தினமணி கொண்டாட்டம்

வாசியுங்கள்: வானம் வசப்படும்!

28th Nov 2021 06:00 AM | தென்னாடன்

ADVERTISEMENT

 

"வாசிப்பு வசப்பட வானமும் வசமாகும்' என்கிறார் கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் புவனா. "செதுக்க செதுக்கத் தான் கல் சிறந்த சிற்பமாகும். விமர்சிக்க விமர்சிக்கத் தான், எழுத்து மெருகேறும். எழுத்தாளர்களுக்கு இந்த புரிதல் அவசியமான ஒன்றாகும்' என்கிறார். "சஹானா'  என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றையும் நடத்திவரும் புவனா:

உங்கள் எழுத்துப் பயணம் எப்போது ஆரம்பித்தது?

படித்தது எம்.பி.ஏ, எம்.காம் பிடித்தது ஆசிரியப்பணி, பின் எழுத்தும் வாசிப்பும். பத்து வருடங்கள் பல நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். இந்தியாவில், மேலாண்மை மாணவர்களுக்கு துணை பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் உண்டு.

ADVERTISEMENT

பள்ளி கல்லூரி நாட்களில் இருந்தே, எழுத்தும் வாசிப்பும் எனக்கு விருப்பமான ஒன்றாகத் தான் இருந்தது. ஏழாம் வகுப்பின் எழுத்துப் பயிற்சி ஏட்டில், "கதை கட்டுரை ஏதேனும் சுயமாய் சிந்தித்து எழுதுங்கள்' என தமிழாசிரியர் கூற, விளையாட்டாய் நான் ஒரு திகில் கதை எழுத ஆரம்பித்தேன். அதற்கு வகுப்பில் உருவான ஒரு வாசகர் வட்டம், என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தியது. 

அதன்  பின் 2009}ஆம் ஆண்டு "அப்பாவி தங்கமணி' என்ற புனைப்பெயரில், வலைப்பூ துவங்கி எழுத ஆரம்பித்தேன் விளையாட்டாய் சில நகைச்சுவை பதிவுகள் பதியத் துவங்கி, பின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பயணித்தேன். இரண்டு வருடத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் என, நிறைய வாசகர்களையும், எழுத்துலகில் சிறந்த நட்புகளையும் பெற்றுத் தந்தது, "அப்பாவி தங்கமணி' என்ற எனது வலைப்பூ தந்த அனுபவம் தான், இன்று எனக்கு ஓர் இணைய இதழின் ஆசிரியர் என்ற பொறுப்பை சரியாய் செய்யும் ஆற்றலையும், கொடுத்துள்ளது என நம்புகிறேன். 

இணைய இதழ் தொடங்கியதன் நோக்கம்?

அமெரிக்க வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த எழுத்தாளர், விஞ்ஞானி, ஆராய்ச்சியாளார், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட பெஞ்சமின் பிராங்கிளின். அதாவது, மற்றவர்கள் சிலாகித்து வாசிக்கும் வண்ணம் எழுத வேண்டும், அல்லது மற்றவர் நம்மை பற்றி எழுதும் செயலை செய்ய வேண்டும்.

இது அவரின் புகழ்பெற்ற ஒரு சொலவடை. இரண்டுமாய் இருக்க நம் எல்லோருக்கும் ஆசை தான். 

முதலில் எழுதினால், பின் எழுதப்படலாம் என்ற கனவு, ஒவ்வொரு கலைஞனுக்கும் உண்டு. அதற்கு நானும் நீங்களும் விதிவிலக்கல்ல. அப்படி எழுத நினைக்கும் சாமானியனுக்கும் ஒரு தளம் அமைக்க வேண்டும் என நினைத்ததன் விளைவே, "சஹானா' இணைய இதழ். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை "சஹானா'வில் பதிந்துள்ளனர்.

அப்படி பிரசுரிக்கப்படும் படைப்புகளில் இருந்து, மாதந்தோறும் சிறந்த ஒரு படைப்புக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது. அடுத்த நான்கு இடங்களில் உள்ள படைப்புகளுக்கு, மின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது படைப்பாளிகளை மேலும் எழுத ஊக்குவிப்பதோடு, தங்கள் எழுத்துத் திறமையை மெருகேற்றிக் கொள்ளவும் உதவுகிறது.

நான்கு வயது முதல், 90 தாண்டிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் சிறுகதை வரை, அனைத்தும்  பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் படைப்புகள் அதிகம் இதில் வெளிவருவது உண்மை தான். இதன் ஆசிரியர் ஒரு பெண் என்பதால், பெண்கள் அதிகம் விரும்பி தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள்.

வாசிப்பு பற்றி உங்கள் கருத்து?

"வாசிப்பு  ஏற்படும் மாற்றங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், வாசிப்பு மொழி ஆளுமையை தருகிறது, அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது  எனவே, "வாசிப்பை நேசிப்போம் வாழ்வை நேசிப்போம்' என்றார் புவனா.

Tags : Kondattam The sky is the limit
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT