தினமணி கொண்டாட்டம்

வளையலும் வரலாறும்..!

DIN

ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடாக வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பெண்கள் வளையல் அணிவிக்கும் வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்பர்.
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள் சக்தியாக வடிவம் எடுத்த பூரம் நட்சத்திரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவம். தாய்மைப் பேறுக்காக தவம் இருக்கும் பெண்களும் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபாடு மேற்கொள்கின்றனர். அனைத்து பெண்களும் துன்பம் நீங்கி இனிமையான வாழ்க்கை அமைய வளையல் வழிபாட்டில் கலந்துகொள்வார்கள்.
ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்தார். சிவன் வளையல் வணிகராக மாறி தாருகாவனத்து பெண்களின் சாபத்தைப் போக்கினார் என்று திருவிளையாடல் புராணத்தில் "வளையல் விற்ற படலத்தில்' வளையல்களை விற்கும் காட்சி இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சியை மராட்டியர் கால ஓவியமாக தஞ்சை பெரிய கோயிலில் கண்டு மகிழலாம்.
மங்கலப் பொருளான "வளையல்' அணிகலன் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. தமிழ்நாட்டின் பெண்கள் தொன்று தொட்டு வளையல்களை அணிந்திருந்தனர். வளை அல்லது தொடி என வளையல்களை சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன.
மகளிர் அணிந்திருந்த பல்வேறு நகைகள் பற்றிய பட்டியல் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் இடம் பெற்றுள்ளது. வேளாண்மை பணியில் ஈடுபட்ட பெண்கள் வயலில் விளைந்த குவளை, ஆம்பல், வள்ளி ஆகிய பூச்செடிகளின் தண்டுகளை வளைத்து தமக்கு வளையல்களாகச் செய்து அணிவதாக புறநானூறு (பாடல் - 325) கூறுகிறது. மகளிர் அணிந்திருந்த வளையல்களில் சங்கு வளையல் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
சங்கு வளையல்
"சங்கு' - வளை, தரா, வலம்புரி, இடம்புரி, வெள்ளை, கம்பு, கோடு, கரிமுகம் முதலிய பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அரம் போல் வளைப்பொலிந்த முன் கை (அகம் - 2). மேலும் மதுரைக்காஞ்சி, மணிமேகலை, நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு, நெடுநல்வாடை ஆகியவற்றிலும் சங்கு வளையல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி தனது கைகளில் தங்க வளையல்கள் அணியிருந்ததோடு வலம்புரி சங்கு வளையும் அணிந்திருந்தார் என்பதை "பொலற்கொடி தின்ற மயிர்வார் முன்கை - வலம்புரி வளையோடு கடிகை நூல் யாத்து' (நெடுநல் - 141) என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
அகழ்வாராய்ச்சிகளில்...
கொற்கை, அழகன் குளம், கொடுமணல், உறையூர், காவிரிப்பூம்பட்டினம், கீழடி, திருக்கோவிலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. வளையல்களின் மேற்புறத்தில் கோடுகள், குறுக்குக் கோடுகள் போன்ற அலங்கார வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளன. கருவூர் அருகில் திருக்காம்புலியூர் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வளையல்களின் மேற்புறம் செங்காவி வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கொற்கை, கொடுமணல், அழகன் குளம் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் சங்குகளை அறுத்து அதனிலிருந்து வளையல்களை உருவாக்கியதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
காவிரி பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்க வளையல்களை அறுக்கும் தொழில் நடைபெற்றதை சிலம்பு, மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் அறிய முடிகிறது. இவ்வாறு சங்கை அறுத்து வளையல்களை செய்பவர்களை "வேளப்பார்ப்பான்' என அழைக்கப்பட்டதை அகநானூற்று பாடலில் அறியலாம்.
வைகை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மருகூர் பட்டினத்தில் இருந்து (அழகன் குளம்) ஏற்றுமதியான பொருள்களில் சங்கு வளையல்களும் இடம்பெற்றது என மதுரைக்காஞ்சி (321 - 32) அழகாக எடுத்துக் கூறுகிறது. சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சான்றுகளால் மெய்ப்பிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சங்கு வளையல்கள் மட்டுமல்லாமல் செம்பு, சுடுமண், அரக்கு போன்றவற்றால் செய்யப்பட்ட வலையல்களும் கிடைத்துள்ளன.
சிற்ப நூல்களில்..
சங்க காலத்தை அடுத்து வரலாற்றுக் காலத்திலும் பல வகையான வளையல்கள் காணப்படுகின்றன. இவற்றை கோயில் சிற்பங்களிலும் செப்புத் திருமேனிகளிலும் காணலாம்.
தெய்வத் திருமேனிகளுக்கு செய்து அளிக்கப்பட்ட அணிகலன்கள் பற்றி கூறும் பொழுது வளையல்களும் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றன.
சிற்பங்களில் காணப்படும் கை அணிகள் என்னென்ன என்பதை சிற்ப நூல்கள் குறிப்பிடுகின்றன. தோள்வளை, கேயூரம், வங்கி, முழங்கையில் அணியப்படும் கடகவளை, மணிக்கட்டுக்கு அருகில் அணியப்படும் கைவளை என்பதாகும்.
கடகம், செம்பு,கைவளை, நவமணி வளை,சங்கு வளை, பவழ வளை என கைவளைகள் ஐந்து வகைப்படும். இவை "கடகம்' கடகம் - வளை) என பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆண்டாள் தனது பாசுரத்தில் எண் 27 "சூடகமே - தோள்வளையே தோடே செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்' என்று மகிழ்ச்சியுடன் கூறுவதைக் காணலாம்.
கல்வெட்டுகளில்..
இறைவனுக்கு பக்தியின் அடையாளமாக பல அணிகலன்களை செய்து அளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்கைக்காறை, முத்து வளையல், ரத்தின வளையல், ரத்தின கடகம், பவழக்கடகம், சுடகம் போன்றவற்றில் விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் அளிக்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது.
மேலும் ரத்தின வளையலில் மாணிக்கம், முத்து, வைரம், பவழம் போன்றவையும் பதிந்து இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் காணப்படும் ராஜராஜ சோழன் கல்வெட்டு கூறுகிறது.
பிற்காலத்தில் கறுப்பு, மஞ்சள், சிகப்பு போன்ற நிறம் உடைய கண்ணாடி வளையல்கள் பயன்படுத்தினர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த "வளையல்' தமிழகத்தின் தொன்மை வரலாற்றிலும் ஆன்மிக நிகழ்வுகளிலும் முக்கிய இடம் பெற்று விளங்குவதைக் காண முடிகிறது.
நன்றி : து. துளசிராமன்
- கி. ஸ்ரீதரன் (தொல்லியல் துறை - பணி நிறைவு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT