தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 94: நகைச்சுவை காட்சிகளுக்காக மீண்டும் படப்பிடிப்பு - குமாரி சச்சு

20th Jun 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT


எனக்குத் தெரிந்த வரையில் சுருளிராஜனை "எங்க வீட்டுப்பிள்ளை‘ படத்தில் பார்த்ததாக நினைவில்லை. அதனால் என்ன வேடத்தில் நடித்தார் என்று கேட்டேன். "அவர் வயதானவர் வேடத்தில் முன் பாதியில் நடித்தார், அது மட்டுமல்ல, அந்த வேடம் சிறிய வேடம் என்பதால் அது நமக்குத் தெரியாது' என்று சொன்னார்கள்.

நாங்கள் ஜோடியாக நடித்த முதல் படம் "இவள் ஒரு சீதை'. அதில் இவர் வெளியூரிலிருந்து சென்னை வந்து, "நான் உங்கள் தூரத்து சொந்தம்' என்று கூறிக்கொண்டு வருவார். கொஞ்ச காலம் தங்கிவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவோம். பின்னர் அவர் போய்விடுவார் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைப்பார்கள். ஆனால் அவரோ நமக்கு சென்னையில் ஓர் இடம் கிடைத்துவிட்டது என்று, அந்த வீட்டிலேயே தங்கிவிடுவார். அந்தப் படத்தில் இருந்து எங்களது காம்பினேஷன் பிரபலமாகி விட்டது. அவர் வசனம் பேசும் முறை மட்டுமல்ல பேசும் டைமிங், மாடுலேஷனும் ரசிக்கத்தக்கது.

அடுத்து நாங்கள் இருவரும் நடித்த ஒரு படம் "முதல் இரவு'. சுருளிராஜன் என்னை காதலிப்பார். ஒரு நாள் இவர் வந்திருக்கும் போது என் அப்பாவாக நடிக்கும் தங்கவேலு அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவார். எங்கள் வீட்டில் மாடு வளர்ப்போம். அங்கு இருந்த பசு மாட்டில் பால் கறப்பது போல, உட்கார்ந்து கொண்டு விடுவார். ஆனால் இவர் முகம் தெரியாத அளவிற்கு ஒரு துணியால் மாட்டையும், அதன் மடியையும், அதே சமயம் அவரது முகத்தையும் மறைத்துக் கொண்டு விடுவார்.

தங்கவேலு அண்ணனும் நாடகத்தில் இருந்து வந்தவர். சினிமாவில் தானாக வசனம் பேசுபவர். அந்த வசனம் மக்களை நிரம்ப ரசிக்க வைத்து, சிரிக்கவும் வைத்து விடும். சுருளிராஜனும் நாடகம் மூலம் வந்ததால், வசனகர்த்தா எழுதி உள்ளதைப் பேசாமல், தானாக இந்தக் காட்சியில் ஒரு வசனம் பேசினார். அதை கேட்டு தங்கவேலு அண்ணனே சுருளிராஜனை பாராட்டினார். அது என்ன வசனம் என்றால், என் அப்பாவாக நடிக்கும் தங்கவேலு அண்ணன் கேட்பார், "யார் இவர்', அதற்கு நான், "பால் கறக்க வந்தவர் அப்பா' என்று கூறுவேன். அதற்கு தங்கவேலு, " ஏன் முக்காடு போட்டு இருக்கிறார்' என்று கேட்பார். அதற்கு சுருளிராஜன், "மாடு வெட்கப்படுது, அதனால் முக்காடு போட்டிருக்கிறேன்' என்று சொந்த வசனத்தை சொன்னார்.

ADVERTISEMENT

மூவரும் செய்த ஒத்திகையின் போது சுருளிராஜன் இதை சொல்லவில்லை. டேக்கின் போது சொன்னார். தங்கவேலு அண்ணன், "அடாடா அருமையான ஜோக். ரொம்ப நல்லாயிருக்கு', என்று சுருளிராஜனை பாராட்டினார். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் மிகவும் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தோம். உதாரணத்திற்கு "தர்மயுத்தம்', "மீனாட்சி குங்குமம்', "பொன்னகரம்' போன்ற படங்களில் எங்களது நகைச்சுவை பெரிதும் பேசபட்டது.

"கவிக்குயில்' படத்தில் நகைச்சுவை காட்சிகளே எடுக்கவில்லை. அந்தப் படம் சீரியஸ் ஆன படமும் கூட. அந்த படமும் வெளியானது. அந்தப் படத்தை வாங்கிய மதுரை விநியோகஸ்தர், தயாரிப்பாளரிடம், "நீங்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் நகைச்சுவை தான் இல்லை. இன்றைய நிலையில் தமிழ் திரையுலகில் சுருளிராஜன்-சச்சு ஜோடிதான் பிரபலம். அவர்களை ஒப்பந்தம் செய்து கொடுங்கள். ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தி, அந்தக் காட்சியை படத்துடன் இணைத்து, எங்கள் மதுரை ஏரியாவில் வெளியிடுகிறேன். இப்படி செய்தால் படம் வெற்றிப்படமாகிவிடும். சென்சார் உள்பட எல்லா செலவும் நானே ஏற்கிறேன். நீங்கள் உதவி செய்தால் போதும்,' என்றார்.

நாங்கள் இருவரும் அப்பொழுது மிகவும் பிஸியாக இருந்த காலம். என்னிடம் வந்து இதைச் சொல்லி படப்பிடிப்புக்கு வரும்படி கேட்டார்கள். நான் அவர்களிடம் "இது எல்லாம் முடியுமா'என்று கேட்டேன். "முடியும், எங்களுக்காக நீங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் நேரம் ஒதுக்கினால் போதும் என்றார்கள். நாங்கள் அந்த ஒரு நாளில், ஒரு மூன்று அல்லது நான்கு சீன்களை எடுத்துக் கொள்கிறோம். அதைப் படத்தின் இடையே சேர்த்து கொள்கிறோம்' என்று கூறினார்கள்.

நாங்கள் இருவரும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து, நடித்துக் கொடுத்தோம். எங்கள் நகைச்சுவை காட்சியை வெளியிட்ட பிறகு, அந்தப் படத்தை வாங்கி இருந்த மற்ற ஏரியா விநியோகஸ்தர்கள், மதுரை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு, "எங்களுக்கும் சுருளி-சச்சு நடித்த நகைச்சுவை காட்சிகள் வேண்டும். நாங்கள் உங்கள் செலவில் எங்களின் பங்கை தருகிறோம்' என்று கேட்டார்கள். அந்த அளவிற்கு எங்களது நகைச்சுவை புகழ் பெற்றது.

சுருளிராஜன் ரொம்பவும் திறமைசாலி . நகைச்சுவையுடன் உடல்மொழியை அளிப்பதில் சிறந்து விளங்கினார். மிகவும் தன்மையுடன் பழகும் மனிதர். நாங்கள் இருவரும் ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்கு போய்விட்டு சென்னைக்குத் திரும்ப, இரவு ரயிலை பிடிக்க வேண்டும்.

எங்களுக்கான படப்பிடிப்பு முடியவில்லை. சேலத்தில் படப்பிடிப்பு நடந்தது. அவசர, அவசரமாக காரில் ரயில் நிலையம் வந்தடைந்தோம். எனக்கும் என் உதவியாளருக்குமான ரயில் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு, சுருளிராஜன்,அவர் உதவியாளருக்குமான ரயில் டிக்கெட்டை அவரிடம் கொடுத்து விட்டுத் தயாரிப்பு நிர்வாகி கிளம்ப, ரயிலும் கிளம்பியது.

எங்கள் டிக்கெட்டை நாங்கள் இருவரும் வைத்திருக்கவில்லை என்பது சிறிது நேரத்திக்கு பின்னர் எங்களுக்கே தெரிந்தது.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT