தினமணி கொண்டாட்டம்

பிற மொழிகளில் தமிழ் சினிமாக்கள் !

தினமணி

ஒரு படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால், அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவும். அவ்வாறு ரீமேக் செய்யும் படங்களில் யார் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் வரும்.

அதில், சில படங்கள் வெற்றி அடையும், சில சோபிக்காமலும் போகும்.  பிற மொழிப் படங்கள் இங்கு ரீமேக் செய்யப்பட்டு வரும் சூழலில், நம் ஊர் படைப்புகளுக்கும் மற்ற மொழிகளில் செம வரவேற்பு. அதற்கு முக்கியக் காரணம், தமிழ் சினிமா கண்ட புதுமுக இயக்குநர்கள் பலரின் அசத்தலான படைப்புகள். இதோ, பிற மொழிகளில் ரீமேக் ஆகி வெளிவந்த, செய்யப்படவிருக்கும் கோலிவுட் படங்களின் பட்டியல்!  


96


தமிழ் சினிமா பலவித காதல் கதைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், பின்னணி இசையுடன் ஒலிக்கும் இரண்டு வரிகள்தாம் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. பள்ளிப் பருவத்தில் பூத்த காதல் தருணம் என்றும் ஆழ்மனதில் இருக்கும் அரிய பொக்கிஷம் என்பதை காதல் நயத்துடன் திரைக்கதை எழுதியிருப்பார் இயக்குநர் பிரேம் குமார்.

இருபது வருடங்கள் கழித்துப் பள்ளி நண்பர்கள் ஒன்றுகூடும் காட்சி, மலரும் நினைவுகளை நினைத்துச் சிலாகிக்க வைத்தது. ராம் (விஜய் சேதுபதி) - ஜானு (த்ரிஷா) ஜோடி கோலிவுட்டின் எவர்க்ரீன் காதல் ஜோடிகள் பட்டியலிலும் இடம்பிடித்தது. "உன்னை எங்க விட்டனோ, அங்கேயேதான் இருக்கேன்' என்ற ஒற்றை வசனத்திற்குக் கிடைத்த கைத்தட்டல்கள் ஏராளம். இந்தப் படத்தைத் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கெனவே  ரீமேக் செய்து விட்டார்கள். கன்னடத்தில் "99' எனப் பெயரிட்டு படம் வெளிவந்தது.

இப்படத்தில் கணேஷ் - பாவனா நடித்தனர்.   தெலுங்கில் ஷர்வானந்த் - சமந்தா ஆகியோர் நடித்தனர்.  தமிழில் இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கு பதிப்பையும் இயக்கினார். அடுத்து ஹிந்தியில் இப்படத்தின் ரீமேக் உரிமை பேசப்பட்டு வருகிறது. 

காஞ்சனா

ஹாரர் பாணியில்  ஹியூமர் கலந்து புது விதத்தை உருவாக்கியதில், ராகவா லாரன்ஸூக்கு முக்கியப் பங்குண்டு. "முனி' படத்தில் தொடங்கி, "காஞ்சனா', "காஞ்சனா 2', "காஞ்சனா 3' வரை வந்திருக்கிறது அந்தப் பாணி. வழக்கமாக லாரன்ஸூக்கு ஜோடியாக வெள்ளை நிறக் கதாநாயகி, அவர்களுக்கு என்று ஓர் அசத்தலான பாடல் நிச்சயம் இருக்கும்.

உயிருடன் இருக்கும்போது தனக்கு நேர்ந்த அநீதிகளைத் தட்டிக்கேட்கவும், பழி தீர்க்கவும் ஒருவர் உடலில் களமிறங்கும் ஆன்மா, நினைத்ததை அடைந்ததா இல்லையா? என்ற பழைய ஃபார்முலா இருந்தாலும், அதை சுவாரஸ்யமாகக் கொடுத்திருந்ததுதான், "காஞ்சனா'வுக்குக் கிடைத்த வெற்றி. ஆக்ஷன் ஹீரோவாக நாம் பார்த்த சரத்குமார், திருநங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை பாலிவுட்டில் ராகவா லாரன்úஸ ரீமேக் செய்கிறார். லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமாரும், ராய் லட்சுமி ரோலில் கியாரா அத்வானியும் நடிக்கின்றனர். திருநங்கையாக எந்தப் பிரபலம் நடிக்கப்போகிறார் என்பது, இப்போதைக்கு சஸ்பென்ஸ்!

பரியேறும் பெருமாள்


குறைவான பட்ஜெட்டில் உருவான நிறைவான சினிமா "பரியேறும் பெருமாள்'. வழக்கமாக ஹீரோவை மாஸாகக் காட்டுவதற்கு பஞ்ச் வசனங்கள், சண்டைக் காட்சிகள், கிளாமருக்காக ஹீரோயின், காமெடிக்கு தனி பகுதி, இறுதியில் வில்லனைக் கொன்ற ஹீரோவை நினைத்து சில்லறைகளைச் சிதறவிடும் ரசிகர்களின் கருத்துக்கள். இப்படியாக எதுவும் இல்லாமல், நம்மைச் சுற்றி நடக்கும் எதார்த்தமான சம்பவங்களே மாரி செல்வராஜின் இந்தப் படைப்பு. சமூகத்தில் நிகழும் அவலங்களில் மிக முக்கியமானது, பிரிவினை.

அதை மிக நேர்த்தியாகச் சொல்லி, அதிகார வர்க்கத்தின் நெற்றிப்பொட்டில் அறைந்தது பரியன் கதாபாத்திரம். படத்தின் இறுதியில் "நீயும் நானும் ஒண்ணுதான்' என்பதை அத்தனை அழகாகச் சொல்லியிருப்பார்கள். கதிர், ஆனந்தி, யோகி பாபு எனப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களை நினைவுப்படுத்தும். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்படத்தைக் கன்னடத்தில் காந்தி மாணிக்க வாசகம் என்பவர் இயக்க, மைத்ரேயா என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

ராட்சசன்


ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க படத்திற்கு நாயகனை மையப்படுத்திய தலைப்பு வைப்பது வழக்கம். ஆனால், இது வில்லனுக்கான ஏரியா. அந்த ஒற்றை பரிசுப் பெட்டியும், அதன் பின்னணியில் ஒலிக்கும் மிரட்டலான இசையும் திரையரங்குகளைத் தன் வசப்படுத்தின.

ஆஜானுபாகுவான உடல், முகத்தில் கொலைவெறி, அடியாள்கள், பஞ்ச் வசனங்கள் ஆகியவை வில்லனுக்கான விஷயங்களாக நாம் பார்த்திருப்போம். ஆனால், வாயைக்கூட திறக்காமல் புன்னகையுடன் கொலைகளைச் செய்யும் ராட்சச குணம் நிறைந்த வில்லனை இப்படத்தில் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர் ராம்குமார். வில்லன் யாரென்றே காட்டாமல் வில்லனுக்கு முக்கியத்துவமுள்ள படத்தை எடுத்து அசத்தியிருப்பார்.

விஷ்ணு விஷால் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சரவணன், யாசிர் இந்த இரு ராட்சசர்கள் மீதுதான் ஒட்டுமொத்தக் கவனமும் இருந்தது. "ராட்சசன்'  தெலுங்கில் ரீமேக் ஆகி வெளியானது. விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா நிவாஸ் நடித்திருந்தார்.

ரமேஷ் வர்மா என்பவர் இயக்கிய இப்படத்தில்  அனுபமா பரமேஸ்வரன் நடித்தார்.  வில்லனாக யார் நடிக்கிறார் என்பதை படம் வெளியாவதற்கு முன்பு வரை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு.  படத்தின் பெயர்  "ராட்சசடு'.
                  

கனா

பெண்களை மையப்படுத்திய பல சினிமாக்கள் தமிழில் வரத் தொடங்கியுள்ளன. அதில், "கனா'வுக்குத் தனி இடமுண்டு. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார். கௌசல்யா முருகேசனாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் நடிப்பில் அசத்தியிருப்பார்.

இந்தப் படத்திற்காக முறையான கிரிக்கெட் பயிற்சி பெற்று, படத்திற்காக மெனக்கெட்டிருப்பது அவர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் தெரியும். கிரிக்கெட் பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமும், அவரது தோற்றமும் பாராட்டப்பட்டது. பெண்கள் கிரிக்கெட், விவசாயம் ஆகியவற்றைக் கலந்து அருண்ராஜா சொன்ன கதை சிறப்பு. இப்படத்தின் பாடல்களுக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் வெற்றி பெற்ற "கனா'வைத் தெலுங்கில் ரீமேக் செய்தனர். அதிலும், ஐஸ்வர்யா ராஜேஷ்தான் நடித்தார்.  இப்படத்திற்கு "கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' எனப் பெயரிட்டனர்.

தடம்
 

"தடையறத் தாக்க' படத்துக்குப் பிறகு, "தடம்' படத்தில் இணைந்த மகிழ் திருமேனி - அருண் விஜய் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. க்ரைம் த்ரில்லர் பாணியில் களமிறங்கிய இவர்களது இந்தப் படத்துக்கு செம வரவேற்பு.  இரட்டை வேடங்களில் தோன்றிய அருண் விஜய் தன் நடிப்பின் மூலம் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அர்த்தம் தந்தார்.

படத்தின் முதல் பாதியில் படத்தின் முடிவு இப்படிதான் இருக்குமென நினைத்த அனைவருக்கும், இரண்டாம் பாதி கொடுத்தது அதிர்ச்சி. வித்யா பிரதீப், ஜார்ஜ் மரியன், பெஃப்சி விஜயன் என அனைவரது கேரக்டர்களும் மனதில் நிற்கும்படி வடிவமைத்திருப்பார் இயக்குநர். இந்தப் படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களை அறிந்த டோலிவுட், பாலிவுட் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். தெலுங்கில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் பாலிவுட் பதிப்பில் யார் ஹீரோ என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT