தினமணி கொண்டாட்டம்

பார்க்க வேண்டிய 'பெருங்கிணறு'

கி.ஸ்ரீதரன்


திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள,  திருவெள்ளறை ஒரு சிறந்த வைணவத்தலம். 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் போற்றிப்பாடி மங்களாசாசனம் செய்வித்த திவ்யதிருத்தலம். 

ராமானுஜரின் சீடரான உய்யக்கொண்டாரை "ஆளவந்தவனை'  என்று அழைத்துப் பாராட்டினார் இதனால் இவர் எங்கள் ஆழ்வார் என அழைத்துப் போற்றப்பட்டார். இவர் பிறந்த தலமும் இதுவே.

விசிஷ்டாத்வைதத்தை தோற்றுவித்த ஸ்ரீராமானுஜர் இரண்டு ஆண்டுகள் இங்கு தங்கி ஸ்ரீரங்கம் கோயிலின் வழிபாட்டு முறைகளையும் விழாக்களையும் ஒழுங்குபடுத்திய பெருமைக் கொண்டது.

"சுவேதகிரி'  வெள்ளறை பெருமாள் கோயிலுக்கு எதிரிலே உடையவர் கோயில் தனியாக அமைந்துள்ளது. வைணவ வரலாற்றில் திருவெள்ளரை முக்கிய இடம் பெறுகிறது. வெண்மையான பாறைகள் இங்கே காணப்படுவதால் "சுவேதகிரி'  எனவும் இரண்டரை எனவும் அழைக்கப்படுகிறது.

திருவெள்ளறையில் கோயில் கொண்டு விளங்கும் பெருமாளை "செந்தாமரைக்கண்ணாழ்வார்',  "புண்டரீகாட்சப் பெருமாள்' எனவும்,  தாயார் "பங்கயச் செல்வியார்'  எனவும் அழைக்கப்படுகின்றார்கள். பெருமாள் கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் "திருவெள்ளறை பெருமாள் கோயில்'  என்றும் பெருமாள்,  "பெரிய ஸ்ரீகோவில் பெருமாளனடிகள்' என்றும் குறிக்கப்படுவது காணலாம். இக்குடைவரைக் கோயில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. 

கருவறையில் புன்னகையுடன் காட்சி தரும் செந்தாமரைக்கண்ணனைக் கண்டு தரிசிக்கலாம். இக்கோயிலில் எல்லா அதிகாரங்களும் தாயாருக்கே. உற்சவங்களில் தாயார் முன்னே செல்ல பெருமாள் பின்னால் செல்வார். தாயாருக்காக,  அன்னையின் அருளை,  கருணையை பக்தர்கள் பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுத்த பெருமாளை போற்றத்தான் வேண்டும். "செங்கமலவல்லி தாயார்' என்ற பெயரிலேயே தனியாக ஒரு சந்நிதியில் தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 

மாற்பிடுகு பெருங்கிணறு

திருவெள்ளறையில் பல குளங்கள் உள்ளன. "குசலன் குளம்' , "சிங்கர் குளம்',  "உடையவர் குளம்' என மூன்று குளங்கள் உள்ளன. இத்துடன் "சக்கரத்தீர்த்தம்' எனப்படும் ஸ்வஸ்திக் வடிவ கிணறு மிகவும் சிறப்பானது. இதன் அமைப்பே புதுமையாக ஸ்வஸ்திக் வடிவத்தில் அமைந்துள்ளது. நான்கு புறங்களில் இருந்து தண்ணீர் உள்ள பகுதிக்கு செல்ல ஒவ்வொரு புறமும் 52 படிகள் கீழே இறங்கி செல்ல ஏதுவாய் அமைந்துள்ளன. இதனால் இதனை "நாலு மூலை கேணி' என ஊரார் அழைக்கின்றனர். 

இக்கிணறு "மாற்பிடுகு பெருங்கிணறு'  என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதை இக் கிணற்றுச் சுவரிலுள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது. பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில் ஆலம்பாக்கத்தில் "விசைய நல்லூழான் தம்பி கம்பன் அரையன்'  என்பவனால் இது அமைக்கப்பட்டது. இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட, பட்டத்தாள்மங்கல செப்பேட்டில் அக்கொடையை நிறைவேற்றிய அலுவலராக ஆலம்பாக்கத்து விசைய நல்லூழான் குறிப்பிடப்படுகிறான். ஆலம்பாக்கம் என்ற ஊர் திருவெள்ளறையில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் லால்குடிக்கு அருகே அமைந்துள்ளது. 

"மாற்பிடுகு' அதாவது "மால்பிடுகு'  என்றால் "பேரிடி' என்பதாகும். பல்லவ மன்னர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த முத்தரையர் மன்னர்கள் "மாற்பிடுகு' என்ற பட்டத்தினை கொண்டு விளங்கினார்கள். ஆலம்பாக்கத்தில் இருந்த ஏரியும் "மாற்பிடுகு ஏரி' என்றே அழைக்கப்பட்டது. முத்தரையர்கள் காலத்தில் நீர் பாசனத்திற்காக முதலிடம் அளித்து குளங்கள்,  ஏரிகள் ஆகியவற்றை அமைத்தனர் என பல கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள படிகளில் 1 முதல் 10 வரை எண்கள் இடப்பட்டுள்ளன. இக்கிணற்றின் சுவர் விளிம்பில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

மாற்பிடுகு பெருங்கிணறு என அழைக்கப்படும் கிணற்றை பாதுகாப்பவர்கள் இவ்வூர் மூவாயிரத்து எழுநூற்றுவர் என்றும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. திருவெள்ளரை வைணவர்கள் 3701 பேர்கள் வந்து குடியேறியதாகவும் அதில் ஒருவராக திருவெள்ளறை திருமாலும் சேர்ந்து கொண்டதாக வைணவர்கள் கூறுவர்.

மேற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டில் இளமை நிலையானது என்று வாழ்க்கையின் இறுதியில் அறம் செய்து கொள்வோம் என்று இல்லாமல் அறத்தினை உடனே செய்ய வேண்டும் என்ற கருத்தினை பாடல் வடிவில் கூறுகிறது.

13-ஆம் நூற்றாண்டில் இங்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் இக்கிணறு சீர்குலைந்தது. போசள மன்னன் வீரராமநாதனின் 25-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குடந்தையைச் சேர்ந்த வாணிகன் உய்யநெரி காட்டினான் என்பவன் இக்கருத்தினை திருத்தியமைத்ததைக் குறிக்கிறது. 

ஒவ்வொரு புறமும் படிக்கட்டு வழியாக இறங்கும் இடத்தில் மேற்புறம் குறுக்குத் தூண்கள் மூன்று காணப்படுகின்றன. இதில் யோகநரசிம்மர், பல்லவமன்னன் நந்திவர்மன் போன்ற உருவம்,  காளையை அடக்கும் கண்ணன் புள்ளின் வாயை பிளக்கும் காட்சி,  சப்தகன்னியர் உமா சகிதரராக சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை போன்ற வடிவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்குப்புறத்தூணில் காணப்படும் சிற்பம் இக்கருத்தினை தோற்றுவித்த கம்பன் அரையன் ஆக இருக்கலாம் என கருதத் தோன்றுகிறது. எப்படி இருப்பினும் ஸ்வஸ்திக் வடிவம் உள்ள அமைப்பு புதுமையானது. இதில் காணப்படும் கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளால் இக்கிணறு மேலும் பெருமை பெறுகிறது. 

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கருத்தினை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது. சிறந்த வைணவத் தலமான திருவெள்ளறை கோயிலுக்கு செல்பவர்கள் அற்புத வடிவமைப்பு உள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றையும் அவசியம் பார்த்து வரலாம்.

(தொல்லியல் துறை ஓய்வு)  சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT