகமிக ஸ்ட்ராங்கான ஜீரண நீராகிய ஹைட்ரோக்ளோரிக் அமிலம்,  மற்றும் ஜீரண என்ûஸம்கள்,          ஹார்மோன்கள் முதலியவைகளுடன் சேர்ந்து ஒரு "கெட்டிக் குழம்பு'  போல் ஆகிவிடுகிறது. ஹைட்ரோக்ளோரிக் அமிலம் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கெட்ட பொருட்கள்,  விஷப்பொருட்களை அழித்துவிடுகிறது. இரைப்பையில், "பெப்ஸின்' என்று சொல்லக்கூடிய என்ûஸம் உணவிலுள்ள புரதத்தை உடைத்து, பிரித்து,  எடுத்துவிடுகிறது.  
"கெட்டிக் குழம்பு'  போல் இரைப்பையிலிருக்கும் உணவுக்கூழ், இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. சிறுகுடலில் தான் செரிமானம் சம்பந்தப்பட்ட பல மாயா ஜாலங்களும்,  மந்திர தந்திர வித்தைகளும் நடக்கின்றன. இரைப்பை தான், நாம் சாப்பிடுகின்ற உணவு முழுவதையும் செரிக்கச் செய்கிறது என்று நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறது. ஆனால், உண்மையில் சொல்லப் போனால்,  சிறுகுடல்தான் இந்த முழு வேலையையும் செய்கிறது. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துப் பொருட்களையெல்லாம், பிரித்தெடுத்து, ஒன்று சேர்த்து, பத்திரப்படுத்தி பாதுகாத்து உடல் முழுக்க ரத்தம் மூலம் அனுப்பி வைக்க தயார் பண்ணுவது சிறுகுடல்தான். பெயர்தான் சிறுகுடல். ஆனால் செய்வதெல்லாம் பெரிய வேலை.
கணையத் திரவத்துடன் உணவுக்கூழ் சேர்கிறது. கணையத் திரவத்திலுள்ள பைகார்பனேட் ரசாயனப் பொருள்  உணவிலுள்ள அமிலத்தை அமைதியாக்குகிறது. "லைப்பேஸ்'  கொழுப்பைக் கரைக்கிறது. "அமைலேஸ்' மாவுச்சத்தை மாவாக்குகிறது. புரோட்டடியேஸஸ் என்ûஸம்கள் புரதப் பொருட்களை தூளாக்கிவிடுகிறது. இதுபோல,  சிறுகுடலில் ஏற்படும் பல்வேறு செரிமான செயல்களால்,  உணவுப்பொருட்கள் சுத்தமாக ஜீரணமாக்கப்படுகிறது. 
மனிதனின் வயிற்றில் இருக்கும் சிறுகுடலின் நீளம் சுமார் 6 மீட்டர் (கிட்டத்தட்ட 20 அடி) இருக்கும். பெருங்குடலின் நீளம் சுமார் 1 மீட்டர் (கிட்டத்தட்ட 5 அடி). பெருங்குடலைவிட நீளம் அதிகமானது சிறுகுடல். ஆனால் சிறுகுடலின் அகலம், பெருங்குடலைவிட மிகச்சிறியது என்பதால்,  இதை சிறுகுடல் என்று சொல்லிவிட்டார்கள்.
மனிதனின் சராசரி உயரமே சுமார் 6 அடிக்கு உள்ளேதான். அப்படியிருக்க,   சிறுகுடல் சுமார் 20 அடி நீளம் என்கிறீர்களே, இவ்வளவு நீளமான சிறுகுடல் எப்படி வயிற்றுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமே. சிறுகுடல் மடிப்பு மடிப்பாக சுமார் 600 மடிப்புகளாக மடிந்து மடிந்து வயிற்றுக்குள் சுருங்கி இருக்கின்றது.
செடி கொடிகள் போன்ற தாவரங்களை உண்டு வாழ்கின்ற உயிரினங்களுக்கு சிறுகுடல் ,  மிக நீளமாக இருக்கும். தாவரங்களில் "செல்லுலோஸ்' என்கிற பொருள் அதிகமாக இருக்கிறது.  இந்த செல்லுலோஸ் அவ்வளவு சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது. மிக நீளமான சிறுகுடல் இருந்தால், மெதுமெதுவாக "செல்லுலோஸ்' பொருள் முழுவதும் செரிமானம் ஆகிவிடும் என்பதனால், சிறுகுடல் மிக நீளமாக அமைந்திருக்கிறது.
வைட்டமின்கள், தாதுப்பொருட்கள்,  தண்ணீர், மருந்து,  மாத்திரைகள், சத்துப் பொருட்கள் முதலிய எல்லாமே சிறுகுடலின் மூலம் உறிஞ்சப்பட்டு, சிறுகுடலிலுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வழியாக உடல் முழுக்க போய்ச் சேர்கிறது.
ரத்தம் - ஒரு உயிருள்ள திரவம் ஆகும். நாம் சாப்பிடும் உணவிலுள்ள அனைத்துப் பொருட்களையும்,  உணவுப் பாதை வழியாக உறிஞ்சி,  உடல் முழுக்க அனுப்பும் முக்கியமான வேலையை ரத்தம் செய்கிறது. ரத்தத்திற்கு நல்ல பொருள் எது, கெட்ட பொருள் எது என்று பிரித்தெடுக்கத் தெரியாது. நாம் அமுதத்தை சாப்பிட்டாலும்,  ரத்தம் நமது உடலெங்கும் கொண்டுபோய் சேர்த்து
விடும். நாம் விஷத்தைச் சாப்பிட்டாலும், 
ரத்தம் நமது உடலெங்கும் கொண்டுபோய் சேர்த்துவிடும். எது நல்லது,   எது கெட்டது என்பதை நாம் தான் பிரித்தெடுத்து உண்ண வேண்டும். 

- தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT