தினமணி கொண்டாட்டம்

நெகிழ வைக்கும் மருத்துவத் தம்பதிகள் 

6th Jun 2021 06:00 AM | -விஷ்ணு

ADVERTISEMENT

 

இந்தியாவில் கரோனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி பல உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. மும்பை, தில்லி, சென்னை போன்றவை இந்த நோய்த் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கைக் கூடிக்கொண்டே செல்கிறது. இந்த நோய்க்கு எதிராக நின்று களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களின் பங்கு இன்றியமையாதது. 

"இந்த நேரத்தில் எங்களால் முடிந்தவரை உயிர்களை காக்க வேண்டும்  என்ற கடமை எங்களுக்கு உள்ளது' என்பதை வார்த்தையால் மட்டுமல்ல செயலாலும் செய்து காட்டி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார்கள், தில்லியைச் சேர்ந்த இளம் மருத்துவத் தம்பதிகள் ரஷ்மி மிஸ்ரா- இஷான் ரோஹத்கி.

சமீபத்தில் திருமணமான இந்த இளம் தம்பதிகள் மருத்துவ சேவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

ADVERTISEMENT

இது பற்றி ரஷ்மி மிஸ்ரா முதலில் பேச ஆரம்பிக்கிறார்:

""கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம்  செய்து கொண்டோம். புதிதாகத் திருமணமான நாங்கள் மற்றவரைப் போலவே, தேனிலவு பயணமாக வெளிநாடு செல்லவும் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவழிக்கவும் திட்டமிட்டு இருந்தோம். அந்தத் திட்டங்கள் எதுவும் நிறைவேறாமல் போய்விட்டது காரணம் இந்தக் "கொவைட்' என்ற கொடிய நோய் தான். 

தலைநகர் தில்லியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேலாகக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஆகவே, நானும் இஷானும் இந்த மருத்துவச் சேவையில் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபட்டு வருகிறோம். 

லோக் நாயக் மருத்துவமனையில் பணியாற்றும் எங்களுக்கு அருகிலேயே விருந்தினர் இல்லம் ஒன்றை தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய மனைவி இஷான் மதியம் 3 மணிக்கு பணிக்கு சென்றால் இரவு 9 மணி வரை பணியில் இருப்பார். நான் இரவு 9 மணிக்கு சென்றால் காலை 9 மணி வரை பணியில் இருப்பேன். நான் பணிக்குச் சென்றதும் நோயாளிகளின் நிலை எப்படி உள்ளது? குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் நிலை என்ன? அவர்களின் நிலையை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்று யோசித்து உடனே அதைச் செயல்படுத்திவிடுவேன். குறிப்பாக  சுவாசிக்க போராடி கொண்டு இருப்பவர்களுக்கு சரியான அளவில் உயிர் காக்கும் ஆக்சிஜன் கிடைக்கிறதா என்பதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிப்பேன். மிகவும் சவாலான கால கட்டம் இது. பணி முடிந்து போனாலும் அன்று யாராவது இறக்க நேரிட்டால் அவர்களின் மரண அழுகை கண்களை விட்டு நீங்க மறுக்கிறது. ஆனால் முடிந்தவரை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற போராடத்தான் செய்கிறோம். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு இதர பிரிவில் இருப்பவர்களுக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இனி எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்று எழுதி கொடுத்து அவர்கள் உணவுடன் சரியான முறையில் மருந்தை சாப்பிடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பேன். 

நாங்கள் இருவரும் மருத்துவப்பணி செய்தாலும் ஒரு வித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். காரணம் இருவர் வீட்டிலும் வயதானவர்கள் அதிகம். இஷான் வீட்டில் அவருடைய பெற்றோர் மட்டுமல்ல வயதான பாட்டி-தாத்தா இருக்கிறார்கள். அவர்கள் சரியான வேளையில் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும். அவர்களுக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால் எங்களால் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடையும். இருவரும் பணி முடிந்தவுடன் அப்பா-அம்மாவுடன் விடியோ காலில் பேசுவோம். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் விடியோ கால் மூலம்  வழங்குவோம். நாங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது சந்தோஷமான முறையில்  நேரத்தை செலவிடமாட்டோம். அப்போது இஷான் தன்னுடைய நோயாளிகளின் நிலையைப் பற்றி என்னிடம் சொல்லி வருந்துவார். நானும் பணி நேரத்தில் செய்த விஷயங்கள் என்ன என்பதை அவரிடம் சொல்லி மன ஆறுதலை அடைவோம்.

இந்த நேரத்தில் சவாலான விஷயமாக இருப்பது, மருத்துவர்கள், நர்சுகள் அணியும் "பி.பி.இ. கிட்' எனப்படும் பிளாஸ்டிக் கவச உடையை அணிவது தான். கரோனா தொற்றிலிருந்து  தற்காத்துக்கொள்வதற்காக உதவும் இந்த பி.பி.இ. கிட் உடையைப் பல மணி நேரம் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் வேறுவழியில்லை'' என்கிறார். 

""புதுமணத் தம்பதிகளான எங்களுக்கும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தது. பல நாடுகளில் தேனிலவு செல்ல முன்பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வந்ததும் இருவரும் உடனே பணிக்குத் திரும்பிவிட்டோம். பணி முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாது. அருகிலேயே தான் தங்கி இருக்க வேண்டும். அதனால் கடந்த சில  மாதங்களாகவே நாங்கள் இருவரும் எங்கள் குடும்ப நபர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. விடியோ கால் உரையாடல்கள் மூலம் மட்டுமே பேசி கொள்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறோம். நாங்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாள்கள் நகர்கின்றன'' என்கிறார் இஷான் ரோஹத்கி.

Tags : நெகிழ வைக்கும் மருத்துவத் தம்பதிகள் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT