தினமணி கொண்டாட்டம்

தெரியுமா?...

DIN

அரசியல் குரு

"கோகலே என் அரசியல் குரு' என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. "அவர் சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்' என்றும் பாராட்டியுள்ளார் காந்தி. 

அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாகக் கவர்ந்தது. ஒரே டிராயர், ஒரு சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-இல் பட்டப் படிப்பை முடித்தார். அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ராணடேவின் ஆதரவாளராக மாறினார். 

விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட் பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார் கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே. அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர்.

பின்னர், அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக் கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே. உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ராணடேதான். 

இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான் அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது. ""என் தாய்நாடே! நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம், கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும். இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின் ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும், இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.

1912-இல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின் பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப் பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது இந்தக் கமிஷனின் நோக்கம். இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ""இது கர்ம பூமி; ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று சொல்லி ஓய்வில்லாமல் உழைத்தார்.

இசையால் எரிந்த விளக்கு!



மகான் தியாகராஜர் இளைஞராக இருந்த சமயம் தம் குருவான சொண்டி வேங்கடரமணய்யாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். 

புதுக்கோட்டை அரண்மனை சேவகர்கள், சபையில் ஒரு குத்து விளக்கை கொண்டு வந்து திரிகளைப் போட்டு எண்ணெய்யும் வார்த்தார்கள். ஆனால் அவர்கள் விளக்கை ஏற்றவில்லை.

மன்னர் சபையைப் பார்த்தார். அவையில் மந்திரிப் பிரதானிகளும் முக்கியப் பிரமுகர்களும், இசை மேதைகளும், அமர்ந்திருந்தார்கள். அங்கே இசை மேதை சொண்டி வேங்கட ரமணய்யாவுடன் அடக்க ஒடுக்கமாக மகான் தியாகராஜரும் அமர்ந்திருக்கக் கண்டார் மன்னர்.

அவர்களைப் பார்த்து மன்னர் சொன்னார், ""தங்களது இசைத் திறமையைப் பற்றி நாங்கள் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்கிறோம் இன்று அதை நேரிலேயே தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தங்களது இசைத் திறமையால் விளக்கின் திரிகளில் தீ மூட்டி எரியச் செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

மகான் தியாகராஜர் தம் குருவைப் பார்த்தார். "சரி, ஆகட்டும்' என்று அவர் ஆசி கூறி அனுமதி அளித்தார் குரு. மகான் தியாகராஜர் மெதுவாக ஆலாபனையை ஆரம்பித்தார். அவர் பாட எடுத்துக் கொண்டது ஜோதிஸ்வரூபிணி என்னும் ராகம் . பலரையும் கவரும் வண்ணம் பாடினார். மெய் மறந்து அவரது பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

என்ன அற்புதமான இசை! மனிதக்குரலா அல்லது தேவ கானமா?

மகான் தியாகராஜர் இப்படிப் பாடினார் ""ஜோதி ஸ்வரூபிணி தாயே! எனக்காக நீ இந்தப் தீபத்தை ஏற்ற மாட்டாயா?'' என்று அவர் பாடப்பாட அந்த ஆச்சர்யம் நடந்தது. ஆம் குத்துவிளக்கில் இருந்த திரிகள் தாமாகவே தீப்பற்றிக் கொண்டன. சுடர்விட்டுப் பிரகாசித்தன.

அதைக் கண்டு அவையில் இருந்த அனைவரும் ஆனந்தக் கரகோஷம் செய்தனர். மகானை வாழ்த்தினர்.

ஆனந்த பரவசம் அடைந்தவாறே மன்னர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்தார். குரு சொண்டி வேங்கடரமணய்யாவையும், மகான் தியாகராஜரையும் பணிந்து வணங்கினார். 

அப்போது தியாகராஜர் அடக்கத்துடன் சொன்னார். ""அரசே எல்லாம் இறைவன் அருள். இதில் எனக்கு எந்தவிதமான பெருமையும் இல்லை.'' 

(மகான் தியாகராஜர் என்ற நூலிலிருந்து)

-டி.எம்.இரத்தினவேல்

ராஜாஜியின் நகைச்சுவை


ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது சேலத்து மக்கள் மயான பூமிக்கு மதில் சுவர் கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

"உள்ளே இருப்பவன் வெளிவர மாட்டான். வெளியே இருப்பவன் உள்ளே போக விரும்ப மாட்டான். எதற்கு மயான பூமிக்கு பாதுகாப்பாக மதில் சுவர்' என்று நிராகரித்துவிட்டார். 

-விமலா, ராமமூர்த்தி

நிறைவேறிய  லட்சியம்


அஸ்ஸாமின் புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றுள்ளார்.

வரைப் பற்றி இவருடைய மனைவி ரினகிபூயன் கூறிய சுவையான தகவல்:

""30 ஆண்டுகளுக்கு முன் நானும் அவரும் சந்தித்தோம். 

அப்போது அவருக்கு வயது 22. எனக்கு வயது 17. என் அம்மாவிடம் உங்களைப் பற்றி சொல்லணும். உங்கள் எதிர்கால திட்டம் என்ன?'' என கேட்டேன். 

""அஸ்ஸாமின் முதல்வர் ஆவது தான். அவங்க கிட்ட சொல்லு'' என்றார் அவர்.

சொன்ன மாதிரியே முதல்வர் ஆகிவிட்ட ஹிமந்தா பற்றி ரினிகி பூயன் கருத்து என்ன?

""அவர் மூளையை மட்டுமல்ல, மனதையும் ஈடுபடுத்தி செயல்படுவார். அதனால் அனைத்து முக்கிய பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்வு கண்டுவிடுவார்'' என்றார். 



இது தான் கியூபா ஸ்டைல்


தனி மனிதர்களுக்கு மிகச் சிறந்த மருந்துவ வசதி கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக கியூபா உள்ளது. இங்கு 10 ஆயிரம் பேருக்கு 67 மருத்துவர்கள் உள்ளனர். தனியார் மருத்துவமனைகள் கிடையாது. எல்லாமே அரசு மருத்துவமனைகள் தான்.

கரோனா, இத்தாலி உட்பட பல நாடுகளை தாக்கிய போது தங்கள் நாட்டின் மருத்துவர்களையும், நர்சுகளையும் உதவிக்கு அனுப்பி மிகவும் நல்ல பெயர் பெற்றது கியூபா. 

கரோனா பற்றி மக்களுக்கு அரசு கூறிய ஆலோசனை இது தான்: மக்களே அச்சம் கொள்ளாதீர். அச்சமே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்துவிடும். ஆக அமைதி காக்கவும். 

கரோனாவுக்கு 5 வகையான ஊசிகளை தயார் செய்துள்ளனர். 

வெளிநாட்டு ஊசியா? மூச்.. வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் லாபிகள் இங்கு எடுபடாது. அவற்றிற்கு இடமும் இல்லை.

-ராஜேஸ்வரி, பெங்களூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT