தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 92: தங்கைக்கு உதவிய நகைச்சுவை நடிகர்! - குமாரி சச்சு

6th Jun 2021 06:00 AM | சலன்

ADVERTISEMENT

 

அவர் தான் தேங்காய் சீனிவாசன்.. அவர் நாடகம் ஒன்றில் தேங்காய் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால் அவர் பெயருடன் தேங்காய்  இணைந்து விட்டது. நாடகத்தில் நடிக்கும் போதே அவரை நான் பார்த்திருக்கிறேன். அவர் சினிமாவிற்கு வந்தவுடன் அவருடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அவர் எனக்கு அப்பாவாகவும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் "அத்தையா? மாமியா?'. 

ஒருமுறை "மீனவ நண்பன்' படப்பிடிப்பில் எம்.ஜி. ஆர்- லதா, வி. கே. ஆர், நம்பியார், நாகேஷ், என பலரும் இருந்தார்கள். இந்த படப்பிடிப்பு நடந்தது மங்களூர் - மணிபால் பகுதிகளில். கதைப்படி தேங்காய் சீனிவாசனின் மகன் நாகேஷ். அவர் என்னைக் காதலிப்பார். நான் ஒரு மீனவப் பெண் வேடத்தில் நடித்தேன். எல்லோரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்தோம். என்னுடன் என் தங்கை சித்ராவும் வந்து இருந்தார். அந்த  ஓட்டலின் உரிமையாளர் உடுப்பியைச் சேர்ந்தவர். அதனால் உணவு பண்டங்களில் எல்லாம் காரம் அதிகமாகவே இருந்தது. எங்களுக்கு இந்தக் காரம் ஒத்துக்கொள்ளவில்லை.

நானும் என்னுடைய தங்கை சித்ராவும் காரத்திற்குப் பயந்து, நாமே சமைப்போமா என்று பேசிக்கொண்டு இருந்தோம். வாசலில் உள்ள பால்கனியில் சமையல் செய்ய முடிவு செய்தோம். 

ADVERTISEMENT

அப்போது சித்ரா "பாத்திரம் எதுவும் இல்லையே' என்று சொன்னாள்.  ஒரே வாரம் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டு இருந்தோம். நாங்கள் சமையலை பற்றிப் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தேங்காய் சீனிவாசன், "என்ன சமையலை பற்றிப் பேச்சு கேட்கிறது' என்று சொல்லிக்கொண்டே எங்கள் அறைக்குள் வந்தார்.  நாங்கள் இருவரும் எங்களது கஷ்டத்தை சொன்னோம்.  அத்துடன்  "எங்களுக்கு மட்டும் அடுப்பு, பாத்திரம் எல்லாம் இருந்தால், நாமே வாசலில் விற்கும் காய்கறிகளை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் சமைக்கலாம்' என்றோம். அதைக் கேட்ட தேங்காய் சீனிவாசன், "நான் இந்த வருடம் சபரிமலைக்குப் போகிறேன். அதனால் வீட்டில் இருந்தே அம்மா அடுப்பு, பாத்திரம் எல்லாம் கொடுத்திருக்கிறார். அதை நானும் கொண்டு வந்து இருக்கிறேன். நான் சமைத்த பின் உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் சமைத்துக் கொள்ளுங்கள்', என்றார். 

தேங்காய் சீனிவாசன் காலையில் எழுந்து குளித்து, சமைத்து முடித்து விட்டு, படப்பிடிப்புக்கு வந்து விடுவார். நானும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவிவேன். சித்ரா காலையில் எழுந்து குளித்து விட்டு, சமைத்து விட்டு எனக்கும் கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் பால்கனியில் சமைப்பதால், எல்லோருக்கும் தெரிந்து விட்டது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு பகலும், இரவும் எங்களது அறைக்கு வந்து, சாப்பிட்டு விட்டுச் சென்றனர். 

அது மட்டுமல்ல,  மெனுவும் கூட கொடுத்து விடுவார்கள். என் தங்கை திணறிப் போய் விட்டாள் . இது எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்டி விட்டது. என்னைக் கூப்பிட்டு "நீங்கள் நடிக்க வந்து இருக்கிறீர்களா, சமைக்க வந்தீர்களா?' என்று கேட்டார். "நான் ஒண்ணும் சமைக்க வில்லை. என் தங்கை சித்ரா தான் சமைக்கிறாள். என் தங்கைக்கு இந்த காரம் ஒத்துக் கொள்ளவில்லை. அவள் தான் சமைத்து எங்களுக்கும் கொடுக்கிறார்', என்று சொன்னவுடன், "இன்று என்ன ஸ்பெஷல்?', என்று கேட்டார். வெஜிடபுள் உப்புமா என்று சொல்லி விட்டு, அவருக்கும் அந்த உப்புமாவை கொடுத்தேன். சாப்பிட்டு பார்த்து விட்டு,  சுவையாய் இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார். தேங்காய் சீனிவாசன் கொடுத்த பாத்திரங்கள், எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சமைக்க உதவியாய் இருந்தது.

தேங்காய் சீனிவாசன் குடும்பம் எனக்கு மிகவும் பழக்கமான குடும்பம். அவருடைய மனைவி, மிகவும் அன்பாகப் பழகுவார். அவருடைய அம்மா மீது அவருக்கு மிகுந்த பற்றும், பாசமும், அதிகம். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். தினமும் படப்பிடிப்பு முடித்தவுடன் வீட்டிற்கு போய், அம்மா தயாராக வைத்திருந்த வெந்நீரில் குளித்து விட்டு, சாமி கும்பிட்டு விட்டுத் தான் மீதமுள்ள வேலைகளைச் செய்வார் தேங்காய் சீனிவாசன். அம்மா தயாராக வைத்திருக்கும் வெந்நீரில் அப்படி என்ன இருக்கும் என்று கேட்டால், ""அதில் வேப்பிலையும், வேறு மூலிகைகளும் இருக்கும்'' என்பார். 

தாயார் மீது தேங்காய் சீனிவாசனுக்கு பயம் கலந்த பக்தி உண்டு. படப்பிடிப்பில் நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டு இருக்கும் போது, எப்பொழுதாவது தேங்காய் சீனிவாசன்  ஒரு மாதிரியான ஜோக் சொல்ல விழையும் போது, நான் "அம்மா' என்று சொன்னால், கப்சிப் என்று அடங்கி விடுவார். "சச்சு இருப்பதைப் பார்க்காமல் பேசி விட்டேன்.  என் அம்மாவிடம் தொலைபேசியில் சொல்லி விடுவார்' என்று சொல்ல வந்ததைச் சொல்லாமல் போய் விடுவார். அந்த அளவிற்கு அம்மா மீது பாசம் அதிகம்.

ஒரு முறை, சிங்கப்பூரில் ஒரு நகைச்சுவை   நாடகம் போட அழைத்திருந்தனர். கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், உசிலைமணி, பெண் நடிகைகளில் நான் மட்டும் தான் அழைக்கப்பட்டேன். தங்கவேலு அண்ணன் அவருடைய நாடகத்தில் இருந்து ஒரு பகுதியை அரைமணி நேர நாடகமாகப் போடத் தயார் செய்திருந்தார்.  நாங்கள் நால்வரும் சென்னையிலேயே ஒத்திகை பார்த்து கொண்டோம். ஆனால் அங்குச் சென்றதும் எல்லாமே மாறி விட்டது.
(தொடரும்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT