தினமணி கொண்டாட்டம்

வானம் ... தொட்டு விடும் தூரமே!

வனராஜன்


வானில் பறப்பது என்பது அற்புதமான அனுபவம் மட்டுமல்ல ஆச்சரியமான அனுபவமும் கூட. எல்லோருக்கும் அந்த மன தைரியம் எளிதில் வந்துவிடாது. ஆனால் வானில் 12 ஆயிரம் முறை ஜம்ப் செய்து சாகசங்களை நிகழ்த்தியிருகிறார் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதான வான்வெளி சாகச வீரர் ராஜ்குமார். 

அவருடைய சாகசப் பயணம் குறித்துப் பேசினோம்:

""என்னுடைய சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம்.  இந்திய கடற்படையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய போது வான் சாகச பயிற்சியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட், ஹாக்கி போன்று உலகளவில் ஆண்டு தோறும் பாரா ஜம்பிங் போட்டிகள் நடக்கும். இது பெரும்பாலும் அமெரிக்காவில் தான் நடக்கும். "உங்களது நாட்டில் இருந்து பங்கேற்கிறார்களா?' என்று நம்முடைய அரசாங்கத்திற்கு முறையாக அழைப்பு விடுப்பார்கள்.

இந்தியா வல்லரசு நாடாக இருந்தாலும் வான்வெளி சாகசத்தில் வீரர்கள் யாரும் இல்லை என்பது மத்திய அரசுக்குத் தெரியவந்தது. உடனே முப்படைகளின் தளபதிகளை அழைத்துப் பேசினார்கள். அவர்களின் ஆலோசனையை ஏற்று முப்படைகளிலும் இருந்து வான்வெளி சாகச படை ஒன்றை உருவாக்க திட்டம் போட்டார்கள். அதன்படி தரைப்படை, கப்பற்படை, விமானப்படையிலிருந்து 300 வீரர்களைத் தேர்வு செய்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் இறுதிப்பட்டியலை முப்படை தலைவர்கள் முடிவு செய்தார்கள். இறுதியாக 6 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் நானும் ஒருவன். 

கலிபோர்னியாவில் 3 மாத பயிற்சி கொடுத்தார்கள். அங்குள்ள பயிற்சியாளரை இந்தியாவுக்கு வரச்சொல்லி விசாகப்பட்டினம், ஹைதாராபாத், போன்ற இடங்களில் பயிற்சியளித்தார்கள்.  அதனைத் தொடர்ந்து 2007 முதல் 2010- ஆம் ஆண்டு வரை நடந்த வான் சாகசகப் போட்டிகளில் இந்தியா சார்பாக நாங்கள் 6 பேரும் பங்கேற்றோம். அதில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டது நான் மட்டுமே. தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு கப்பற்படையில் 15 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றேன். என்னுடைய சக வீரர்கள் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற சென்றுவிட்டார்கள்.  ஆனால் எனக்கு வேறு துறையில் பணியாற்ற விருப்பம் இல்லை.  கற்றுக்கொண்ட கலையை  எளிதில் மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தொடர்ந்து வான்வெளி பயிற்சியில் சொந்த செலவில் ஈடுபட்டேன். தொடர்ந்து 6 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி பயிற்சி பெற்று பயிற்சியாளராக மாறினேன். அவர்களிடம் முறையாக விண்ணப்பித்து உரிமமும் பெற்றேன். நான் மேலிருந்து கீழே குதிக்கும் போது உடன் ஒருவரை சேர்த்து கொண்டு குதிக்கலாம் என்ற உரிமமும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். 

வான் சாகசம் என்பது நாம் புறப்படும் போது விமானத்தில் செல்வோம். விமானம் 12 ஆயிரம் அடியை தாண்டியதும் அங்கிருந்து குதிப்போம். ஐந்தாயிரம் அடியை தொட்டதும் பாராசூட் உதவியுடன் பூமிக்கு வந்துவிடுவோம். 

2016 -ஆம் ஆண்டு வரை வானில் 8 ஆயிரம் ஜம்ப் செய்து சாகசம் செய்தேன். 2018 - ஆம் ஆண்டு பத்தாயிரம் ஜம்ப் முடித்தவுடன் வானில் சாகசம் செய்த முதல் இந்தியர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் பாராட்டின.  

இந்த விஷயம் தெரிந்ததும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசிடம் அர்ஜுனா விருதுக்கு நிகரான "சாகச விருது' கிடைக்கப் பரிந்துரைத்தார். அதனை ஏற்று 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபிரணாப் முகர்ஜி எனக்கு சாகச விருதை வழங்கினார்.

நான் கற்றுக்கொண்ட கலையை இந்தியாவில் இதுவரை நான்காயிரம் நபர்களுக்குக் கற்றுக்கொடுத்து முறையாகப் பயிற்சி அளித்துள்ளேன். 

வான் வெளி சாகசத்தைப் பொருத்தவரை ரிஸ்க்கான விளையாட்டு மட்டுமல்ல அதிகப் பணம் செலவாகும் விளையாட்டும் கூட. 12 ஆயிரம் அடியிலிருந்து குதிப்பதற்கு 25 ஆயிரம் வரை செலவாகும். காரணம் நமக்காக மட்டும் பிரத்யேகமாக ஒரு விமானம் 12 ஆயிரம் அடி வரை பறந்து திரும்பும். 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இன்னும் கூட வான்வெளி சாகசம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. தமிழ்நாட்டில் வான்வெளி சாகசப் பயிற்சி பள்ளி இருந்தால் உலகமே திரும்பி பார்க்கும். அதற்கான முயற்சியில் பல ஆண்டுகளாக இறங்கியிருக்கிறேன். ஆனால் வெற்றி கிட்ட வில்லை. விரைவில் தேனியில்  அந்தப் பள்ளியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். 

கடந்த நவம்பர் மாதம் சிகாகோவில் 150 பேர் இணைந்து 12 ஆயிரம் அடியிலிருந்து குதித்து வானிலேயே கை கோர்த்து வட்டமிட்டோம். இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத  நிகழ்வு. 

வான்வெளி சாகசம் என்பது கஷ்டமான ஒன்று தான்.  விரும்பி வருபவர்களுக்குச் சாதனையுடன் கூடிய சிறப்பான எதிர்காலம் உள்ளது'' என்கிறார் ராஜ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT