தினமணி கொண்டாட்டம்

கனவு நனவானது..!

11th Dec 2022 06:00 AM | ந.முத்துமணி

ADVERTISEMENT

 

"அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பு இன்னும் தேவை. ஆராய்ச்சியாளராக வேண்டும் என்கிற எனது கிராமத்துக்குக் கனவு நனவானது'' என்கிறார் விஞ்ஞானி கே.தேன்மொழிச் செல்வி.

இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விண்வெளி வாகனமான பி.எஸ்.எல்.வி. ஏவூர்தி, கடந்த நவ. 26-இல் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தபோது, அதன் வெற்றிக்குக் காரணமாகப் பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர் கே.தேன்மொழிச்செல்வி.

பி.எஸ்.எல்.வி. ஏவூர்தியால் கொண்டு செல்லப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட "ஓசியன்சாட்' செயற்கைக்கோள் வரிசையில் 3-ஆவது விண்கலத் திட்ட இயக்குநராகச் செயல்பட்டவர். இதற்காக, கே.தேன்மொழிச்செல்வி உள்ளிட்டோரை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பாராட்டினார். இந்திய வான்வெளிச் சங்கத்தின் விண்வெளி தங்கப் பதக்கத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே பெற்ற தேன்மொழிச்செல்வியுடன் ஒரு சந்திப்பு:

ADVERTISEMENT

உங்களைப் பற்றி கூறுங்களேன்?

விருதுநகர் மாவட்டத்துக்குள்பட்ட சிவகாசி அருகே உள்ள கரிசேரி தான் எனது சொந்தக் கிராமம். எனது தந்தை கள்ளியப்பன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாகப் பணியாற்றியவர். எனது தாய் மீனாம்பாள், விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று எனது தந்தை வலியுறுத்தி வந்தார். எனக்கோ பொறியியல் ஆராய்ச்சியில் ஆர்வம். ஆராய்ச்சி சார்ந்த தகவல்களைத் தேடி படித்தேன்.

கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, மதுரையில் டி.இ.இ. படிப்பை நிறைவு செய்தேன். பின்னர் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.இ. படித்தேன். 1986-ஆம் ஆண்டு இஸ்ரோவில் இளநிலை விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தேன்.

பணியில் சாதித்தது எப்படி?

தினமும் ஏராளமான புதுமைகளைத் தெரிந்து கொண்டேன். இஸ்ரோவின் பணிச்சூழலும் பிடித்ததால், இரவு பகலாகப் பணியாற்றினேன். ஆரம்பத்தில் சிறிய பணியைத்தான் தருவார்கள். ஏவூர்தி, செயற்கைக்கோளில் பொருத்தக் கூடிய சிறிய கருவிகளை வடிவமைத்து, சோதித்து, தயாரிக்கும் பணி தரப்பட்டது.

நான் வடிவமைத்த பல கருவிகள், விண்கலம் வாயிலாக விண்ணில் செலுத்தப்படும்போது மனம் நிறைந்து குதூகலிப்பேன்.

சவால்களை எதிர்கொண்டு தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள ஏராளமான நூல்களைப் படிக்க நேர்ந்தது. புதிய வடிவமைப்பில் ஈடுபட நவீன தொழில்நுட்பங்களைக் கற்றேன். சக விஞ்ஞானிகளின் ஒத்துழைப்போடு, புதிய கருவிகளை வடிவமைப்பதில் வெற்றி பெற்றேன். இதை பார்த்த மேலதிகாரிகள் எனக்கு கூடுதல் பொறுப்புகளை அளித்தனர்.

எந்த வேலையும் எனக்கு சுமையாகத் தெரியவில்லை. குடும்பம், வேலை என்று பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், அவை இனிமையாகவே இருந்தன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களுக்கு துணைத் திட்ட இயக்குநராகப் பங்காற்றி இருக்கிறேன். கார்டோ 2இ, கார்டோ 2 எஃப், கார்டோ 3 போன்ற வரைபடவியல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கு இணைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் புதிதாக பலவற்றை கற்கும் வாய்ப்பை அளித்தன.

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தான் எனக்கு இணைத் திட்ட இயக்குநர் பொறுப்பை வழங்கி, என்னை ஊக்குவித்தார். தற்போது ஓசியன்சாட் 3, 3ஏ ஆகியவற்றின் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். ஓசியன்சாட் வரிசையில் தற்போது ஓசியன்சாட் 3 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

"ஓசியன்சாட்' விண்ணகலத்தின் சிறப்பு?

ஓசியன்சாட் விண்கலம், கடலின் உயிரியல் கூறுகளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்கலத்தில் கடல் வண்ணக் கண்காணிப்பு (ஓசிஎம்3) கடல் பரப்பு தட்ப வெப்பக் கண்காணிப்பு (எஸ்எஸ்டிஎம்), கியூ பேண்ட் ஸ்கேட்டரோமீட்டர் (எஸ் சிஏடி 3), ஆர்ஜோஸ் ஆகிய 4 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடல் ஆய்வு மிகவும் முக்கியமானது. கடலின் தட்ப வெப்பம், அலையின் வேகம், புயல் உருவாக்கம், பச்சையம் ஆகிய கடலியல் ஆய்வுகளில் ஈடுபட ஓசியன்சாட் அனுப்பப்பட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு முதல் ஓசியன்சாட் தொடர்ச்சியாக அனுப்பப்படுகிறது. அந்த வரிசையில் இது 4-ஆவது செயற்கைக்கோள் ஆகும். அடுத்த சில மாதங்களில் ஓசியன்சாட் 3ஏ விண்ணுக்கு அனுப்பப்படும். அதன் ஆராய்ச்சி நோக்கம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து..?

பெண்களுக்கு சிறகுகள் வேண்டும். ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற தனது கிராமத்துக் கனவு நனவாகியுள்ளது.

ஒருகாலம் வரை பெண்களுக்கு அடிப்படைகல்வியே கிடைக்கவில்லை. இன்றைக்கு நிலைமை மாறியுள்ளது. நிறைய பெண்கள் படித்துவிட்டு சாதனைகளைப் படைக்கத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அதிக அளவில் பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். அதற்கான நல்ல சூழல் உருவாகியுள்ளது. இன்றைய பெண்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். அந்த உண்மையை வீடும், நாடும் கண்டு வருகிறது.

21-ஆவது நூற்றாண்டு பெண்களுக்கானது. எல்லா பெண்களும் அறிவுக்கூர்மை கொண்ட வசீகரமான தலைவர்கள். அந்தப் பெண்களின் கனவுகளை நனவாக்கும் மிகச்சிறந்த தளமாக விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் உள்ளது. இந்தத் துறையில் பல பெண்கள் கால்பதிக்க வேண்டும். எதிர்கால அறிவியல் பெண்களுக்கானது. எல்லா துறைகளிலும் சாதிக்கும் பெண்கள், அறிவியலைவிட்டுவைக்கமாட்டார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT