தினமணி கொண்டாட்டம்

விரல் நுனியில் கோடி ஆண்டுகள்!

21st Nov 2021 06:00 AM | பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

2023-ஆம் ஆண்டு தீபாவளி அல்லது பொங்கல் எந்த தேதியில், கிழமையில் வரும் என்று கேட்டால்... கிட்டத்தட்ட அனைவருமே விடை சொல்ல முடியாமல் வியர்த்துப் போவார்கள்.

திருவனந்தபுரம் கரமணையைச் சேர்ந்த பிரசாந்த்திற்கு ஒரு கோடி ஆண்டுகளின் தேதி, நாள் அனைத்தும் மனப்பாடம். வர இருக்கும் ஆண்டின் தேதியின் கிழமை என்ன என்றால் சரியான பதில் பிரசாந்த்திடமிருந்து கிடைக்கும். அது சரிதானா என்று தனது அலைபேசியில் கூகுள் மூலம் தேடி விடையையும் காண்பிக்கிறார்.

இப்படி அடுத்த ஒரு கோடி ஆண்டுகளின் நாள், தேதி அத்தனையும் பிரசாந்த்திற்கு மனப்பாடம். 24 வயதாகும் பிரசாந்த் பிறவியிலிருந்தே பல்வேறு குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளி. சரியாகப்பார்க்க முடியாது... கேட்க முடியாது... பேச முடியாது..உருவத்திலும் வேறுபட்டு இருப்பவர். இத்தனை குறைபாடுள்ள பிள்ளை சில மாதங்களே உயிர் வாழும் என்று டாக்டர்கள் சொன்னாலும் பிரசாந்த் பல பாராட்டுக்கள், பட்டங்கள், விருதுகள் பெற்று ஒரு அதிசய மனிதனாக நினைவு ஆற்றலுக்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்ஸிலும் இடம் பெற்றிருக்கும் பிரசாந்த் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளார்.

""சிறிய வயதிலேயே நாள்காட்டி என்றால் பிரசாந்த் ஓடிப் போய் நெருக்கமாக நின்று கொள்வான். பலவித நாள்காட்டிகள் அவன் அறையில் தொங்கும். ஆனால் ஒரு கோடி ஆண்டுகளின் நாள்,தேதியை எப்படி நினைவில் வைத்திருக்கிறான்... எப்படி கேள்விகளுக்கு சரியான பதில் சொல்கிறான்'' என்பது அனைவரையும் அதிசயப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் விடை சொல்ல முப்பது நொடிகள் எடுத்துக் கொண்ட பிரசாந்த் இப்போது மூன்று நொடிகளில் விடை தருகிறார்.

பிரசாந்திற்கு கீ போர்டு நன்றாக வாசிக்க வரும். ஒரு அறையின் அல்லது பல அறைகளின் வெப்பநிலை என்ன என்று கருவி எதையும் பயன்படுத்தாமல் சரியாக பிரசாந்தால் கணிக்க முடியும். பிரசாந்தின் திறமையைக் கண்டு இந்திய அரசு இரண்டு முறை விருது அளித்து கெளரவித்திருக்கிறது. ஆன்லைனில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வெளிநாட்டு அமைப்புகளின் பாராட்டுக்கள், சான்றிதழைப் பெற்றிருக்கிறான்.

கின்னஸ் சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் பிரசாந்தின் திறமையைப் பரிசோதிக்க அளவுகோல் அதற்கான தொழில் நுட்ப வசதி தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்தக் கணினி உலகில் எத்தனையோ செயலிகள் பல கோடி ஆண்டுகளின் நாள், தேதியை சரியாகத் தெரிவிக்கும். அதை வைத்து பிரசாந்த் சொல்லும் விடை சரிதானா என்று எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இருந்தாலும் பிரசாந்தை கணிக்க, அவனது திறமையை மதிப்பிட கின்னஸ் ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. என்ன நிபந்தனைகள் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றும் கேட்டுவிட்டேன். பிரசாந்த் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நாங்கள் கின்னஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு வருகிறோம்'' என்கிறார் பிரசாந்தின் தந்தை சந்திரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT