தினமணி கொண்டாட்டம்

விவசாயியாக மாறிய வழிகாட்டி!

6th Jun 2021 06:00 AM | -நிகில்

ADVERTISEMENT

 

மதுரைக்கு  வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நாகேந்திர பிரபு. மதுரையில் உள்ள முக்கிய இடங்களை அவர்களுக்குச் சுற்றி காட்டும் போது தன்னுடைய நடனத் திறமையால் அவர்களை வெகுவாகக் கவர்ந்து விடுவார். மேலும் நமது கலாசாரம், பண்பாடு பற்றி அவர்களிடம் விளக்கமாகச் சொல்லி பாராட்டும் பெறுவார்.  கரோனா காலகட்டம் என்பதால் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாகக் குறைந்தது. இதனால் தற்போது தனது தொழிலை மாற்றி விவசாயியாக மாறியிருக்கிறார். 
வழிகாட்டியாக இருந்து விவசாயியாக மாறிய அனுபவம் குறித்து நாகேந்திர பாபுவிடம் பேசிய போது...

""எனது சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழ் நாச்சிகுளம். வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகக் கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன்.
நான் எடுத்துக்கொண்ட பணியை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். சுற்றுலா வழிகாட்டியான எனது தொழிலை இது நாள் வரை சிறப்பாகச் செய்து வந்தேன். குறிப்பாக மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம், தமிழகத்தையும், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தையும் தெளிவாக விளக்குவேன். 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கட்டடக் கலைகளையும், ஓவியங்களையும், அதன் வரலாற்றையும் விரிவாக விளக்குவதுடன், அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் நடனம், முக பாவனைகள் மூலமாகவும்
தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் மூலமாக எடுத்துரைப்பேன். குறிப்பாக தமிழ்ப் பாடல்களை பாடி அதற்கு ஏற்ப நடனமும் ஆடுவேன். இதனைப் பார்த்து வெளிநாட்டவர்கள் அசத்து விடுவார்கள்.
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் பெண்களுக்குக் கோலம் போட சொல்லிக் கொடுப்பேன். கோலம் போடுவதால் அறிவியல் பூர்வமாக என்ன செயல்கள் நடைபெறுகிறது. அப்போது கைகளில் உண்டாகும் முத்திரைகள் எதனுடன் தொடர்பு ஏற்படுகிறது என்பதை அவர்களைக் கோலம் போட சொல்லி விளக்குவேன். நமது தமிழ்நாட்டு சமையலை அவர்களுக்குக் கற்றுக்
கொடுப்பேன். 
இப்படியாக சென்ற என்னுடைய வாழ்க்கை கரோனா என்ற புயலால் திசைமாறியது.  முற்றிலுமாக வருமானத்தை இழந்தேன்.  கரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில்லை. கரோனாவால் வேலையிழந்தவர்களில் நானும் ஒருவன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது விவசாயம் செய்யலாம். ஒரளவு தெரிந்த தொழில் அது தான் என்பதால் துணிச்சலுடன் இறங்கினேன்.
ஆரம்பத்தில் எந்தத் தொழிலாக இருந்தாலும் முதலீடு அவசியம். சுற்றுலா வழிகாட்டியாக இருந்த போது சேமித்த பணம் மற்றும் மனைவியின் நகைகளை அடகு வைத்து விவசாயத்தைத் தொடங்கினேன். தற்போது 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறேன். 
சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது தினசரி வருமானம் கிடைக்கும். வெளிநாட்டினர் என்னுடைய நடனம், சமையல்கலை, கோலம் போடும் கலையை  அதிகம் விரும்பி அன்பளிப்பாகப் பணத்தைத் தருவார்கள். இப்போது குறைந்த அளவு வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் சொந்த ஊரில், சொந்த நிலத்தில், சொந்த தொழில் செய்கிறோம் என்ற விஷயம் பெருமையாக உள்ளது'' என்கிறார் நாகேந்திர பாபு. 

Tags : விவசாயியாக மாறிய வழிகாட்டி!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT